22. November 2008 03:36
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
11. October 2008 23:48
4. October 2008 12:47
13. October 2008 13:01
15. October 2008 12:52
ரணில் - மங்கள கூட்டணியால் ஆட்சியை மாற்ற முடியுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சத்தியன்   
29. July 2007 15:29

ranil-mangla.jpgஇலங்கையில் பிரதான எதிர்க் கட்சிகளும், ஆளும் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதன் பலாபலன்களை ஆராய்வதில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன. முரண்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் பெருமளவுக்கு அமைதியாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. தமது பலத்தை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணிகளின் மூலம் யாருக்கு அதிகளவு செல்வாக்கு இருக்கின்றது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதிக்கப்படும் முக்கிய விடயமாகியிருக்கின்றது. தென்னிலங்கையின் எதிர்கால அரசியல் போக்கு எவ்வாறு அமையும் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சமிஞஞையை இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் வெளிப்படுத்தியிருப்பதாகக் கருதலாம்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பலவீனமே அரசின் பலமாக இருந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், அதிகரித்துவரும் ஊழல்கள் என பல நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த போதிலும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்டிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக்கூடிய நிலையில் ஐ.தே.க. தலைமை இருக்கவில்லை. கட்சிக்குள் காணப்பட்ட உட்பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே கட்சித் தலைமையின் கவனம் முழுமையாக இருந்தமையால் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கேற்றவாறு கட்சித் தொண்டர்களை வழிநடத்தும் நிலையில் கட்சித் தலைமை இருக்கவில்லை. கட்சியின் தலைமைப் பதவியைப் பாதுகாத்துக்கொண்டால் போதும் என்ற நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருட காலமாக இருக்கின்றார் எனக் கூறுவதில் தவறிருக்காது.

கட்சியின் பிரதித் தலைவராக இருந்த கரு ஜயசூரிய தலைமையில் அதிருப்தியாளர் குழு ஒன்று ஐ.தே.க.வை விட்டுப் பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட போது இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்தது. கட்சிக்குள் புனரமைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற குரல் மேலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே ரணிலுக்கு நேரம் சரியாக இருந்தது. அதேவேளையில், ஐ.தே.க. அதிருப்தியாளர்களின் ஆதரவுடன் அரசாங்கமும் பலம் பெற்றிருந்தமையால் அதனைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் அர்த்தமற்றவையாகத்தான் இருக்கும் என்பதையும் ரணில் உணர்ந்திருந்தார். பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற்று அரசைக் கவிழ்க்கப்போவதாக அவர் கூறிவந்தாலும், அதற்கான எந்தவிதமான நகர்வையும் முன்னெடுக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை.


ranil-mangla.jpg

இருந்தபோதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்களான மங்கள சமரவீரவும், சிறிபதி சூரியாராட்சியும் அமைச்சர் பதவிகளைத் துறந்துவிட்டு வெளியேவந்து புதிய கட்சியை அமைத்தது ரணில் விக்கிரமசிங்கவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது எனக் கூறலாம். புதிய கட்சியை அமைத்த அவர்கள், அரசுக்கு எதிரான பலத்தை வெளிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட நிலையில்தான் ரணில் - மங்கள புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்தவாரத்தில் கைச்சாத்திடப்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் தடுமாறிக்கொண்டிருந்த ரணிலுக்கு இது மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் தமது பலத்தைக் காட்டலாம் என அவர் கணக்குப்போட்டார்.

அதேவேளையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுப்பதில் கூட, மங்கள - சிறிபதி குழுவினர் எடுத்துக்கொடுத்த விடயங்களைத்தான் ரணில் பயன்படுத்துகின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது, மகிந்த - புலிகள் உடன்படிக்கை மகிந்த புலிகளுக்கு பணம் கொடுத்தார். மகிந்த சகோதரர்களின் ஆதிக்கம், அதிகார பீடத்தில் அதிகரித்துவரும் ஊழல்கள் போன்ற மங்கள சிறிபதி குழுவினர் பயன்படுத்திய ஆயுதங்களைத்தான் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது மகிந்தவுக்கு எதிராகப் பயன்படுத்திவருகின்றார். உண்மையில் மங்கள குழுவினர் அரசிலிருந்து பிரிந்தமையும், ஐ.தே.க.வுடன் அவர்கள் செய்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையும்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் புத்துயிர் கொடுப்பதாக அமைந்தது.

ஆனால், இப்போதுள்ள கேள்வி என்னவென்றால் இந்தக் கூட்டணியால் எதனைச் சாதிக்க முடியும் என்பதுதான்.

