| மகிந்தவுக்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள் |
|
|
| கொழும்பு நிருபர் சத்தியன் | |
| 11. August 2007 23:34 | |
|
அரசாங்கத்தின் அதீதமான யுத்த முனைப்பும், இனவாதக் கண்ணோட்டத்துடனான அதன் அணுகுமுறைகளும்தான் சர்வதேச சமூகத்தின் முன்பாக அதனைக் குற்றவாழிக் கூண்டில் நிறுத்தியிருக்கின்றது. இருந்தபோதிலும், இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எவ்வாறான அணுகுமுறையை அரசாங்கம் கையாளப் போகின்றது என்பதுதான் இப்போது கேள்விக்குறியாகவுள்ளது. அரசாங்கத்திடம் இவ்விடயத்தில் இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று - சர்வதேசத்திலிருந்து வரக் கூடிய கண்டனங்களை மறுதலிப்பதுடன் நின்றுவிடலாம். அல்லது, இன நெருக்கடி மற்றும் சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பிலான தன்னுடைய அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ளலாம். இதில் எதனைத் தெரிவு செய்வதென்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதென்பது சிங்களவர்கள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் மத்தியில் தமது செல்வாக்கைப் பாதிக்கும் என்பது அரசுக்குத் தெரியும். அத்துடன் அது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு கௌரவப் பிரச்சினையும் கூட. இந்த நிலையில், சர்வதேச சமூகத்திடமிருந்து எழக் கூடிய கண்டனங்களை மறுதலிப்பதென்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன், அரசைக் கவிழ்ப்பதற்கு ஐ.தே.க. விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து மேற்கொள்ளும் சதி முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது எனக் கூறிக்கொள்வதன் மூலம் இனவாதிகள் மத்தியில் தனது செல்வாக்கை சற்று அதிகரித்துக்கொள்ளும் உபாயத்தையும் அரசு கையள முற்படுகின்றது. இருந்த போதிலும், சர்வசே ரீதியாக அரசுக்கு இது பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இலங்கையில் காணப்படும் நான்கு பிரச்சினைககள் தொடர்பாகவே சர்வதேச சமூகமும், மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. 1. அதிகரித்துவரும் மனிதப் படுகொலைகள், கடத்தல்கள் என்பன. இவற்றில் ஆயுதப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுகள் என்பன சம்பந்தப்பட்டுள்ளமை. இது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களை மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற அமைப்புக்கள் பலவும் பெற்றிருக்கின்றன. 2. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கருணா குழு உட்பட துணை இராணுவக் குழுக்கள் ஆயுத பாணிகளாக நடமாடுவதால் உருவாகியிருக்கும் பிரச்சினைகள். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இவர்கள் பகிரங்கமாகச் செயற்படுவது, சட்டத்தை தமது கரங்களில் எடுத்திருப்பது தொடர்பிலான தகவல்களை இந்த அமைப்புக்கள் பெற்றிருக்கின்றன. 3. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் போதிய நிவாரணங்களோ, அடிப்படை வசதிகளோ இல்லாத நிலைமையில் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலைமை. இராணுவக் கெடுபிடிகளால் இவர்களுக்குத் தேவையான உதவிகள் போதியளவுக்குச் சென்றடைய முடியாத நிலை. 4. பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் கெடுபிடிகள். குறிப்பாக கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்தவர்களை பலவந்தமாக வடபகுதிக்கு அனுப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை பெருமளவுக்கு சர்வதேசக் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. முற்றுமுழுதாக இனவாத சிந்தனையுடனும், யுத்த முனைப்புக்களுடனும் சிந்தித்துச் செயற்பட்டு வரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நான்கு விடயங்களில் எதனையுமே கட்டுப்படுத்த முனையவில்லை. ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாக் கட்சிகளின் ஆதரவில் தனது 'இருப்பை' உறுதிப்படுத்திக்கொண்டுள்ள மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இந்த நிலைமைகளைத் தணிப்பதற்காக எதனையாவது செய்யும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்லத்தான். இந்தப் பின்னணியில்தான் சர்வதேச சமூகத்தின் தலையீடுகள் இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவவின் நியூயாயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது என்பது உண்மை. "போருக்கு மீளலும் மனித உரிமை மீறல்களும்" என்னும் தலைப்பில் 129 பக்கங்களில் அவ் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காலநேர புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களில் அரச படைகளும், துணைக் குழுக்களும் எந்தளவுக்குச் சம்பந்தப்பட்டுள்ளன என்பதும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ அரசாங்கம் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தை ஹியுமன் ரைட் வோஜ்இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல்கள் சிலவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், அரசின் மீதுதான் தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. இவற்றைச் சுட்டிக்காட்டி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நடவடிக்கைகள், போக்குகளில் மாற்றம் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இதனை வலியுறுத்தி ஐ.