|
சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக நிலவன்
 ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா இராணுவம் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது.நாளாந்தம் வெளிவருகின்ற யுத்தச் செய்திகள், யுத்த அறைகூவல்கள், இழப்புச் செய்திகள், விடுதலைப் புலிகள் வெளியிடும் மாவீரர் பெயர் விபர அறிவித்தல்கள்…. - இவை எல்லாமே வடக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெற்று வருகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக ;கொண்டு நோக்கும போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, சிறிலங்கா இராணுவமே வடக்கில் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என்கின்ற உண்மை தெளிவாகப் புரிகின்றது.புரியாதது?
ஆனால் சரிவரப் புரியாத மற்றொரு விடயமும் இந்தச செய்திகளுள் அடங்கி இருக்கத்தான் செய்கின்றது.
அதாவது வடக்கைப் பொறுத்த வரையில் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ இலக்கு என்ன என்பது தெளிவாகப்
புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கும். அடுத்த தினமே மன்னார் பிரதேசத்தில் சிறிலங்கா
இராணுவத்தின் வேறொரு முன்னகர்வு நடவடிக்கை இடம்பெற்றதாக மற்றொரு செய்தி வெளியாகி இருக்கும்.
முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறிலங்காப்படைகள் முன்னேற முயன்றதாக ஒரு செய்தி வெளியாகி ஓரிரு தினங்களில், ஓமந்தையில் சண்டைகள் நடைபெற்றதாக மற்றொரு செய்தி வெளியாகும்.
மணலாறு ஊடாக முன்நகர்ந்து வன்னியை ஊடறுக்கும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் என்கின்ற புதிய படைப்பிரிவு அமைக்கப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் களமிறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவைக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா இராணுவத்தில் 59வது டிவிசன் என்ற பெயரில் மேலும் ஒரு படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட இருப்பதாக
மற்றொரு செய்தி வெளியாகி இருந்தது. விரைவில் முல்லைத்தீவைக் கைப்பற்றி அங்கிருக்கும் பௌத்த
சின்னங்களை சிங்களவர்கள் சென்று தரிசிக்கும் நிலையை உருவாக்க உள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த செய்தி வெளியாகி இருந்தது. வன்னியைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளை 100 வீதம் வெற்றி கொள்ளப்போவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்திருந்த செய்த வெளியாகி இருந்தது. இது போன்று வெளிவருகின்ற செய்திகளை
அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, வன்னியை கைப்பற்றும் விதமாக பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு
சிறிலங்காவின் முப்படைகளும் தயாராகி வருகின்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகின்றது.இங்குதான் பல கேள்விகள் எழுகின்றன.
சிறிலங்கா இராணுவத்தினால் வன்னியை ஆக்கிரமிக்க முடியுமா? சிறிலங்காப் படைகளின் வன்னி ஆக்கிரமிப்பு எந்த முனையில் இருந்து மேற்கொள்ளப்படும்? பலமுனைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் வன்னி
மீதான ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் தகைமை சிறிலங்கா இராணுவத்திற்கு இருக்கின்றதா? வன்னி ஆக்கிரமிப்பு தொடர்பிலான சிறிலங்காப் படைத்துறைத் தலைமையின் போர் உத்தி எப்படிப்பட்டதாக இருக்கின்றது?
உண்மையிலேயே இந்தக் கேள்விகளுக்கான பதில் தெரியாமல் தமிழர் தரப்பை குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும்
என்பதுதான் சிறிலங்கா போரியல் வல்லுனர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கின்றது. பலமுனைகளில் தாக்குதல்கள் நடாத்துவதும், தாக்குதல் எதிர்வு கூறல்களை வெளியிடுவதும் கூட, தமிழர் தரப்பை
குழப்பி தனது உண்மையான போரியல் திட்டம் என்ன என்பதை எதிரியால் அனுமானிக்க முடியாமல் வைத்திருப்பதே சிறிலங்கா இராணுவத் தலைமையின் திட்டமாக இருக்கின்றது. என்ன திட்டம்?
சிறிலங்காவின் முக்கிய போரியல் ஆய்வாளர் ஒருவருடன் அண்மையில் தொடர்புகொண்டு பேசிய போது, சிறிலங்காவின தற்போதைய போரியல் திட்டம் பற்றி ஒரு கருத்தை அவர வெளியிட்டிருந்தார். அதாவது, தற்பொழுது சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள பலம், விடுதலைப் புலிகள் வசம் இருப்பதாக கணிப்பிடப்படும் பலம்,
வன்னியின் நில அமைப்புக்கள் என்பனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, வன்னியின் பல முனைகளிலும் ஒரே நேரத்தில் முன்னகரும் பலமும் வளமும் சிறிலங்காப்
படைகளிடம் கிடையாது என்று அவர் அடித்துக் கூறினார். வன்னியைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் மிக
மிகப் பலமாக இருப்பதாகவும், சிறிலங்கா இராணுவத்தினரின் கற்பனைக்கெட்டாத அளவிற்கு விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் ஆளணி வளம் இருப்பதாகவும் தெரிவித்த அந்த ஆய்வாளர், இது சிறிலங்காப் படைத்துறைத் தலைமைக்கும் நன்றாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் வன்னியைப் பொறுத்தவரையில் சிறிலங்கா இராணுவத்தின் முதன்மை இலக்கு என்ன என்ற கேள்வியை எழுப்பியபோது, வவுனியா மன்னார் பூநகரி சங்குப்பிட்டி பாதையான ஏ-32 பாதை வழியாக ஒரு ஒரு பாரிய படை நடவடிக்கையை
மேற்கொண்டு பூநகரியைக் கைப்பற்றுவதே சிறிலங்காப் படைகளின் தற்போதைய திட்டமாக இருக்கலாம் என்று அவர்
தெரிவித்திருந்தார். தற்பொழுது மன்னார்ப் பிராந்தியங்களில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நகர்வுகள், அவர்களால் அங்கு குவிக்கப்பட்டு வரும் வளம் என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது, பூநகரியைக் கைப்பற்றுவதே சிறிலங்காப் படைகளின் முதன்மையான இலக்காக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது.
எதற்காகப் பூநகரி?
வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக் கூடியதான எத்தனையோ சிறிலங்காவின் படை நிலைகள் இருக்க, எதற்காக பூநகரியை நோக்கி படை நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவம் நினைக்கின்றது? சிறிலங்காப் படைத்துறையைப் பொறுத்தவரையில் அவர்கள் அவசர அவசரமாக பூநகரிப் பிரதேசத்தில் நிலைகொண்டேயாக வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு இருக்கத்தான் செய்
கின்றது. பூநகரியிலும், கல்முனைப் பகுதிகளிலும் உள்ளதாக சிறி லங்காப் படையினர் கூறும் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி நிலைகளைக் கைப்பற்றவேண்டிய தேவை சிறிலங்கா படை யினருக்கு இருக்கின்றது. இந்தத் தளங்களில் இருந்தே சிறிலங்கா இராணுவத் தளமான பலாலியைக் குறிவைத்து புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிலங்காப் படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல் எல்லைக்குள் தொடர்ந்தும் பலாலித் தளத்தை வைத்திருப்பதென்பது, யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். எதிர்வரும் மாரி காலத்தில் விடுதலைப் புலிகள் பலாலி விமானத்தளத்தை நோக்கி தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் களை மேற்கொண்டபடி, வட கடல் மீதான கடற்புலிகளின் ஆதிக்கத்தையும் சற்று அதிகரித்தால், யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கான விநியோகம் என்பது நிச்சயம் கேள்விக்குள்ளாகிவிடும்.
எனவே வவுனியா-மன்னார்-பூநகரி-சங்குப்பிட்டிப் பாதை வழியாக ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு,
அப்பிரதேசத்தில் நிலைகொள்வதன் மூலம், விடுதலைப் புலி களின் எறிகணை வீச்சிலிருந்து பலாலிப் படைத்தளத்தைக் காப்பாற்றிக்கொள்வதுடன், யாழ்குடாவிற்கான தரைவழி விநியோகத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று சிறிலங்கா இராணுவத் தலைமை நினைக்கின்றது. மன்னார் சங்குப்பிட்டிப் பாதையை சிறிலங்காப் படைத்துறைத் தலைமை தேர்ந்தெடுப்பதற்கு, அந்தப் பாதை விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை ஊடறுத்துச் செல்லாதது ஒரு காரணம். யாழ் குடாவிற்கான மற்றைய பிரதான பாதைகளுடன் ஒப்பிடும் போது, பாரிய எதிர்ப்புக்கள் இன்றி இலகுவாக முன்னேறத் தோதான பாதை என்று சிறிலங்காப் படைத்துறைத்
தலைமையினால் கணிக்கப்படுகின்றது. அத்தோடு, இந்தப் பாதை பெரும்பாலும் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியதாகவே செல்வதால் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்தினருக்கான
விநியோகம் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்றும் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. தேவை எனப்பட்டால், அல்லது இந்தப் பாதையில் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு பலமாக இருந்தால், விடுதலைப் புலிகளின் நிலைகளுக்குப் பின்புறமாக அவர்களின் நிலைகளைச் சுற்றி
வளைத்து கடல்வழித் தரையிறக்கத்தைச் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ள முடியும் என்றும் கருதப்படுகின்றது.
