| கே.பி.க்கு என்ன நடத்தது? கைதான பின்னர் தப்பினாரா? |
|
|
| கொழும்பு நிருபர் | |
| 17. September 2007 17:02 | |
|
இதேவேளை தாய்லாந்தில் கைதான அவரை இலங்கைக்கு கொண்டுவரப் போவதாகவும் கூறி தாய்லாந்து சென்ற அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தில் பீற்றர் இப்ராகீம் என்பவர் கைது செய்யப்பட்டதை, குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொங் போஸ்ற் ஏசியன் றிபியூன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஆகியன செய்தி வெளியிட்டிருந்தன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தச் செய்தி ஊடகங்கள் பீற்றர் இப்ராகிம் என்ற பெயரை தமது செய்திகளில் தவிர்த்திருந்தன. இதனைத் தொடர்ந்து தாம் பத்மநாதனை கைது செய்யவில்லை என தாய்லாந்து அதிகாரிகள் மறுத்திருந்தனர். எனினும், பத்மநாதனை விசாரிக்கவும் முடிந்தால் இலங்கைக்கு கொண்டுவரவுமென இரு பொலிஸ்மா அதிபர்களும் மேலதிக வெளிவிவகாரச் செயலாளரும் தாய்லாந்து சென்றிருந்தனர். எனினும், இவர்களின் வருகையை தாய்லாந்து அரசாங்கம் ஊக்குவிக்காத போதும் இவர்கள் தாய்லாந்துக்கு தாமாகவே சென்றிருந்தனர். தற்போது அங்கு எந்தவித முன்னேற்றமும் அற்ற நிலையில் அதிகாரிகள் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் தமது நிலையில் உறுதியாகவே உள்ளதாக நாடு திரும்பிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை விட விடுதலைப் புலிகளுக்கு தாய்லாந்து அதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க கே.பி. க்கு என்ன நடந்திருக்கலாம் என்பது தொடர்பில் இரண்டு தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. முதலாவது தகவலின்படி 20 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கிவிட்டு கே.வி.யை தாய்லாந்து பொலிஸார் விடுவித்திருக்கலாம் என ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. மற்றொரு செய்தியின்படி அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. இவரை விசாரணைகளுக்காகத் தமது பொறுப்பில் எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள முதலாவது செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குமரன் பத்மநாதனிடம் இருந்து 20 மில்லியன் டொலர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தாய்லாந்து பொலிஸார் அவரை விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய்லாந்து பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ராஜீவ் காந்தி கொலைச் சதித் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுப்பதில் முக்கிய பங்காற்றுபவர் குமரன் பத்மநாதன் என்கிற கே.பி.இவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை இரு நாட்டு அரசுகளும் தீவிரமாக தேடி வருகின்றன. இந்த நிலையில் இவர் கடந்த 10 ஆம் திகதி தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் சி.பி.ஐ.ஈடுபட்டது. ஆனால் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை தாய்லாந்து அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் குமரன் பாங்கொக் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பொலிஸார் தம்மை விடுதலை செய்ய குமரன் 20 மில்லியன் அமெரிக்கடொலர்களை இலஞ்சம் கொடுத்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்து பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, குமரன் பத்மநாதன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சதித்திட்டம் தீட்டிய பல்வேறு நபர்களின் பெயரை வெளியிட்டதாக தாய்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஆயுதங்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன மற்றும் அவை எப்படி அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் குமரன் பத்மநாதன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக பத்மநாதன் தெரிவித்த பல்வேறு தகவல்கள் தற்போது அமெரிக்க உளவு அமைப்பிடம் இருப்பதாகவும் அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், அல்குவைதா அமைப்புடன் கே.வி.க்கு உள்ள தொடர்புகளை அறிவதற்காக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. அவரை அவசரமாக பாங்கொக்கிலிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றிருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறு பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற போதிலும், கே.பி.யை தாம் கைது செய்யவில்லை என உறுதியாகத் தெரிவித்துவிட்டது. அப்படியானால் அவர் கைதானதாக செய்தி வெளியானது ஏன் என்ற கேள்விதான் பெரிதாக எழுப்பப்படுகின்றது. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