நா. சபையில் கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டு வர முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன் வழியில் ஐ.நா.வின் உத்தியோகபூர்வ மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஒன்றை இலங்கையில் நிறுவவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஹியுமன் ரைட் வோஜ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சிபாரிசு செய்திருக்கிறது. அரசாங்கத்துக்குச் சர்வதேச ரீதியல் நெருக்கடியான – சங்கடமான ஒரு நிலைமையை இது ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் திட்டவட்டமாக மறுதலித்தது. அரசுக்கு எதிரான சர்வதேசச் சதியின் ஒரு பகுதிதான் இது எனக் குறிப்பிட்டு உள்நாட்டில் மக்களின் அனுதாபத்தைத் தேடிக்கொள்ள அரசு முயன்றது. அதேவேளையில், இனவாதக் கட்சிகளும் ஹியூமன் ரைட் வோஜ் அமைப்பின் மீது தமது சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் நிகழ்த்திய உரை இலங்கை அரசியலில் ஒரு பெரும் புகம்பத்தைக் கிழப்பியது. அவர் தனது உரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டார். அல்லது இரண்டு எச்சரிக்கைகளை விடுத்தார் எனக் கூறலாம். 1. வடபகுதியில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் கம்போடியா, ருவாண்டா அல்லது கொசோவோ போன்ற நிலைமைக்கு இலங்கை சென்றுவிடலாம் என்பது அவரது முதலாவது எச்சரிக்கையாகும். 2. இவ்வாறு நிலைமைகள் மோசமடையும் போது அந்த நாடுகளில் சர்வதேச சமூகம் தலையிட்டது போல இலங்கையிலும் தலையிடும் நிலை உள்ளது. இது மனிதாபிமான ரீதியில் தலையிடுதல் எனக் கூறப்படலாம் என்பது அவரது இரண்டாவது எச்சரிக்கை. இந்த இரண்டாவது எச்சரிக்iகாபன் அரசாங்கத்தினதும், இனவாத அமைப்புக்களினதும் சீற்றத்துக்குக் காரணமாகும். ஒரு நாட்டின் விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஒரு பொதுவான கொள்கையாக இருக்கின்ற போதிலும், இந்தக் கருத்து 1990 களின் பின்னர் மாற்றமடைந்திருக்கின்றது. தீவிரமான மனித உரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஒரு நாட்டில் காணப்படும் நிலையில் - அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனில், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தலையீட்டை மேற்கொள்ள முடியும். அண்மைக் காலத்தில் உருவான இந்தக் கருத்து சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது ரைட் ரூ பிரவென்ஷன் அதாவது மனிதாபிமான ரீதியில் தலையிடுவதற்கான உரிமை எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆர் ரு.பி. எனச் சுருக்கமாகக் கருதப்படும் நிலைமையிலேயே இலங்கை இருக்கின்றது என அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தது இனவாதிகளுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லைத்தான். ஆனால், அந்த நிலைமையின் யதார்த்தத்தை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில், நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வெளிப்படுத்திய கருத்துக்களும் அரசாங்கத்தைப் பெரும் சங்கடமான நிலைமைக்குத் தள்ளிவிட்டுள்ளது. இவரது விஜயத்தின் போது, ஊடகவியலாளர்களின் சந்திப்பைத் தவிர்க்க அரசு முயன்றது. அத்துடன் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு அவர் விரும்பிய போதிலும், பாதுகாப்பைக் காரணம் காட்டி அதற்கான அனுமதியை அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்றுவந்த பின்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களால் அரசாங்கம் அதிர்ந்து போய் நிற்கின்றது. மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடங்களிலொன்றாக இலங்கை இருப்பதாகத் தெரிவித்த அவர், மூதூர் தன்னர்வத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார். இது பற்றிய விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கருணா குழுவிடமிருந்து ஆயுதங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இவரது கருத்துக்களையும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மறுத்திருக்கின்றது. ஐ.நா. பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளது எனவும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரநாயக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார்.ஆக, சர்வதேச சமூகம் தெரிவிக்கும் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ள அரசு தயாராகவில்லை என்பதைத்தான் அரசின் அணுகுமுறை காட்டுகின்றது. அனைத்தையும் மறுதலிக்கும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு சர்வதேச சமூகத்துக்கு எரிச்சலைக் கொடுப்பதாக இருக்கும் என்பது உண்மைதான். சர்வதேச சமூகத்தின் முன்பாக அரசாங்கத்தை அம்பலமாக்குவதற்கு இது உதவியிருக்கின்றது. இருந்தபோதிலும், இதன் மூலம் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை ஏற்றுக்கொள்வதற்கோ, எம்மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவோ சர்வதேச சமூகம் முன்வருமா? மகிந்த அரசை தம்து நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவதற்காக இவ்வாறான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பயன்படுத்தலாம். ஆனால், அது ஈழத் தமிழர்களுக்குச் சார்பானது எனக் கருத முடியாது. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






