|
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பாரிய பிளவுக்கும், கிழக்கு மாகாணத்தில் உருவாகிய பல குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த கருணா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றது. பிரித்தானியாவுக்கான விசாவைப் பெற்றுக்கொண்ட அவர், கடந்த வாரம் கொழும்பிலிருந்து லண்டன் சென்றிருப்பதாகக் கூறப்படுகின்றது. அரசினதும். இராணுவத்தினதும் ஆதரவைப் பெற்றிருந்த அவர் திடீரென லண்டன் சென்றது ஏன்?
கடந்த வாரம் லண்டன் சென்ற அவர், கடந்த ஒரு வருட காலமாக லண்டனில் தங்கியிருக்கும் அவரது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டிருக்கின்றார். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் சிலரும் கருணா விசா பெற்றுக்கொள்வதற்கும், பிரித்தானியாவுக்குச் செல்வதற்கும் உதவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செல்லப் பிள்ளையாக இருந்து, அரசாங்கத்தின் இராணுவ, அரசியல் மற்றும் பிரச்சாரத் தேவைகளுக்கு உதவிக்கொண்டிருந்த கருணா திடீரென வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பதுததான்!
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கருணாவை இனியும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை அதற்கில்லை. அந்த நிலையிலேயே அவரை வெளியே அனுப்பிவிடுவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றார் தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர். கருணாவின் வெளியேற்றத்துக்கு நான்கு காரணங்கள் பிரதானமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவது - கருணா குழுவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவும், பிள்ளையான் தலைமையில் உருவாகியுள்ள குழு பெற்றுக்கொண்டுள்ள பலமும்.
இரண்டாவது - கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் செயற்பட முனைந்த ஈ.பி.டி.பி. உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கருணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடு.
மூன்றாவது - கருணா குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும், கருணா குழு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களால் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகள்.
நான்காவது - கருணாவைத் தொடர்ந்தும் தம்முடன் வைத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் அரசாங்கத்துக்கு இல்லாமல் போய்விட்டது.
கருணா குழுவின் இராணுவத் தளபதி என வர்ணிக்கப்பட்ட பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு கருணாவைப் பெரிதும் பலவீனப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடத்தல்கள் கப்பம் பெறுதல் போன்றவற்றின் மூலமாக பெருந்தொகையான பணம் கருணா குழுவினரால் வசூல் செய்யப்பட்ட நிலையில், நிதியைக் கையாள்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைதான் பிள்ளையானுடன் கருணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளுக்குப் பிரதான காரணமாக இருந்தது. இந்த முரண்பாடு பல கொலைகள் கடத்தல்களுக்கும் காரணமாகியது.
இந்த நிலையில் பிள்ளையான் தனது விசுவாசிகளுடன் திருமலைக்குச் சென்ற போது, தனது ஆதரவாளர்கள் என கருணா நம்பியிருந்த பலரும் பிள்ளையானுடன் சென்றுவிட்டனர். பிள்ளையான் தலைமையிலான பிரிவினர் தனியாக அலுவலகங்களை அமைத்தச் செயற்படுவதற்கும் இப்போது முற்பட்டுள்ளார்கள். அதேவேளையில் இவர்களுடன் இருந்த இராணுவப் பிரிவின் பெரும்பாலானவர்கள் பிள்ளையான் விசுவாசிகளாகவே இருந்தமை கருணாவை மேலும் பலவீனப்படுத்தியது. கருணா முற்று முழுதாக இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவையுமே நம்பியிருக்க வேண்டியவரானார்.
