| யால சரனாலய இராணுவ முகாம்தாக்குதல் |
|
|
| 22. October 2007 05:34 | |
|
நிலவன் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா அரசாங்கம் பாரிய அதிர்ச்சி அடைந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து 40 கிலோ மீட்டர் வடக்கே, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜால சரணாலயப் பகுதியில் தல்கஸ்மங்கட என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது 15.10.2007 அன்று மாலை 6.30 மணியளவில் இம்முகாமைச் சுற்றிவளைத்த விடுதலைப் புலிகள் அதன் மீது அதிரடித் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இத்தாக்குதலின் போது அம்முகாமை விடுதலைப் புலிகள் முற்றாக அழித்ததுடன் சுமார் மூன்று மணி நேரம் அப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில் சுமார் 25 படையினர் இருந்ததாகவும், இதில் ஆறு படையினர் கொல்லப்பட்ட அதேவேளையில், இருவர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது. ஆனால், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் தொகையானது சிறிலங்காவின் பாதுகாப்பு ஊடகமையம் வெளியிட்டுள்ள தொகையை விட அதிகம் என்றும், பலர் காயம் அடைந்திருப்பதாகவும் சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தத் தாக்குதலில் 8 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்து சென்றிருக்கலாம் அல்லது புலிகளின் தாக்குதலால் அவர்கள் காட்டிற்குள் ஒடி ஒளிந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் நிலை பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் இப்பத்தி எழுதப்படும் வரை வெளிவரவில்லை. சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்திருக்கின்றது. இந்த தேடுதல் நடவடிக்கைக்காக அம்பாறையில் இருந்தும் கதிர்காமத்தில் இருந்தும் மேலதிக படையினர் வரழைக்கப்பட்டிருந்தார்கள். ஜால வனப்; பகுதியிலுள்ள சிறிலங்கா படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை மீட்பதற்காக மறுநாள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட இராணுவ வாகனம் விடுதலைப் புலிகளால் வைக்கப்பட்டிருந்த அமுக்க வெடியில் சிக்கி படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூவர்; படுகாயமடைந்தார்கள். அதேபோன்று யால சரணாலயத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுக்கு வழி காண்பித்த வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலரும் பொறி வெடிகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதான் நடந்த சம்பவம். ஆனால் இந்த தாக்குதல், சிறிலங்கா அரசாங்கத்திற்கும், சிறிலங்கா இராணுவத்திற்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பது கொஞ்சநஞ்சமல்ல. தாக்கம்: இந்தத் தாக்குதலினால் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கம் பலத்த பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. சிறிலங்காவைப் பொறுத்தவரையில், அதன் படைகள் மேற்கொள்ளுகின்ற இராணுவ நடவடிக்கைகள் எல்லாமே அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற பிரச்சார மாயையில்தான் வட கிழக்குப் போரரங்குகளில் சிறிலங்கா இராணுவத்தின் முழு இராணுவ நடவடிக்கைகளுமே தங்கி இருக்கின்றன. களமுனை வெற்றிகளை விட வெற்றிச் செய்திகளை சிங்கள மக்களுக்கு வழங்குவதில்தான் சிறிலங்கா படைத்துறைத் தலைமை முனைப்புக் காண்பித்து வருகின்றது. சிங்கள அரசாங்கத்தின் இத்தனை கால வெற்றிச் செய்திகள், பூச்சுத்தல்கள், பம்மாத்துக்கள், -அனைத்தையுமே இந்த யால இராணுவ முகாம் தாக்குதல் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத்தின் போர் தந்திரோபாயத்தை எடுத்து நோக்கினால், கிழக்கின் மீது தாம் பெற்றுள்ளதாகக் கூறும் வெற்றியை அடிப்படையாக வைத்தே சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த இராணுவ நிகழ்ச்சி நிரலும் உருவாக்கப்படுகின்றன. வேல்லப்பட முடியாத போர் என்ற மனநிலையில் இருந்து வந்த சிறிலங்கா இராணுவம், வன்னி மீதே படையெடுக்கலாம் என்ற உளவியல் தெம்பை தந்த ஒரு விடயம்தான்- இந்தக் கிழக்கு வெற்றி என்கின்ற விடயம். கிழக்கில் இருந்த புலிகளை எல்லாம் ஒழித்துவிட்டோம். அங்கு மருந்துக்குக் கூட புலிகள் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் யால இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான தாக்குதலானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த இராணுவ எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் பெற்றதாகக் கூறிய கிழக்கு வெற்றியை முழுமையாகவே சிதறடித்து விட்டுள்ளது. அதாவது புலிகள் எவருமே இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட கிழக்கில் இருந்து புறப்பட்ட ஒரு பெரும் தொகையிலான புலிகள் சிங்களத்தின் முழு அடையாளம் தரிக்கப்பெற்ற அம்பநாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு தாக்குதலை மேற்கொண்டதானது, கிழக்கு பற்றி சிறிலங்கா அரசாங்கம் கூறி வந்த அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான முகாமில் 25 சிறிலங்காப் படையினரே இருந்ததாக சிறிலங்கா இராணுவம் கூறினாலும், தாக்குதல் நடைபெற்ற சமயம் இம் முகாமில் சுமார் 55 படையினர் தங்கியிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்புத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்படிப்பட்ட பலமான ஒரு முகாம் மீது ஓரிரு விடுதலைப் புலிகளால் ஒரு தாக்குதலை இத்தனை வெற்றிகரமாகச் செய்துவிடமுடியாது. ஏராளமான புலிகள் பெருந்தொகை போராயுதங்களைச் சுமந்து சென்றுதான் தாக்குதலை மேற்கொண்டிருக்கவேண்டும். தாக்குதல் மேற்கொள்ளச் செல்லும் போராளிகளுடன் துணைப் படையினர், மருத்துவக்குழு என்று பெரும் அணி சென்றுதான் இதனைச் செய்திருக்கவேண்டும். இந்த அணி கிழக்கில் இருந்து வந்துதான் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என்பது உறுதிப்படத் தெரிந்தள்ள நிலையில், கிழக்கில் புலிகளை முழுவதுமாக வெற்றிகொண்டாகிவிட்டது என்கின்றதான சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்று பொய்யாகியுள்ளது. சிறிலங்கா அரசுக்கும், அதன் படைகளுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தோல்வி இது. அம்பாந்தோட்டை: அடுத்ததாக, தாக்குதலுக்கா விடுதலைப் புலிகள் தெரிவு செய்துள்ள இடம். சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் மாவட்டம்தான் அம்பாந்தோட்டை மாவட்டம். சிறிலங்கா அரசாங்கம் இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளுகின்ற அனைத்து அபிவிருத்திப் பணிகளில் 42 வீதமான பணிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. மகிந்த சகோதரர்களின் அரசியல் அடித்தளமே இந்த அம்பாந்தோட்டை மாவட்டம்தான். மகிந்தவின் அடிமடியில் கைவைத்தது போன்று விடுதலைப் புலிகளால் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமாக தாக்குலானது, மகிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப் புலிகளின் பலம் பற்றிய ஒரு செய்தியைச் சொல்வதாக அமைந்திருக்கின்றது. சுற்றுலாத் துறை: அடுத்ததாக, தாக்குதல் இடம்பெற்ற இடம் சிறிலங்காவின் ஒரு முக்கிய சற்றுலா மையம். சுமார் 100 சதுர கிலோ மீற்றர் (385 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம் சிறுத்தைகளுக்கும், யானைகளுக்கும் பெயர் பெற்றது. அக்டோபர் மாதம் முதல் பெப்ரவறி மாதம் வரையிலான காலப்பகுதியில்தான் இந்த சுற்றுலா மையத்திற்கு அதிக சுற்றுலாப் பயனிகள் வரவது வளக்கம். இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற இந்தத்தாக்குதலானது, சுற்றுலாத்துறையை மகவும் பாதித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காண்பிக்கின்றார்கள். அதுவும், கடந்த ஒன்றரை மாதங்களாக திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டிருந்த இந்தச் சரணாலயம், 16.10.2007 செவ்வாய் கிழமைதான் மீண்டும் திறப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. மீளத் திறப்பதற்கு முந்தைய தினம் இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதானது, சுற்றுலாத்துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா சுற்றாலப் பயணிகளுக்குப் பாதுகாப்பான ஒரு நாடு அல்ல என்று கடந்த ஒரு வருடகாலமாக மேற்குலகம் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்த கட்டுப்பாட்டை பல நாடுகள் சில வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தியிருந்தன. அப்படி இருக்கையில் சிறிலங்காவின் மிகவும் பிரபல்யமான ஒரு சுற்றுலா மையம் தாக்கப்பட்டடுள்ளதுடன், காலவரையறை இன்றி அந்த மையத்தை மூடவேண்டிய ஒரு நிலையும் உருவாகியிருப்பதானது, சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத்திற்கு மாத்திரமல்ல, சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்கும் கூட ஒரு பெரிய அடியைக் கொடுத்துள்ளது. அரசியல் பாதிப்பு: அடுத்ததாக, இந்தத் தாக்குதல் இடம்பெற்ற நேரமானது சிறிலங்கா அரசியலில் ஒரு மிக முக்கியமான ஒரு காலகட்டம். 