| "நீங்கள் போன பின்னர் நாங்கள் மீண்டும் தாக்கப்படுவோம்' |
|
|
| பி.ரவிவர்மன் | |
| 11. September 2007 04:08 | |
"இன்னும் சிறிதுநேரத்தில் நீங்கள் எல்லோரும் இங்கிருந்து போய்விடுவீர்கள் உங்களிடம் உண்மையைக் கூறியதற்காக நாங்கள் மீண்டும் தாக்கப்படலாம். வலியும், வேதனையும் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுவதைத்தவிர எம்மால் வேறென்னதான் செய்ய முடியும்' என்றார் பூசா தடுப்பு முகாமில் கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு குழந்தைகளின் தந்தையான 33 வயதையுடைய தமிழ் இளைஞர் ஒருவர். "வியாழக்கிழமை என் மீதான விசாரணைகள் நடைபெற்றபோது நான் கடுமையாக தாக்கப்பட்டேன். உங்கள் முன்பாக நிற்கும் இந்த புலனாய்வுத்துறை அதிகாரிதான் என்னைத் தாக்கியவர்" என்றும் அந்த இளைஞர் கண்ணீர்மல்க சுட்டிக்காட்டினார். கடத்தல், காணாமல் போதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களான அமைச்சர் ராஜித சேனாரட்ண, பிரதியமைச்சர்களான பி.இராதாகிருஷ்ணன், கே.ஏ.பாயிஸ் ஆகியோரடங்கிய குழுவினரும், குற்றப்புலனாய்வுப் பணியக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பிரதிப்பொலிஸ் மா அதிபர் முனசிங்க உட்பட ஊடகவியலாளர்களும் கடந்த வெள்ளிக்கிழமை பூசா தடுப்பு முகாமிற்குச் சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேரடியாகச் சந்தித்தபோதே அவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் அறியமுடிந்தது. பூசா தடுப்பு முகாமில் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது அவர்கள் எதிர்கொண்டு வரும் வெளியுலகிற்கு தெரியாத பல்வேறு பிரச்சினைகளையும் அவர்களின் வேதனைகளையும் அறியக்கூடியதாகவிருந்தது.
பூசா தடுப்பு முகாமில் தற்போது மொத்தமாக 118 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டுப்பேர் பெண்களாவார். இதில் ஆறுவயதையுடைய பெண் குழந்தையொன்றும் தனது தாயாருடன் உள்ளார்.
இவர்களில் பலர் ஒருவருடகாலத்திற்கும் மேலாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் சிறைக்கம்பிகளுக்குள் மத்தியில் தமது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையகாலங்களில் பொலிஸாரினாலும், படையினராலும் கைது செய்யப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்ட 39 பேர் தனியான பிரிவொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட 39 பேரும் இருவர் மூவரென்று தனிமைப்படுத்தப்பட்டு தனித்தனியான அறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இவர்களை அடிக்கடி விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைகளின்போது தாம் கடுமையாக தாக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கைதிகள் சிலர் அச்சமின்றி தெரிவித்ததுடன், அவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடும் பொலிஸாரையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். நேற்றும் (வியாழக்கிழமை) என் மீதான விசாரணை இடம்பெற்றபோது நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன் என்று தனது கை, முதுகு என்பவற்றை ஒரு தமிழ் இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களிடம் காட்டியது மாத்திரமின்றி அவரைத்தாக்கிய பொலிஸ் அதிகாரியையும் காட்டினார். ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? இவர் சொல்வது உண்மையா என்று அந்த பொலிஸ் அதிகாரியிடம் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார்?
அதற்கு அவர் சிரித்தவாறே, விசாரணைகளின்போது ஒன்றுக்குப்பின் ஒன்றாக முரண்பட்ட பதில்களை அளிப்பதாலேயே சில வேளைகளில் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டியிருக்கின்றது என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைதிகளையும் காண்பித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதிலேயே அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட்டனர். விசாரணைகளின்போது பொலிஸ் அதிகாரிகளின் அடி,உதை போன்ற சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாத வேதனைக்கு மத்தியிலேயே தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டுள்ளதாக அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
அத்துடன், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிங்களம் புரியாததாலும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாததாலும் விசாரணைகளின்போது பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்ளப்படுவதாகவும் முறையிடப்பட்டது. கிண்ணியாப் பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தந்தையான 56 வயதையுடைய முஹமட் கரீம் என்ற ஒரு முஸ்லிம் வயோதிபரும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நீங்கள் பொருட்கள் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் உண்மையா என்று அவரிடம் கேட்டபோது, கிண்ணியாவின் எல்லைப்பிரதேசத்திலேயே எமது முஸ்லிம் கிராமம் உள்ளது. அது அப்போது அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அவர்கள் சொல்வதை செய்யாவிட்டால் நாம் அங்கு எமது குடும்பத்துடன் வாழமுடியாது. அது போல் நாம் பயணம் செய்யும் பல இராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன. அங்கு கடமையில் இருப்பவர்கள் கேட்டும் உதவிகளையும் செய்துள்ளோம் என்றார் அவர். இருதரப்பினருக்கும் கட்டாயத்தின் பேரிலேயே நாம் உதவி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்று எனது குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக நான் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் என்றார் கண்ணீர்மல்கியபடி. இவ்வாறே பொலிஸ் பதிவில்லையென்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, நீர்கொழும்பு, புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்களும் வௌ;வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி என்ற விலாசத்தைக் கொண்ட அடையாள அட்டையை வைத்திருந்தமைக்காக கொழும்பு முகத்துவாரம் பொலிஸாரால், தான் கைதுசெய்யப்பட்டு இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் பெரியண்ணன் நாகேஸ்வரன் என்ற தமிழ் இளைஞர். இரண்டு கையடக்க தொலைபேசிகளை பாவித்தமைக்காக கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார் இன்னுமொரு தமிழ் இளைஞர்.