இவ்வருட இறுதிக்குள் அரசாங்கத்தைக் கவிழ்த்து, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக வியாழக்கிழமை நடைபெற்ற 'மக்கள் அலை' என்ற பேரணியின் முடிவில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூழுரைத்திருக்கின்றார். சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர்களான மங்கள சமரவீர மற்றும் சிறிபதி சூரியாராட்சி ஆகியோரும் இதே கருத்தைத்தான் தெரிவித்து வருகின்றார்கள். இவ்விரு கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இவர்கள் செயற்படப் போகின்றார்கள் என்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கின்றது. அதாவது, தாம் ஆட்சிக்கு வந்தால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்கும் அதேவேளையில், மங்கள சமரவீர துணைப் பிரதமராகச் செயற்படுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க. முக்கியஸ்த்தர்கள் சிலருக்கு இது அதிருப்தியளித்திருப்பதாகவும் சில தகவல்கள் உள்ளன.

ஆனால், ஆட்சியை மாற்றி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் இவர்களது நோக்கம் அல்லது இலக்கு என்பது தெளிவு. ஆதற்கான கால வரையறை ஒன்றையும் கூட இவர்கள் இப்போது முன்வைத்திருக்கின்றார்கள். இந்தக் காலவரையறைக்குள் தமது இலக்கை அடைவதற்கு இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இப்போது எழும் கேள்வி! அல்லது அரசாங்கத் தரப்பினர் கேலியாகக் கூறுவதைப் போல இவ்வாறான காவ வரையறைகளை நிர்ணயிப்பது ரணிலின் வழமைதான் என்று அதனையிட்டுக் கவலைப்படாமலிருந்துவிட முடியுமா?

முன்னர் இதுபோல அரசைக் கவிழ்ப்பதற்கான கால வரையறைகறை ரணில் நிர்ணயிப்பதற்கும் இப்போது அவர் நிர்ணயித்திருப்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. இதுவரையில் தனியாக நின்றுகொண்டே இவ்வாறான பிரகடனங்களை அவர் முன்வைத்தார். இப்போது, பக்கத் துணையாக மங்கள சமரவீர தலைமையிலான அணியையும் வைத்துக்கொண்டுதான் இந்தப் பிரகடனத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார். ஆக, இப்போது அவர் வெளியிட்டிருக்கும்; பிரகடனத்துக்கு ஒரு கனம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்ட முற்படுகின்றார்.

அவ்வாறு வைத்துக்கொண்டாலும் அரசைக் கவிழ்ப்பதற்கு இவர்களிடமுள்ள உபாயம்தான் என்ன?

குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறாது எனவும், அடுத்த பொதுத் தேர்தல் 2010 ஆம் ஆண்டும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2011 ஆம் ஆண்டிலும்தான் நடத்தப்படும் எனவும் அரசாங்கம் திட்டவட்டமாகக்கூறியிருக்கும் நிலையில் அரசைக் கவிழ்ப்பதற்கு ரணிலிடம் என்ன உபாயம் இருக்கின்றது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுகின்றது.

வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் அலை அரசுக்கு எதிரான முதலாவது போராட்டம் என அவர் கூறுகின்றார். இவ்வாறான போராட்டங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வரையில் தொடரும் எனவும் அவர் எச்சரிக்கின்றார். பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மங்கள மற்றும் சிறிபதியின் ஆதரவு மட்டும் போதாது. அதற்கு மேலும் சில எம்.பி.க்களைக் கட்சி மாறச் செய்வது அவசியமானதாகும். மங்களவுக்கு பிரதிப் பிரதமர் பதவியைத் தருவதாகக் கூறியிருப்பதன் மூலம் ஆளும் கட்சியிலுள்ள மேலும் சில அதிருப்தியாளர்களைத் தமது பக்கத்துக்கு இழுப்பதற்கு ரணில் முற்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. இ.தொ.கா மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன அரசிலிருந்து விலகி ரணிலின் அணியுடன் இணைந்துகொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. ரணில் அரசை அமைத்துக்கொண்ட பின்னர்தான் அவர்கள் கட்சி மாறுவார்கள். ஆக, பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவது ரணிலுக்குச் சாத்தியமாகப் போவதில்லை.

மக்கள் அலையின் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்பதும் சாத்தியமானதல்ல. வியாழக்கிழமை கணிசமான தொகையினர் இந்த மக்கள் அலை பேரணிக்குத் திரண்ட போதிலும், ஐ.தே.க. எதிர்பார்த்தளவு அலை வீசவில்லை என்பது உண்மை. ஐந்து லட்சம் மக்களாவது திரள்வார்கள் என ஐ.தே.க. எதிர்பார்த்த போதும் சுமார் ஒரு லட்சம் பேர்தான் மக்கள் அலையில் திரண்டார்கள். அதேவேளையில், மக்கள் ஆதரவைத் திரட்டி – மக்கள் போராட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றக்கூடியளவுக்கு ஆளுமையைக் கொண்டவராகவும் ரணில் இல்லை. அவ்வாறான ஒரு ஆளுமை அவரிடம் இருக்குமாயின் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போதே அவர் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்க முடியும்.

ஆக, எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் சிறிய சலசலப்பை ஏற்படுத்துமே தவிர அரசியல் களத்தில் பெரிய மாற்றங்கள் எதனையும் அவை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே உண்மையாகும்.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >