| தங்கிடத் தமிழர் நெருக்கடியும் அதன் வழிக்கிளம்பும் இலங்கைத் தமிழர் இருப்புப் பற்றிய சட்டநி |
|
|
| Thinakkural | |
| 10. June 2007 17:39 | |
|
இதனை எழுதும் பொழுது கொழும்பு தெற்கு பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னர் வியாழனன்று வவுனியா கொண்டு செல்லப்பட்ட கொழும்பின் தங்கிடங்களில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் கொழும்புக்கு கொண்டு வந்து இறக்கப்படுகின்றனர்.
பெயர் சுட்டிப் பொறுப்பேற்காத பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கிளப்பியுள்ள பதிற்குறிகள் மிக மிக முக்கியமானவை. இவை யாவற்றுள்ளும் முதன் நிலைப்பட்டு நிற்பது இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஏகமனதான சந்தேகங்கள் எவற்றுக்குமிடைப்பட்ட தீர்ப்பாகும். இலங்கையின் தமிழர்கள் இலங்கையர்கள் என்கின்ற வகையில் இலங்கையில் எப்பகுதியில் வாழ்வதற்கும் உரிமையுடையவர்கள் என்பதை ஆட்சியாப்பு விதிகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உண்மையில், இந்த தீர்ப்பின் வலு தான் மீள் பயணத்துக்கான பாதுகாப்பு நிலை உந்துதலாயிற்று. தென்னிலங்கையில் இது பற்றிக் கிளம்பிய பதிற்குறிகள் இரு நிலைப்பட்டவை ஒரு பகுதியினர் உண்மையான தேசிய நல்லிணக்க உறவின் அடிப்படையில் இச்செயலை கண்டித்தவர்கள். மற்றவர்கள் இந்த தங்கிடத் தமிழர்களை தங்கள் தங்கள் வாழிடங்களுக்கு அனுப்புவதன் மூலம் அப்பிரதேசம் / பிரதேசங்கள் அம் மக்களின் சட்ட பூர்வமான கேள்விக்கப்பாலற்ற வாழிடங்களாகின்றன என்பதாகும். அப்படி தமிழர்களுக்கென ஒரு பிரதேச வாழிடத்தை ஏற்றுக் கொண்டால் இலங்கையில் `ஏக்கிய' அரச நிலை (ஒற்றையாட்சி) உடைந்து போகின்றதை கண்டு மனம் துடித்து இப்படிச் செய்வது பிரபாகரனின் போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்துவதாக அமையும் என்றனர். ஆனால் இவர்களிலும் பார்க்க தமிழ், சிங்கள வாழிடப் பிரிப்பை மனமார எதிர்த்தவர்கள் சிங்கள முற்போக்குவாதிகளே. சிறிதுங்க ஜயசூரிய, தர்மசிறி விக்ரமரட்ண ஆகியோருக்கும் சுனிலா அபயசேகர போன்ற பெண்ணிலைவாத தலைவர்களும் முன்னின்றனர். ஹக்கீமினுடைய மிகுந்த அர்த்தபூர்வமான கண்டிப்பைத் தவிர முஸ்லிம்கள் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு முஸ்லிம்கள் இதுபற்றி கவனம் செலுத்தவில்லை. உண்மையில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட உள்ளூர் நிலையுறவுக்கு அப்பாலே இந்தியா கூட இந்த விடயம் பற்றி தன்னுடைய கணக்குகளை ஆழமாகவே பார்த்துள்ளது போலத் தெரிகின்றது. இந்த எதிரொலிகள் யாவும் முற்று முழுதாக இலங்கை நிலைப்பட்டவையே. வழக்கம் போல ஜனாதிபதி எந்தவித வியப்பையும் காட்டாத வகையில் அலரிமாளிகையில் ஆட்சி செலுத்துகின்றார். இந்த விடயம் பற்றி கிளப்பப்பட வேண்டிய முக்கிய வினாக்களுண்டு. இந்த கட்டளையை பிறப்பித்தவர் யார்? இக்கட்டளை தயாரிக்கப்பட்ட பொழுது இதன் நியாயப்பாடு யாது? இந்த நடைமுறையை நிரந்தர தீர்வாக தீர்மானித்தா அல்லது அதிரடி எதிர்ப்பாடமாக கொள்ளப்பட்டதா? இக்பால் அத்தாஸ் போன்றவர்கள் எழுதும் வரை விடயங்கள் பெரிதாக வெளிவராது. ஆனால் ஒன்று ஜனாதிபதி அவர்கள் காட்டிக் கொள்கின்றளவுக்கு அதிகம் தெரியாமலில்லை. ஆனால் இந்த ஜனாதிபதியைப் பற்றிய பாரிய நியாயமான விமர்சனம் என்னவென்றால் ஆட்சி யாப்பு நிலைப்பட்ட ஒரு மிகப்பாரிய விசயத்தை படையினர் துச்சமாக கணித்து தொழிற்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். ஏறத்தாழ கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் தமிழர்களை அடித்தும் துன்புறுத்தியும் சில கஷ்டங்களுக்கு உள்ளாக்கியும் வந்துள்ளனர். எனினும் அவர்கள் மேற்கொண்ட சேவைக்காக சட்டப்படி கண்டிக்கப்படாதவர்களாகவிருந்தனர். பிந்துனுவெவ வழக்கில் உயர் நீதிமன்றம் கஷ்டங்களை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்கியது. ஆனால் மேன்முறையீட்டில் அரச படையினர் இதற்குப் பொறுப்பானவர்களல்ல என்ற தீர்மானம் வழங்கப்பட்டது. அந்தப் பின்புலத்திலே தான் இப்பொழுது படையினர் தமது உத்தியோகத் தேவைக்காக எதையும் எவரையும் எதுவும் செய்யலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இதில் பல சட்டக் குறைபாடுகளிலிருந்தும் பிரதிவாதிக்காரர்களுடைய உத்தியோகங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் இப்படியான முறைப்பாடுகள் போனாலும் ஜனாதிபதி அருகிலேயுள்ளவரைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்கிறாராம். உடனடியாக விசாரணைக்கான ஆணைக் குழுவையும் நியமிக்கின்றாராம். தமிழ் மக்கள் திரு.ராஜபக்ஷவிடமிருந்து எதிர்பார்த்த `யதார்த்தபூர்வ சிங்களத் தலைவர்' என்ற எதிர்பார்ப்புக்கு என்னாகின்றது? ஜே.வி.பி.யும் ஹெல உறுமயவும் இதனை கண்டித்துள்ளதால் ஒளிவுமறைவற்ற ரணவிரு புகழ்ச்சிப் புராண படலத்துக்குள் இறங்கவில்லை. உண்மையில் படைவீரர் பற்றிய புகழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஆபத்து இதுவாகும். தென்னாசியாவில், ஒன்றில் படையினர் அரசியல் முக்கியத்துவம் பெறார். அல்லது படையினர் அரசியற் போக்கை தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படுவர். அப்படியானதற்கு அரசியல் அபிலாஷைகள் கொண்ட ஒரு இராணுவ தலைவர் வேண்டும். பாகிஸ்தானில் இது தான் நடைபெறுகின்றது. ஆனால் இலங்கையிலோ ஏறத்தாழ 40 வயதினருக்கு கீழேயுள்ள சிங்கள, தமிழர்கள் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைமை காரணமாக அரச அதிகாரங்களை பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது. சிங்களத்தில் இதனை நிலதாரிவாதம் என்பார்கள். (உத்தியோகத்தர் ஆட்சி) தங்கிட விவகாரத்தில் பெயர் சொல்ல விரும்பாத தலைமை உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைமை அதிகாரிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் எடுத்த மிகக் கண்டிப்பான நிலைமையே இன்று எம்மை காப்பாற்றியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் எதிர்ப்புகள் எழும்பவில்லையென்பதல்ல. அதுவும் தமிழர் பக்க நியாயப்பாட்டை பாராளுமன்றத்திலே வலுவாகவே எடுத்துக் காட்டினர். ஆனால், கிடைத்த பயன் யாது? ஒன்றுமே நடைபெறப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகள் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் கண்டியின் உயர் பௌத்தபீட பிக்குகளை கண்டு பேசியிருக்கிறார்கள். தங்கிட விவகாரம் பற்றி எந்தவொரு உயர் மதநிலை பிக்குவும் எதுவும் கூறியதாக இதுவரை செய்திகள் வெளிவரவில்லை. இந்த இடம் தான் சற்று திகிலை ஏற்படுத்துகின்றது. வட கிழக்குக்கு வெளியே இப்படியான தமிழ் விரோத நடவடிக்கைகளை வருகின்ற பொழுது அவற்றுக்கான அரசியல் எதிர்ப்பை எப்படி எந்தளவுக்கு பயன்படுத்துவது என்பது முக்கிய பிரச்சினையாகின்றது. யார் இதனைச் செய்வது? இந்த விடயம் பற்றி சிந்திக்கும் பொழுது மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் நிலைப்பாடுகள் நிச்சயமாக நமது கவனத்தை ஈர்க்கின்றது. அண்மையில் நடைபெற்று வரும் கடத்தப்பட்டோர், காணப்படாதோர் விடயமாகவும் இந்த விடயம் சம்பந்தமாகவும் மனோகணேசன் உடனடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அதற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால், இந்த நடவடிக்கைகளில் வினைத்திறன் வலு (Effectiveness) என்பது எந்தளவுக்குள்ளது என்பது பற்றி மனோகணேசன் அவர்கள் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. உண்மையில் கொழும்பை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு பயச்சூழலிலேயே வாழ்கின்றார்கள். பயச்சூழல் என்று வரும்போது ஒவ்வொருவரும் தங்களை தனிப்பட்டவர்களாகவே பார்ப்பார்கள். சிங்கள ஊடகங்களுள்ள நிலையில் சற்று உன்னிப்பாக தமிழ் நிலைப்பாட்டை காட்டினால் அதனை பயங்கரவாதமென காட்ட நிச்சயமாக முனைவார்கள். இப்படியான சூழலில் வட கிழக்கிற்கு வெளியே குறிப்பாக கொழும்பிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு சிங்கள இடதுசாரிச் சக்திகள் உதவக் கூடியனவாகவுள்ளன. இடதுசாரிச் சக்திகள் என்று கூறும்போது துரதிஷ்டவசமாக மரபு வழிப்பட்ட பொதுவுடமை கட்சிகளையோ சமசமாஜக் கட்சியையோ கூறி விட முடியாது. நவ சமசமாஜக் கட்சியின் சிறிதுங்க ஜயசூரிய போன்றவர்களையே கூறமுடியும். இது பற்றி சிந்தித்து இணைப்புகளை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். இதிலுள்ள இன்னோரன்ன சோகம் என்னவென்றால் தமிழர் நிலைப்பாட்டை தமிழர் நிலைப்பட எடுத்து உலக நாடுகளுக்குக் கூறுவதற்கானதொரு அமைப்பு நம்மிடையே இல்லை. புகலிடத் தமிழர்கள் சிரத்தை காட்டினால்த் தான் உண்டு. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





