 குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-5
(இரா.துரைரத்தினம்)
தங்களுக்கு நடந்த குண்டுத்தாக்குதல் பற்றிக் குறிப்பிடும்போது, “அந்த இரவு இந்த நாட்டின் சரித்திரத்தில் மறக்கமுடியாத இருள் சூழ்ந்த ஒரு இரவு” என்று கூறியிருந்தீர்கள். இந்தச் சம்பவம் உங்களுக்கு நேர்ந்ததாலேயே அந்த தினத்தை இவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள். அதேவேளை, தமிழீழத்தின் ஆயிரக்கணக்கான விதவைகளுக்கு தங்களது படைகளினால் இதுபோன்ற “இருள் சூழ்ந்த பல இரவுகள்” ஏற்படுவதற்கு, இந்த நாட்டின் முப்படைகளின் தளபதி என்கின்ற வகையில்; நீங்களே காரணமாயிருந்ததை இலகுவாக மறந்துவிட்டுள்ளீர்கள்.
குமார் பொன்னம்பலம் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற விபரத்தையும், சாந்த, முறட்டுசமன் , ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ ஆகியோர் கொலை செய்யப்பட்ட விபரத்தையும் இந்த இதழில் தெரிவிப்பதாக கூறியிருந்தேன். அதற்கு முதல் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்படுவதற்கு சரியாக 13 நாட்களுக்கு முதல் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எழுதிய மிகமுக்கியமான பகிரங்க கடிதத்தை இங்கு பிரசுரிப்பது அவசியம் என நினைக்கிறேன். 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிக்கா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விடுதலைப்புலிகளை அழிக்கபோவதாகவும் கொழும்பில் இருக்கின்ற புலிகளின் ஆதரவாளர்களை விட்டுவைக்கப்போவதில்லை என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து குமார் பொன்னம்பலம் நீண்ட காரசாரமான பகிரங்க கடிதம் ஒன்றை சந்திரிக்காவுக்கு எழுதினார். அக்கடிதத்தின் சுருக்கத்தினை இங்கு தருகிறேன்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா
ஜனாதிபதி
சிறிலங்கா
23.12.1999
அம்மணி
22.12.99 அன்று தங்களது தேர்தல் வெற்றியையிட்டு உங்களால் மேற்கொள்ளப்பட்ட வெற்றி உரை தொடர்பானது.
ஒரு ஈழத் தமிழன் என்கின்ற hPதியில் நான் இதனை எழுதுகின்றேன். முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவங்கள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஒருவனாகவும் எனது இந்த நிலைப்பாட்டை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளலும்; பகிரங்கமாக தெரிவித்தும்; எழுதியும் வரும் ஒருவன் என்கின்ற வகையிலும் தங்களது உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவன் என்கின்ற hPதியிலும் தங்களுடைய உரையின் ஊடாக அச்சுறுத்தலுக்குள்ளான ஒருவன் என்ற ரீதியிலும் இந்தக் கடிதத்தை நான் எழுதுகின்றேன்.
தங்களது பேச்சில் ”சமாதானம்” என்கின்ற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் அந்தப் பேச்சின் தொனியில் காணப்படவேயில்லை. நட்புக்கான கரத்தை நீட்டும்படி உங்களது “தமிழ் சகோதர சகோதரிகளிடம்”, தங்களது உரையில் கோரியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற “சாம தவளாம” ஆரம்ப நிகழ்வில் பேசிய பேச்சை எவரும் நினைவு மீட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதனைக் கூறியிருப்பது போல் தெரிகின்றது. ”இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு” என்று அந்தக் நிகழ்வில் நீங்கள் உரையாற்றி இருந்தீர்கள்.
தங்களது உரையில், 1999 டிசம்பர் 18ம் திகதி தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் பற்றிக் குறிப்பிடும்போது, “அந்த இரவு இந்த நாட்டின் சரித்திரத்தில் மறக்கமுடியாத இருள் சூழ்ந்த ஒரு இரவு” என்று கூறியிருந்தீர்கள். இந்தச் சம்பவம் உங்களுக்கு நேர்ந்திருந்ததினாலேயே அந்த தினத்தை இவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள். அதேவேளை, தமிழீழத்தின் ஆயிரக்கணக்கான விதவைகளுக்கு தங்களது படைகளினால் இதுபோன்ற “இருள் சூழ்ந்த பல இரவுகள்” ஏற்படுவதற்கு, இந்த நாட்டின் முப்படைகளின் தளபதி என்கின்ற வகையில்; நீங்களே காரணமாயிருந்ததை இலகுவாக மறந்துவிட்டுள்ளீர்கள்.
தங்களது உரையை இந்த நாட்டில் மற்றொரு இரத்த ஆறை ஓட வைப்பதற்கான ஒரு அறைகூவலாகவே பார்க்கவேண்டியிருக்கின்றது.
நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவே விரும்புகின்றீர்கள். அது உங்களால் முடியுமானால், தயவுசெய்து அதனைச் செய்து பாருங்கள்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, எந்த தமிழருமே நீங்கள ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அவர்கள் உங்களை நம்பத்தயாரில்லை என்பதுடன், தங்களிடம் இருந்து எந்தவித அரசியல் தீர்வையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதும் தெரிகின்றது. நிரந்தர சமாதானம் தொடர்பான தங்களது வாய்பேச்சு பற்றிய மக்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தவதாக இது இருக்கின்றது.
