| திட்டமிட்ட படுகொலைகள் : பின்னணி என்ன? |
|
|
| அஜாதசத்ரு | |
| 24. September 2007 10:24 | |
|
மூதூர் பாலத்தடிசேனையிலுள்ள இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதபாணிகள் இவரை விசாரணைக்கென்று அழைத்து துப்பாக்கியால் சுட முயற்சித்த போது ஆயுதபாணி நபரைத் தள்ளிவிட்டு வெளியே தப்பியோட முற்பட்ட போது வீட்டு வாசலில் காத்திருந்த ஏனைய ஆயுதபாணியினரால் இவர் நெஞ்சில் சூடுபட்டு உயிரிழந்துள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல் சேனையூர், நல்லூர், பாலத்தடிச்சேனை, இருதயபுரம், இறால்குளி, பெரியவெளி ஆகிய இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த இவர் இறுதியாக கட்டைபறிச்சானில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாவற்றுக்குமப்பால் கிராம சேவையாளராக கடமையாற்றிய முத்துக்குமார் பரஞ்சோதி தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரியாத விடயமாகும். 1977 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்து தமிழ்தேசியத் விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கிய ஒரு போராளியாவார். ஈரோஸ் அமைப்பினால் அப்போது வெளியிடப்பட்ட `பொதுமை' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் அவலங்களையும் துயரங்களையும் எழுத்துகளில் வெளிக்கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய ஒருவராவார். இதனைவிட கவிஞர் பொதிகை, அமுதன் ஆகிய புனைபெயர்களில் தேசியப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் , வானொலி என்பவற்றில் பல்வேறு படைப்புருவாக்கங்களை எழுதி ஈழத்து தமிழ் இலக்கியத்துறைக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய ஒரு தமிழ் இலக்கியப் படைப்பாளியுமாவார். எழுத்துத் துறையில் பெரும்புலமை பெற்றிருந்த முத்துக்குமார் பரஞ்சோதி ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான பல்வேறு விடயங்களையும் முழுமையாக அறிந்து அதற்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்த ஒருவராவார். அத்துடன் 1987 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசகராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி ஈரோஸ் இயக்கத்தின் தலைவராகவிருந்த தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக செயற்படும் வே.பாலகுமார் மற்றும் ஈரோஸ் இயக்கத்தின் சிரேஷ்ட முக்கியஸ்தராக இருந்து தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகவும் ஆளும் கட்சியின் அமைச்சராகவும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் நல்லுறவுக்காகவும் குரல் கொடுத்து வரும் பசீர் சேகுதாவூத்தின் நெருங்கிய நண்பருமாவார். 1994 ஆம் ஆண்டிலிருந்து தனது அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்ட இவர் கிராம சேவையாளராக மக்களின் நன்மதிப்பைப் பெறுமளவிற்கு இறுதிவரை கடமையாற்றினார். அதற்குமப்பால் குறிப்பாக மூதூர் பிரதேசத்தில் அவ்வப்போது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தமிழ்- முஸ்லிம் சமூகங்களிடையேயான ஒற்றுமையை, நல்லுறவை சீர்குலைப்பதற்கான இன வன்முறைகளை சுமுக நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் யதார்த்த பூர்வமாக சிந்தித்து களத்தில் நின்று செயற்பட்ட முன்னோடிகளில் ஒருவராவார். பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள பாதுகாப்பு நிறைந்த இடத்தில் வைத்தே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியுமென்று நீதிபதியிடம் தெரிவித்துள்ள அவரது மனைவி ஏற்கனவே தனது கணவருடன் சென்ற போது இரு தடவைகள் அவரைத் தடுத்து நிறுத்தி பேசிய நபர்களே தமது வீட்டுக்கு வந்து படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரச படையினருடன் மோதல்கள், இந்தியப் படையினருடனான மோதல், சகோதரப் படுகொலைகள், உட்கட்சி முரண்பாடுகள் என்று ஆயிரக்கணக்கான பெறுமதிமிக்க உயிர்களை இழந்து போயுள்ள தமிழ்ச்சமூகம் இன்று அதனிலும்விட மிக மோசமான அபாயகரமான நிலைமையொன்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளதையே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக அப்பகுதிகளுக்குச் செல்லமுடியாத நிலையிலுள்ளதுடன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. மேலும் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் திட்டமிட்ட முறையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் தொடர்பாக வெளிக்கொணர்ந்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். வாழைச்சேனை காகித ஆலையிலிருந்து கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஓட்டமாவடி பிரதேசம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு நகரிலும், நடராஜா ரவிராஜ் கொழும்பு நாரஹேன்பிட்டியிலும் வைத்து ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு படுகொலைச்சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கென்று பல்வேறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை கொலையாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அது தொடர்பான எந்தவொரு உரிய நடவடிக்கையும் அரசதரப்பினரால் முன்னெடுக்கப்படவில்லை. பல்வேறு சந்தேகங்கள் உருவாக்கியுள்ளன. இவ்வாறே படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு நியமிக்கப்படவிருந்த திருகோணமலை மாவட்ட தமிழ்மக்கள் பேரவையின் தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மத்தியகுழு உறுப்பினரும் அரச வங்கியொன்றின் சிரேஷ்ட அதிகாரியுமான விக்னேஸ்வரன் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியிலுள்ள அவரது அலுவலகத்திற்கு முன்பாக வைத்து படுகொலைசெய்யப்பட்டார். மேலும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் வன்னிமாவட்ட அமைப்பாளரும் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் போட்டியிட்டவருமான எம்.கே.செந்தில்நாதன் வவுனியா நகரிலுள்ள அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் ஈரோஸ் இயக்க பாராளுமன்ற உறுப்பினரும் கடந்த பொதுத்தேர்தல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டவருமான எம்.சிவமகராஜா தெல்லிப்பழையிலுள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் புத்தளத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள அரசியல் படுகொலைகள் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி மனிதர்கள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்ட செப்டெம்பர் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் விமானக் குண்டு வீச்சு காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சைற்சார்ஜர் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செப்டெம்பர் 21 ஆம் திகதி இரு குடும்பஸ்தர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்துள்ளதுடன் யாழ்.நகரப்பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு முடிவையும் காணாமல் நீண்டு கொண்டு செல்லும் இலங்கையின் கொலைகார கலாசாரம் அநாதைக் குழந்தைகளையும் விதவைப்பெண்களையும் விட்டுச் செல்லும் துயரநிகழ்வுகளை யார் முடிவுக்கு கொண்டுவருவார்? கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



தமிழ்தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான முத்துக்குமார் சௌந்தரராஜனின் சகோதரரும் கட்டைபறிச்சான் கிராம சேவையாளருமான முத்துக்குமார் பரஞ்சோதி (வயது 52) கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டள்ளார். 