இவை ஒருபுறம் இருக்க, கிழக்கு மாகாணத்தை இராணுவம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து. அங்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் மூலம் கிழக்கின் முடிசூடாத தலைவன் தான்தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கருணா எதிர்பார்த்தார். வடக்கையும் கிழக்கையும் பிரித்தாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசாங்கமும், இராணுவமும் தனது இந்த விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்கள் என அவர் உறுதியாக நம்பினார். தேர்தல் நடத்தப்படும் என அரச தரப்பிலிருந்து முதலில் வெளிவந்த அறிவிப்பு அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
இருந்தபோதிலும் இந்தத் தேர்தல் நடைபெறலாம் என்ற அறிவிப்பைத் தொடாந்து அரச ஆதரவு பெற்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. மற்றும் ஆனந்தசங்கரி. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த சிறிதரன் ஆகியோர் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் இறங்கியது கருணாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டக்கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கள் தேர்தல் ஒன்றில் தனக்கே ஆதரவைத் தரும் என எதிர்பார்த்த கருணா இவர்களது செயற்பாட்டால் அதிர்ச்சியடைந்தார். கிழக்கு மாகாணத்தில் தனது தனித்துவம் பறிபோய்விடும் என்ற அச்சம் அவரக்கு ஏற்பட்டது. இந்த நிலையிலேயே சேனன் படை என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அரசியல் அமைப்புக்களுக்கு அவரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிழக்கில் அவற்றைத் தடை செய்வதாக அவர் அறிவித்தார்.
அதேவேளையில், இந்த அமைப்புக்களின் மட்டக்களப்பு வருகையின் பின்னணியில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பதும் அவருக்கு பல உண்மைகளை வெளிப்படுத்தியது. அதாவது, அவருடைய தனித்துவமான அரசியலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்போவதில்லை என்பதுதான் அது. கருணா குழுவுக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கில்லை என்பதும், அவரது குழுவுக்கெதிராதக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் மாற்றுக் குழுக்களைக் களமிறக்க வேண்டிய தேவையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியது.
டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு மாற்றுக் குழுவாக கருணா குழு வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கு கரணாவைப் பயன்படுத்தினால் போதும் என்பதுதான் அவரது நிலைப்பாடு. ஆரசியல் ரீதியாக அவ்வமைப்பு வளர்சியடைந்தால் அது தனக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் கருதினார். இந்த நிலையிலேயே மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேர்தல் ஒன்று வருமாளின் அதற்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதுடன், கருணாiவிட தான் முன்னணியில் இருக்க வேண்டும் எனவும் டக்ளஸ் அக்கறை கொண்டார்.
இந்த நிலையில்தான் டக்ளஸ் குழுவுக்கும் கருணா குழுவுக்கும் இடையில் மட்டக்களப்பில் மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் இரண்டு தரப்பிலும் கொலைகளும் விழுந்தன. கருணா குழுவினருடைய ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாகக் கோரிக்கை விடும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்தன. மட்டக்களப்பை விட்டுக்கொடுக்க கருணா தயாராகவில்லாத அதேவேளையில், டக்ளஸ்கூட கருணா குழுவிடம் தோல்வியடையத் தயாராகவிருக்கவில்லை. கருணாவிடமிருந்து பிரிந்த பிள்ளையான் குழுவினரையும் பயன்படுத்திக்கொள்வதற்கு டக்ளஸ் முற்பட்டதாகவும் சில செய்திகள் உள்ளன.
இந்த முரண்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது அரசுக்குச் சங்கடமான ஒரு நிலையைத்தான் ஏற்படுத்தியது. கருணாவைவிட டக்ளஸ்தான் அரசாங்கத்துக்கு முக்கியமானவராக இருக்கின்றார். ஜனாதிபதி ஐ.நா. சபைக்குச் செல்லும் போது கூட டக்ளஸ் தேவானந்தாவைத்தான் அருகில் வைத்திருக்க விரும்புகின்றார். ஆரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ கருணா பலமானவர் அல்ல என்பதை அரசாங்கம் ஏற்கனவே புரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் அவரைக் கைவிடுவதைவிட அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் பிளவை ஏற்படுத்துவதற்கும், கிழக்கு மாகாணத்தில் குழப்பங்களை உருவாக்கவும் மட்டும்தான் அவரை அரசாங்கத்துக்குத் தேவையாக இருந்தது. கருணாவும் கூட அதற்கு மேல் பயன்படக் கூடிய ஒருவரல்ல. தன்னுடைய நிலையை கருணாவும் புரிந்துகொண்டிருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் கருணாவை வெளிநாடு செல்வதற்கு அரசு அனுமதித்தது!
|