நிரந்தரச் சமாதானத்தை கொண்டுவரும் என்று நீங்கள் கூறி உருவாக்குகின்ற பொதி வெளியே வருவதற்கு ஏற்படுகின்ற இழுபறியைப் பார்க்கும் எவருமே, இதை உருவாக்கும் உங்களின் உண்மையான உள்நோக்கம் பற்றி கேள்வி எழுப்பவே செய்வார்கள்.
உங்களது உரையில் ஒரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதாவது, “எதிரிகள் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடித் திரிகிறார்கள்” என்று தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் “எதிரிகள்” என்று உங்களது உரையில் குறிப்பிட்டது தமிழ் மக்களைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களது எண்ணங்களையும், தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளையும் ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொண்டதையிட்டு கடவுளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். உங்களைப் பற்றி தமிழர்கள் நன்றாகப் புரிந்துகொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.
உங்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொள்ள இருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் தோல்வி அடைந்தே தீரும் என்று உங்களது உரையில் குறிப்பிட்டுள்ள நீங்கள், தமிழ் மக்கள் பிரபாகரனை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரியிருந்தீர்கள். பேச்சுவார்த்தை, சமாதானம் என்கின்ற விடயங்களில் நீங்கள் விளையாடிவருகின்ற விளையாட்டு இதன் மூலம் வெளித்தெரிகின்றது. நீங்கள் உண்மையிலேயே விடுதலைப் புலிகளுடன் பேச விரும்புகின்றீர்களா, இல்லையா?
நீங்கள் உண்மையிலேயே விடுதலைப் புலிகளுடன் பேச விரும்பும் ஒருவராக இருந்தால், உங்களது உரையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், சதிகாரர்கள் என்றும், அவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என்றும் கூறியிருப்பது எதிர்மறையான பலனை ஏற்படுத்தக்கூடியது என்பதை நீங்கள் அறியவில்லையா?
“மரண பயங்கரம் நிறைந்த கலாசாரம்” என்று ஒரு வார்த்தைப் பிரயோகத்தை தங்களது உரையில் உபயோகித்திருந்தீர்கள். இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை 1956ம் ஆண்டு ஆடி மாத்தில் அனைவருக்கும் காண்பித்தவர்கள் சிங்களவர்களே என்பதை நாம் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்த கலாசாரம் பற்றி நீங்கள் மற்றவர்களைக் குற்றம்சாட்டும் முன்னர் உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் இதே கலாசாரத்தின் நிழலை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
உங்களது சமாதானப் பொதிகளில் ஏதாவது ஒன்றின் மூலமாக அரசியல் தீர்வொன்னை தமிழ் மக்களுக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை முற்றாகவே மறந்துவிடுங்கள். தமிழ் மக்கள் உங்களிலோ அல்லது நீங்கள் சுமந்து வருகின்ற பொதிகளிலோ எந்தவித ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
குறிப்பாக உங்களால் தானமாகத் தரப்படுகின்ற எதிலுமே தமிழ் மக்கள் ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். சிங்களவர்களிலோ அல்லது அவர்கள் தருகின்ற சலுகைகளிலோ தங்கியிருக்க தமிழ் மக்கள் என்றுமே விரும்பவில்லை. இந்த தீவின் ஒரு பகுதி எப்படி சிங்களவர்களுக்கச் சொந்தமானதோ, அதேபோன்று இந்த தீவின் ஒரு பகுதி தமிழ் மக்களுக்கச் சொந்தமானது. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொள்ளுவதில்தான் தமிழர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர்களால் தானம் செய்யப்படுகின்ற பொதிகளிலிலோ அல்லது பேச்சுவார்த்தை மேசைகளிலிலோ அவர்கள் எந்தவித அக்கறையும் அற்ற நிலையிலேயே இருக்கின்றார்கள். தமிழ் சமூகம் தனது நிலைப்பாட்டை 1985ம் ஆண்டு திம்புக் கோட்பாட்டினு}டாக உலகத்திற்கு தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்திருந்தது. அப்படியிருக்கையில் இனிமேல் பிறக்க இருக்கின்ற தமிழ் சந்ததியினரையும் நெருக்குதலுக்கு ஆளாக்குகின்ற விடயங்களில் தமிழ் மக்கள் வீழ்ந்து விடுவதற்கு தயாரில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் துரோகம் விளைவிப்போரை தமிழ் இளம் சமுதாயம் தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை.
என்னைப்பொறுத்தவரையில் பேச்சுவார்த்தை, மூன்றாம்தரப்பு மத்தியஸ்;தம், போன்ற விடயங்களில் தனிப்பட்ட ரீதியில் நம்பிக்கை அற்று களைப்படைந்த ஒருவனாகவே இருக்கின்றேன். உண்மையிலேயே இந்த தீவில் ஒரு நிரந்தர அமைதி ஏற்படவேண்டுமானால் அது தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தனித்தனியாக தங்கள் தங்களது அலுவல்களைக் கவனித்தபடி வாழ்வதில்தான் தங்கியிருக்கின்றது. உங்களது உரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த சமாதானம் என்கின்ற விடயம் அப்பொழுதுதான் சாத்தியம்.
குமார் பொன்னம்பலம்
23.12.1999
(தொடரும்)
நன்றி
|