| ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! |
|
|
| ஜி.ரி [ஈழம்] | |
| 9. April 2007 01:51 | |
|
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர் ஆயுத முனையில் நிர்வகிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணியுடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டத்தால் மக்கள் எவரும் வெளியில் நடமாடமுடியாத சூழலே நிலவி வருகின்றது. மாதகல் வீதி காங்கேசன்துறை வீதி பலாலி வீதி பருத்தித்துறை வீதி முகமாலை வீதி தீவுகளுக்கான வீதியென குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளும் அரச படைகளின் கடுகளவும் பிசகாத கண்காணிப்பின் கீழேயே உள்ளது. அதுவும் கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வடபோர் முனையில் வெடித்த சமரையடுத்து யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் வலைப்பின்னலான சோதனைக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண நகரம் படைகளின் 24 மணிநேர கூர் விழிப் பார்வையிலேயே இருந்து வருகின்றது. சந்தேகத்திற்கிடமான எவரது நடமாட்டம் இப் பகுதிகளில் இருந்தாலும் கணப் பொழுதில் இராணுவத்தினரின் ஹ உந்துருளி கொமாண்டோக்கள்' ஸ்தலத்தை சுற்றிவளைக்கும் அதீத உஷார் நிலையிலேயே அரச படைகள் குடாநாட்டில் நிலைகொண்டுள்ளன என யாழ். நகரவாசியொருவர் தெரிவித்தார். அதாவது இன்று யாழில் நிலவும் சூழ்நிலைகளின் படி மாலை 6 மணிக்குப் பின்னர் ஹ ஆட்சியாளர்'களைத் தவிர எவரும் ஊசாடக்கூட முடியாது. நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் இரவு வேளைகளில் ஆயுதம் தரித்த கும்பல்கள் எவ்வாறு நடமாடுகின்றன? இந்தக் கும்பல்களின் நடமாட்டம் மாத்திரமன்றி இவற்றின் அடாவடித்தனங்களும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தும் வருகின்றன. மக்கள் நிலைப்பட்ட சமூகம் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் குடாநாட்டின் ஹ துரதிர்ஷ்ட நிர்வாகி'களால் ஒடுக்கப்பட்டும் மக்களின் பாதுகாப்புக்காக பாடுபட்டோர் சுட்டுச் சரிக்கப்பட்டும் சமூகத்தின் முதுகெலும்பு உடைந்துபோயுள்ள நிலையில் இவ்வாறான கொடூரச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்கக் கூட முடியாதவர்களாக யாழ்ப்பாண மக்கள் மாற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் யாழ் மாநகரசபைக்கு சற்று வெளியேயுள்ள பிரதேசமொன்றில் ஊரடங்கு வேளையில் கதவை உடைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் வீடொன்றுக்குள் புகுந்த கும்பலொன்று பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டதுடன் வீட்டிலிருந்த மாணவியை வீட்டின் அறையொன்றுக்குள் இழுத்துச் சென்று மயக்கமுறச் செய்தபின்னர் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் மாணவியின் பெற்றோரை மற்றொரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை யாழ்ப்பாண வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோன்ற இன்னொரு சம்பவம் யாழ் நகருக்குச் சற்று வெளியே இடம்பெற்றதாகவும் இதன்போது ஆயுதக் கும்பலால் ஆசிரியை ஒருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே பாணியிலான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றபொழுதும் அச்சம் காரணமாக எவரும் யாரிடமும் முறையிட முன்வருவதில்லையென கூறப்படுகின்றது. கர்ப்பிணித் தாயிடம் இம்சை இது இவ்வாறிருக்க வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற கும்பல் வீட்டுக்கு நடுவே மலம் கழித்து அசிங்கப்படுத்திய சம்பவமொன்றும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கணவனும் மனைவியும் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற ஆயுதக் கும்பல் கொள்ளையிலீடுபட்டுவிட்டு கணவனை கட்டி வைத்துவிட்டு கர்ப்பிணியாகவுள்ள மனைவியை பாலியல் இம்சை செய்துள்ளது இந்தக் காடையர் கும்பல். இவ்வாறு ஆயுதக் கும்பல்களின் அட்டகாசம் அளவற்றுச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களில் சரளமாகத் தமிழ் கதைக்கக் கூடியவர்களும் இடம்பெற்றிருப்பதாக