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் அங்கு தற்போது தோன்றியுள்ள நெருக்கடியான சூழ்நிலை காரணமாக மொனராகலை பிரதேசத்திற்கு வந்து மேசன் தொழில் செய்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எம்மை அடையாளப்படுத்தக் கூடிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து மொனராகலை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்துவிட்டு மேசன் தொழில் செய்து கொண்டிருந்த வேளையில் சுற்றிவளைப்பு தேடுதலின் போது தானும் தனது மைத்துனரும் கைது செய்யப்பட்டதாகவும் திருமணம் முடித்த தமக்கு ந்தைகள் உள்ளதாகவும் எந்தவொரு வருமானமுமின்றி தமது குடும்பம் வறுமை நிலையிலுள்ளதாகவும் கூறினார் செங்கலடி இளைஞர். விடுதலைப்புலிகளின் ஒலி, ஒளி நாடாக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் காரைநகர் தர்மலிங்கம் புஸ்பராஜா இப்படிக் கூறுகிறார், "சமாதான காலத்தில் ஏ-9 வீதியால் பயணம் செய்த பெரும்பாலானவர்களுக்கு அது விற்பனை செய்யப்பட்டது. அப்படியானால் சமாதான காலத்தில் ஏ-9 வீதியால் பயணம் செய்த அனைவரையும் அல்லவா கைது செய்ய வேண்டும்" என்றார். குறிப்பிட்ட 39 பேர் மட்டும் தொடர்ந்தும் விசாரணைகளுக்காக தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் இரண்டு பெரிய மண்டபங்களில் ஒன்றாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகமானோர் திருமணம் முடித்தவர்களாவர். தமது மனைவி பிள்ளைகளை பிரிந்த நிலையில் எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே தமது வாழ் நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள 118 பேரில் 9 பேர் திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களாவர். ஆறு பேர் சிங்களவர்களாவர். இவர்களில் நான்கு சிங்களவர்கள் அண்மைய காலங்களில் இடம்பெற்ற கடத்தல், கப்பம் கோரல், படுகொலை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப் படை அதிகாரி கஜநாயக்காவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மதவாச்சி, ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் முன்னர் பொலிஸ், இராணுவம், ஊர்காவல் படை என்பவற்றில் கடமையாற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் ஆறு வயதுச் சிறுமி உட்பட 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வத்தளையிலுள்ள கடைத் தொகுதியொன்றிலிருந்து கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்காக அங்கு பணியாற்றிய லூடிகா மற்றும் அமல்கா என்ற சிங்கள யுவதியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸாரல் கைது செய்யப்பட்ட தமயந்தி என்ற பெண்ணே தனது ஆறு மாதக் குழந்தையுடன் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனது வீட்டிலிருந்து ஆயுதம் மீட்கப்பட்டதாகக் கூறியே என்னைக் கைது செய்தனர். என்ன நடந்ததென்று எனக்கு எதுவுமே தெரியாது. நான் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதத்தையும் பார்க்கவில்லை என்னையும் எனது குழந்தையையும் விடுதலை செய்து எனது ஊருக்கு சென்று எனது குடும்பத்துடன் வாழ வழியேற்படுத்தித் தாருங்கள் என்று கண்ணீர் விட்டழுதார் அந்தக் குடும்பப் பெண். இதனைவிட வவுனியா நெலுக்குளத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினரான பிரபுராஜ், மேகலா ஆகிய இருவரும் இங்கு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் வவுனியாவிலிருந்து ரயிலில் வந்திறங்கிய இவர்களை புறக்கோட்டைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளின் பின்னர் பூசா முகாமிற்கு அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பூசா தடுப்பு முகாமில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் தமது வாழ் நாட்களை கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யார் வழிவகுக்கப் போகிறார்கள். 1984 களின் பிற்பகுதியில் அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத் முதலியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பூசா தடுப்பு முகாம் இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளின் குருதியை சுவைத்த கறைபடிந்த வரலாற்றுடன் ஒரு அவமானச் சின்னமாக தமிழர் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகவே காட்சியளிக்கிறது.
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




"இன்னும் சிறிதுநேரத்தில் நீங்கள் எல்லோரும் இங்கிருந்து போய்விடுவீர்கள் உங்களிடம் உண்மையைக் கூறியதற்காக நாங்கள் மீண்டும் தாக்கப்படலாம். வலியும், வேதனையும் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுவதைத்தவிர எம்மால் வேறென்னதான் செய்ய முடியும்' என்றார் பூசா தடுப்பு முகாமில் கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு குழந்தைகளின் தந்தையான 33 வயதையுடைய தமிழ் இளைஞர் ஒருவர். "வியாழக்கிழமை என் மீதான விசாரணைகள் நடைபெற்றபோது நான் கடுமையாக தாக்கப்பட்டேன். உங்கள் முன்பாக நிற்கும் இந்த புலனாய்வுத்துறை அதிகாரிதான் என்னைத் தாக்கியவர்" என்றும் அந்த இளைஞர் கண்ணீர்மல்க சுட்டிக்காட்டினார்.