வில்லங்கம் ஏற்பட்டால் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகின்ற படையினரை கடல் வழியாக வெளியேற்றிவிட முடியும் என்றும்
படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. அத்தோடு, கட்டுநாயக்க விமானத் தளத்தைப் பின்தளமாகக்
கொண்டு, போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் போன்றவற்றின் உச்சப் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு நினைக்கின்றது. சிறிலங்காக் கடற்படையிடம் உள்ள போர்க் கப்பல்கள்,
தாக்குதல் கலங்கள் எல்லாவற்றையும் அணிவகுத்து மன்னார் கடற்பரப்பில் நிறுத்தி, இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அதி உயர் பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வழங்க முடியும் என்றும் அது கருதுகின்றது. அனைத்திற்கும் மேலாக, இந்தப் பிராந்தியத்தின் சர்வதேச கடல் எல்லைகள் இந்திய கடற்படையின் அதி உச்ச கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. எனவே இராணுவ நடவடிக்கை
இடம்பெறும் காலத்தில் சர்வதேச கடல் எல்லைகள் ஊடாக இலங்கையின் மன்னார் கடல் எல்லைக்குள் கடற்புலிகளின் படகுகள் வருவது கடினமாக இருக்கும் என்றும் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்க்கின்றது.
எனவேதான் மன்னார்- சங்குப்பிட்டிப் பாதையை சிறிலங்காப் படைத்துறைத் தலைமை வன்னிக்கான தனது அடுத்த இராணுவ நடவடிக்கைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கான பொறுப்பு, வன்னிக்கான விஷேட
படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், பிரிகேடியர் டயஸ் அவருக்குத் துணையாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட படைப்பிரிவான 57வது டிவிசன் படைப் பிரிவு இந்த நடவடிக்கைக்காக களம் இறக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு 2வது கொமாண்டோ பிரிகேட், (வுhந ளநஉழனெ ஊழஅஅயனெழ டீசபையனந), 10வது கஜபா ரெஜிமென்ட் (10 புயதயடிய சுநபiஅநவெ) போன்றனவும் களம் இறக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப்
படைப்பிரிவான 53 ஆவது சிறப்புப்படையணியின் சில கொம்பனி துருப்புக்களும், வவுனியாவில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் 4 பற்றாலியன் துருப்புக்களும் மேலதிகமாக இந்த நடவடிக்கைக்காகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
ஆக மொத்தத்தில், பூநகரியைக் கைப்பற்று வதற்காக சிறிலங்கா இராணுவம் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை
எடுக்கப் போகின்றது என்பது ஓரளவிற்கு உறுதியாகின்றது. திசை திருப்பும் தாக்குதல்: இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சுpறிலங்கா இராணுவம் பூநகரியை நோக்கிப் படை எடுப்பதானால் நேரடியாக அதனைச் செய்யலாமே. பின்னர் எதற்காக முகமாலையிலும், நாகர்கோவிலிலும், மணலாற்றிலும், நகர்வுகளை மேற்கொண்டு
பூச்சாண்டி காண்பிக்க வேண்டும்? பதில் மிகவும் இலகுவானது. விடுதலைப் புலிகளின் கவனத்தைத் திசை திருப்ப சிறிலங்கா இராணுவம் நினைக்கின்றது. நாகர்கோவில் வழியாக சிறிலங்கா இராணுவம் முன்னேறிவிடும்
என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான போராளிகள் அங்கு நிலை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். மணலாற்றில் சிறிலங்கா இராணவத்தின் புதிய படைப்பிரிவான 58ஆவது டிவிசன் களமிறக்கப்பட்டுள்ளதால் புலிகளின் சில முக்கிய தாக்குதல் அணிகள் அங்கு நிறுத்தி வைக்கப்படவேண்டும். முல்லைத்தீவைக் கைப்பற்றும் நோக்கில் உலங்கு
வானூர்தி மூலமான தரையிறக்கம் ஒன்று சிறிலங்கா படை களினால் மேற்கொள்ளப்பட்டு விடக்கூடும் என்ற அச்சத்தில் ஏராளமான போராளிகள் பரவலாக அங்கு நிலைநிறுத்தப்பட்டு, நாட்கணக்காகக் காத்திருக்க வேண்டும். இதுதான் சிறிலங்கா படைகளின் எதிர்பார்ப்பு. இப்படியெல்லாம் போக்குக் காண்பிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தப் பலம் மன்னார் பூநகரிப் பாதையை நோக்கித் திரும்புவதைத் தடுக்கமுடியும் என்பதுடன்,
