| யுத்தத்தை தீவிரமாக்கப் போகும் தமிழ்ச்செல்வனின் கொலை |
|
|
| - சத்யன் - | |
| 4. November 2007 02:13 | |
அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதலால் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியிலும், படையினர் மத்தியிலும் உருவாகியிருந்த நம்பிக்கையீனத்தையும் மனச்சோர்வையும் போக்குவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு .ப.தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி சிறிலங்கா அரசுக்கு கைகொடுக்கத் தொடங்கியிருக்கின்றது . அதேவேளை, தமிழ்ச்செல்வனின் மரணம் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை முற்றாக இல்லாமல் செய்வதுடன், முழுஅளவிலான யுத்தம் ஒன்றுக்குகே இரு தரப்பினரையும் கொண்டுசெல்வதாக அமைந்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன.
தமிழ்ச்செல்வனின் திடீர் மறைவுச் செய்தி தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சிளயக் கொடுத்திருக்கும் அதேவேளையில் , தென்பகுதி சிங்களவர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுக்கும் ஒரு செய்தியாகவே வெளியாகியிருக்கின்றது . யால சரணாலயம் மற்றும் அநுராதபுர விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருந்த படையினருக்கு உற்சாகத்தையும் , நம்பிக்கையையும் கொடுப்பதற்கு இச்செய்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. அதேவேளையில், இதற்குப் பதிலடியாக புலிகளின் தாக்குதல் ஒன்று எந்தவேளையிலும் எந்த இடத்திலும் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தென்பகுதியிலும் , கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் அறிக்கை , யுத்த நிலைமை மேலும் தீவிரமடையலாம் என்ற சமிஞ்ஞையைக் காட்டுவதாகவே உள்ளது . தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல , புலிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழிக்கும் வரையில் தம்முடைய ந்வடிக்கைகள் தொடரும் என அவர் அறிவித்திருக்கின்றார். புலிகளின் முக்கியஸ்த்தர்கள் ஒவ்வொருவருடைய இருப்பிடங்களும் தமக்குத் தெரியும் எனவும் அவர்களை இலக்குவைத்து இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் கோதாபாய தெரிவித்திருக்கின்றார் . விமானப் படையினருடைய தாக்குதல்களில் பெருமளவுக்குப் பொதுமக்களே கொல்லப்பட்டுவந்த போதிலும், தமிழ்ச்செல்வனின் மரணம் தமது தாக்குதல்களை நியாயப்படுத்தலாம் என்ற நிலையை அரசாங்கத் தரப்புக்குக் கொடுத்திருக்கின்றது . ஆனால், நேற்றைய தாக்குதலைப் பொறுத்தவரையில் தமிழ்ச்செல்வனை இலக்குவைத்துத்தான் படையினர் தாக்குதலை நடத்தினார்களா அல்லது படையினர் எழுந்தமானமாக நடத்திய தாக்குதலுக்கு தமிழ்ச்செல்வன் இலக்கானாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது . நேற்றைய தாக்குதல் காலை 6.00 மணிக்கு நடத்தப்பட்டிருக்கின்றது. அதன்பின்னர் காலை 9.00 மணியளவில் படையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிளிநொச்சியிலுள்ள இரண்டு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றே தெரிவித்திருந்தது . இதனைவிட வேறு எந்தச் செய்தியும் நேற்று நண்பகல் வரையில் வெளியிடப்படவில்லை. நண்பகல் 1.00 மணியவிலேயே தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான செய்தி வன்னியிலிருந்து வெளியாகியது. அதுவரையில் தென்பகுதியில் இந்தச்செய்தி வெளியாகவில்லை . ஆக, படைத் தரப்பு விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்கு எனக்கருதிய ஒரு இடத்தை தாக்கியுள்ளார்களே தவிர அங்கு தமிழ்ச்செல்வன் இருந்திருப்பார் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது . கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்துக்கு முன்பாக அமைந்திருக்கும் அரசியல் செயலகத்தில் வைத்தே தமிழ்ச்செல்வன் கொலையுண்டிருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. புலிகளின் சமாதான செயலகம் மற்றும் அரசியல் செயலகம் என்பன தென்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், அரச , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வழமையாக வந்துசெல்லும் ஒரு இடமாகவே இருந்துள்ளது . இதனால், இது நன்கு அறியப்பட்ட ஒரு இடம் என்றுதான் சொல்லவேண்டும். விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத, சமாதான நடவடிக்கைகள் மற்றும் மக்களுடைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கான ஒரு இடமாகத்தான் இந்த அலுவலகம் இருந்துள்ளது . இந்தப் பகுதி சிறிலங்கா விமானப் படையினருடைய தாக்குதலுருக்குள்ளாகாமல் இதுவரையில் இருந்துள்ளது என்றால் அதற்கான காரணமும் அதுதான் . யுத்த நிலைமை தீவிரமடைந்த பின்னர் இப்போதுதான் முதல் தடவையாக அரசியல் செயலகம் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. அநுராதபுரத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளின் கைகளே மேலோங்கியிருக்கும் நிலையில் எதனையாவது செய்து இந்த நிலைமையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையிலேயே புலிகளின் அரசியல் செயலகம் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்கான ஒரு உபாயமாக தமிழ்ச்செல்வனின் கொலையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளையில், சமாதான விரும்பிகள் மத்தியிலோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகள் வட்டாரத்திலோ இது வரவேற்பைப் பெறும் ஒரு செய்தியாக இருக்கப்போவதில்லை. சமாதானப் பேச்சுக்களைப் பொறுத்தவரையில் , தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு பிரதானமானது. 1995 காலப் பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவின் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேச்சுக்களில் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் தமிழச்செல்வன்தான் . அதன்பின்னர் 2002 இன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் நடைபெற்ற பேச்சுக்களிலும் புலிகளின் சார்பில் முக்கிய பங்காற்றியவர் . இதனைவிட கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் அனைவருமே தமிழ்ச்செல்வனைச் சந்தித்திருக்கின்றார்கள். அந்த வகையில் கலாநிதி பாலசிங்கம் மறைந்து ஒரு வருடத்துக்குள் தமிழ்ச்செல்வனும் மரணமடைந்திருப்பது சமாதானத்துக்கான வாய்ப்புக்களையே இல்லாமல் செய்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். அதேவேளையில், தம்முடைய அரசியல் பொறுப்பாளரே கொல்லப்பட்டுள்ள நிலையில் முழு அளவிலான யுத்தம் ஒன்றுக்குச் செல்வதைவிட விடுதலைப் புலிகளுக்கும் வேறு தெரிவுகள் எதுவும் இருக்கப்போவதில்லை . போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலும், தமிழச்செல்வனின் மரணம் யுத்த நிலைமைகளை மேலும் தீவிரப்படுத்தலாம் என்ற கருத்தே வெளியிடப்பட்டிருக்கின்றது . இம்மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் வாரத்துக்கு முன்னதாக புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த சிறிலங்கா அரசாங்கம், தமிழ்ச்செல்வனின் மறைவையடுத்து பாதுகாப்பு நிலைமைகளை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது . வெறுமனே எழுத்திலுள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாகக் கிழித்தெறிவதாகவே தமிழ்ச்செல்வனின் கொலை அமைந்திருக்கின்றது. இந்த நிலையில், அடுத்துவரும் வாரங்களில் யுத்த நிலை தீவிரமடைவதைத்தான் காணக்கூடியதாக இருக்கும். கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதலால் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியிலும், படையினர் மத்தியிலும் உருவாகியிருந்த நம்பிக்கையீனத்தையும் மனச்சோர்வையும் போக்குவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு .ப.தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி சிறிலங்கா அரசுக்கு கைகொடுக்கத் தொடங்கியிருக்கின்றது . அதேவேளை, தமிழ்ச்செல்வனின் மரணம் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை முற்றாக இல்லாமல் செய்வதுடன், முழுஅளவிலான யுத்தம் ஒன்றுக்குகே இரு தரப்பினரையும் கொண்டுசெல்வதாக அமைந்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன.