2008ம் ஆண்டிற்கான வரவு செயவுத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள காலகட்டம் இது. இந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டால, மகிந்த அரசாங்கம் ஒரு தோல்வியடைந்த அரசாங்கமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடும். முகிந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடும் காரியத்தைச் செய்வதற்குத்தான் எதிர்க்கட்சிகள் அதிக சிரத்தையாக திட்டமிட்டு வருகின்றன. வாழ்க்கைச் செலவுகள் உச்சத்தை எட்டி, நாடு முழுவதும் ஊர்வலங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகிந்த அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு- இராணு வெற்றிச் செய்திகள்தான். அப்படிப்பட்ட இந்த வெற்றி மாயையைத் தடுவிபொடியாக்கிவிடும் விதத்தில்தான் புலிகளின் இந்த யால இராணுவ முகாம் தாக்குதல் அமைந்துள்ளது. ஆரசியில்ரீதியாக மகிந்தவுடன் சவால்விடும் தரப்பிற்கு, மகிந்த தனது இராணுவ வெற்றி முகத்தைக் குணிந்தேயாகவேண்டிய ஒரு நிர்பந்தத்தை இந்த யால சரனாலயத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கின்றது. பயங்கரவாதச் சாயம்: அதிலும் குறிப்பாக இந்தத் தாக்குதல் விடையத்தில் மகிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வி என்னவென்றால், புலிகள் தென் இலங்கையில் உள்ள ஒரு மிகமுக்கிய பொருளாதார இலக்கைத் தாக்கியிருந்தும், இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதலாக உலகிற்கு அடையாளப்படுத்த முடியாமல் போயிருந்ததுதான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தோல்வி. ஏனெனில் முழுக்க முழுக்க ஒரு இராணுவ இலக்கைத் தேர்ந்தெடுத்து தாக்கியதன் மூலம்தான் புலிகள் இத்தனையையும் சாதித்திருக்கின்றார்கள். எப்படி வந்தார்கள்? அடுத்ததாக, தனது அடிமடிக்குள் வந்து வெற்றிகரமாகத் தாக்குதலை நடாத்திவிட்டு, பத்திரமாகத் திரும்பிச் சென்றுள்ள விடுதலைப் புலிகள், எப்படி வந்தார்கள் எப்படித் திரும்பிச் சென்றார்கள் என்று இன்னமும் சிறிலங்கா அரசிற்குத் தெரியாமல் இருப்பதுதான், சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பெரியதோல்வி. விடுதலைப் புலிகள் எந்த வழியாக வந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் என்று சிறிலங்காப் படையினரால் இதுவரை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. புலிகளின் தாக்குதல் அணி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இருந்து காட்டு வழியாக வந்து தாக்குதல் நடாத்திவிட்டு அதே வழியாகத் திரும்பிச் சென்றிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படை அணி ஒன்று தென்பகுதிக் கடல் வழியாகத் தரையிறங்;கி தாக்குதலை நடாத்திவிட்டு, கடல்வழியாகவே திரும்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொரு தரப்பு கூறுகின்றது. விடுதலைப் புலிகளால் மலையகத்தில் உருவாக்கப்பட்டுள்ள படைஅணி ஒன்று இந்தத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு, மீண்டும் மலையகம் சென்று மக்களுடன் மக்களாகக் கலந்திருக்கலாம் என்றும் படைத் தரப்பின் ஒரு பிரிவினர் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது. ஆனால் தனது முக்கியமான பிரதேசத்தில் நடைபெற்றுள்ள பாரிய தாக்குதல் ஒன்று எப்படி நடந்துள்ளது என்று தெரியாமல் படைத்தரப்பு குழம்பிக்கொண்டிருப்தென்பது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு இராணுவத் தோல்வி. ஆய்வாளர்களின் கருத்துக்கள்: வடபகுதியில் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு படையினர் தயாராகி வரும் நிலையில், தென்பகுதியில் புலிகள் நடத்தியுள்ள இந்த அதிரடித் தாக்குதலானது சிறிலங்கா படைத்துறைத் தலைமையை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது என்று கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணம் குடாக் கடலில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கடற்புலிகளின் தாக்குதலும், ஜால வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலும், சிறிலங்காப் படைத் தரப்புக்கு பாரிய அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிறிலங்கா படையினரின் தாக்குதல் வியூகத்தைக் குழப்புவதற்கான ஒரு உபாயமாக இத்தாக்குதலை புலிகள் நடத்தியிருப்பதாகவும், பாரிய தாக்குதல்; ஒன்றுக்குத் திட்டம் வகுக்கும் புலிகள், சிறிலங்கா படையினரின் கவனத்தைத் திருப்பவதற்கான ஒரு உபாயமாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சிறிலங்கா படைத்தலைமை நம்புவதாகவும் மேற்குலக நாட்டு இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என அரசாங்கம் கூறும் நிலையில், கிழக்குப் பகுதியிலிருந்து வந்தே ஜால முகாம் மீது தாக்குதலை நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றிக்கொண்டு செல்லக்கூடிய வல்லமையுடன் புலிகள் இருக்கின்றார்கள் என்ற செய்தியே இத்தாக்குதலின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் அந்த இராணுவ ஆய்வாளர் அரசாங்கத்துக்கு இது ஒரு அபாய எச்சரிக்கை எனவும் குறிப்பிட்டார். ஆக மொத்தத்தில், யால சரனாலய இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள இந்த அதிரடித் தாக்குதலானது, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுமொத்த இராணுவத் தந்திரோபாயத்தைமே தவிடுபொடியாக்கிவிட்டுள்ளது என்பதுடன், அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் வெகுவாகப் பாதித்துள்ளது என்பதில் எந்தவிதச் சந்தேகம் இல்லை. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