எதிர்வரும் மாவீரர் தினத்திற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் பாரிய இராணுவ நடவடிக்கைக்காக புலிகள் ஒன்று குவிவதையும், பயிற்சிகள் எடுப்பதையும் தடுத்துவிடலாம் என்றும் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்க்கின்றது. புலிப்பாய்ச்சல். இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் தயார், இராணுவம்
தயார், ஆயுதங்கள் தயார். ஆனாலும் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம்
தயக்கம் காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ள இருப்பதாகக்
கூறப்படும் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான புலிப் பாய்ச்சல் எப்படியானதாக இருக்கும் என்றும், அந்தப் புலிப் பாய்ச்சலினால் ஏற்பட்டுவிடக்கூடிய விளைவு எப்படியானதாக இருக்கும் என்கின்ற அச்சம் காரணமாகவே, திட்டமிட்ட இராணுவ நடவடிக்கையை துணிவுடன் முன்னெடுக்க முடியாமல் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை தடுமாறுகின்றதாகவும் கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றார்கள். வன்னியைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் உண்மையான பலம் என்ன என்பது சிறிலங்காப் படைத்துறைக்குத் தெரியாமலேயே இருக்கின்றது. வன்னியில் எத்தனை போராளி கள் இருக்கின்றார்கள்? இந்தச் சமாதான காலப்பகுதியில்
விடுதலைப் புலிகள் எப்படியான ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்கள்? புதிதாக என்னென்ன படை அணிகளை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்? புலிகள் அமைத்துள்ள ஈரூடகப் படையணிகளின் செயற்பாடுகள் மன்னார்-சங்குப்பிட்டிக் கடற் கரைப் பாதையில் எப்படியானதாக இருக்கும்? யுத்த முனைகளில்
வான்புலிகளின் பங்கு எப்படியானதாக இருக்கும்? இவை பற்றி சிறிலங்காப் படைகளுக்கு எந்தவித அறிவும் இல்லாமலேயே இருக்கின்றன.
அடுத்ததாக, இந்த 4ம் கட்ட ஈழ யுத்த காலப்பகுதியில் வன்னியில் இதுவரை விடுதலைப் புலிகள் தமது உண்மையான பலத்தை வெளிப்படுத்தவில்லை. முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினருக்கு எதிராக பலமான எதிர் நடவடிக்கைகளைமேற்கொண்டு அவர்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்களே தவிர, முன்னேறித் தாக்கும் நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் பெரிய அளவில் மேற்கொள்வில்லை. சிறிலங்காப் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் உபயோகித்த ஆயுதங்கள் மிக மிக நவீனமானவை என்ற தகவல்களை உறுதிப்படுத்தும் சிறிலங்கா படையினர், அவற்றில் பல தம்மிடம் கூட இல்லாதவை என்றே
தெரிவித்தும் வருகின்றன. இப்படி இருக்கையில், அவசரப்பட்டு வன்னியில் படை நடவடிக்கையை மேற்கொண்டு, எசகுபிசகாக மாட்டிக்கொண்டு, பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுவிட்டால் என்னசெய்வது என்ற அச்சம்
சிறிலங்காப் படைத்துறைத் தலைமையின் சில தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரும், சிறிலங்காப் படைத்துறையினரால்
அச்சத்துடன் நோக்கப்படுபவருமான கேணல் பால்ராஜ், தனது படை அணிகளுடன் மன்னார் பிரதேசத்தில் நிலை கொள்வதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களும், உடனடியாக மன்னார் படைநடவடிக்கையை மேற்கொள்ளாதபடிக்கு சிறிலங்காப் படையினரின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. வன்னியை மிதித்த எதிரி வாங்கிக் கட்டிக்கொண்டு திரும்பிய
வரலாறு தொடரப் போகின்றது என்பது மட்டும் உறுதியாகத்
தெரிகின்றது.
|