கும்பலின் அடாவடித்தனங்களுக்குள் அகப்பட்டு செய்வதறியாதுள்ள மக்கள் கூறுகின்றனர். கொள்ளையிடுவது பின்னர் வீட்டிலுள்ள பெண்களை வல்லுறவுக்குட்படுத்துவது என்கின்ற பாணியை தற்பொழுது இந்தக் கும்பல்கள் பின்பற்றி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர். இதேவேளை பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய கொள்ளையர்கள் ஹநடந்ததை இயக்கத்திடம் போய்ச் சொல்லு' எனக் கூறிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் விடயத்தைப் பார்க்கின்றபொழுது அரசியல் பழிவாங்கல் ஒன்று நிகழ்வது புலப்படுவதாகவும் சாதாரண கொள்ளையர்கள் இவ்வாறு சொல்வதற்கு வாய்ப்பில்லையெனவும் குடாநாட்டின் மனித உரிமைகள் குறித்த ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை கேட்டபொழுது; ஹஇந்த நாசகார வேலைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு. இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். படையினரின் உதவியின்றி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பது அனைவரும் அறிந்த விடயம். படையினருக்கு தகவல் கொடுக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஈடுபடும் கும்பலும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள துணை இராணுவக் குழுவும் இச் செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் கண்டிருக்கின்றனர்' என்றார். உண்மையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை சுதந்திரமாக செயற்பட விட்டுவிட்டு தமக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் படையினர் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய கஜேந்திரன் அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு பணத்திற்கு மேலதிகமாக மக்களை மிதிக்கும் சுதந்திரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை கொலை மற்றும் காணாமல்போதல் பற்றிய தகவல்களையே மக்கள் வழங்கி வருவதாகவும் வல்லுறவுச் சம்பவங்கள் உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் முறையிடுவதற்கு அச்சம் காரணமாக முன்வருவதில்லையெனவும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அவலங்களை முறையிட முடியுமெனவும் அவற்றைத் தாம் இரகசியமாக பாதுகாப்பதுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஆதாரபூர்வமாக முறையிடுவதற்கு உதவியாக அமையுமெனவும் குறிப்பிட்டார். (தொலைபேசி:-021 228 5949ஃ தொலை நகல்:- 021 228 5854) மேலும் இலங்கைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையே ஏற்றுக்கொள்ளும் சில சர்வதேச அமைப்புகள் இன்னமும் இருந்துவருவது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இயலுமான வரை மக்கள் ஷ்ரீலங்கா பொலிஸில் அவலங்களைப் பதிவுசெய்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்வது உறுதிப்படுத்துவதற்கு உதவும் என்றார். நிலைமைகள் இவ்வளவு தூரம் பயங்கரமாக உள்ளபோதும் யாழ்ப்பாணத்திலிருந்து எந்தவித எதிர்ப்புக் குரல்களும் இதுவரை எழவில்லை. சில விடயங்கள் சாத்தியப்படாதென தெரிந்தும் - சரிவராதெனப் புரிந்திருந்தும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்து யாழ்ப்பாண மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டி அரச பத்திரிகைகளில் இடம்பிடிப்பவர்கள் இவற்றுக்கெதிராக குரல் கொடுக்கலாமே. வெள்ளைவானில் கடத்தப்படுவோர் தப்பியோடும்போது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். பாதிரியார்கள் உள்ளிட்டோர் காணாமல் போகின்றார்கள். தாக்கப்படுகின்றார்கள். வீடு புகுந்து கொள்ளையடிக்கும் ஆயுதக் கும்பல்கள் பெண்களை குதறிச் செல்கிறது. இவற்றுக்கெதிராக குரல் கொடுக்காமல் மௌனித்திருக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதிநிதிகள்இ மக்கள் கேட்காத - கேட்டும் கிடைக்காத விடயங்களை கோருவது புரியாத புதிராக இருந்து வருவதுடன் வேதனைக்குரியதும் கூட.
நன்றி தினக்குரல் கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





