| விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைக்கும் சிங்கள வான்படை… |
|
|
| 22. November 2007 06:43 | |
|
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது
வீழ்த்துவோம்: பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா வான்படை விமானங்களின் தாக்குதலைத் தொடர்ந்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலயாளரும், சிறிலங்காவின் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் இருப்பிடங்களையும் நகர்வுகளையும் நாம் நன்கறிவோம். ஆவர்கள் தமது இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களை ஒவ்வொருவராக வீழ்த்துவோம்.." என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சிறிலங்காவின் பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் இதனையொத்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். இவை அனைத்தையும் விட, அண்மையில் சிறிலங்காவின் விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் ரொஷன் குணதிலக தெரிவித்த கருத்தானது, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன| என்று அவர் தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே சிறிலங்காவின் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே இவ்வாறு தெரிவித்திருந்தார். 'விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவார்கள். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது" - இவ்வாறு அந்த தொலைக்காட்சி செவ்வியில் ரோஷன் குணதிலகே தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா வான்படைத் தளபதியின் இந்தக் கூற்றை ஆமோதிப்பது போன்று, சில தினங்களுக்கு முன்னர் இந்திய ஆய்வாளர் ஒருவருடைய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. உக்ரேன் மற்றும் பாகிஸ்தானிய விமானிகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை இலக்குவைக்கக்கூடிய தாக்குதல்களை சிறிலங்கா விமானப் படையினர் தீவிரப்படுத்தியிருப்பதாக|, இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரும் இந்திய அமைச்சரவையின் முன்னாள் மேலதிகச் செயலாளருமான பி.இராமன் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தார். பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான கண்காணிப்பு நிலையம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும்| அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.புலம்பெயர் தமிழ் மக்களை அதிக கவலையடைச் செய்து வருகின்ற செய்திகள் இவைதான். அவர்களை இன்று அதிகம் அச்சமடைய வைத்திருக்கின்ற விடயமும் இதுதான். உயர்ரக குண்டுகள்: இது ஒருபுறம் இருக்க, வன்னியில் உள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் மீது வானில் இருந்து ஏவுவதற்கென்று சில உயர் ரக குண்டுகளை சிறிலங்கா வான்படை பெற்று வைத்துள்ளதாகவும், தென் இலங்கை இராணுவ மற்றும் ஊடக வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன. அவற்றில் இரண்டு முக்கிய வான் குண்டுகள் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. MOAB ( Massive Ordnance Air Burst என்று கூறப்படுகின்ற அதிக சக்தி வாயந்த உயர் ரக வெடிகுண்டுகளை வல்லரசு நாடொன்றிடம் இருந்து சிறிலங்கா பெற்றிருப்பதாக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேச்சடிபடுகின்றது. அதிலும் குறிப்பாக, BLU-82B ரக சக்தி வாயந்த குண்டுகளையும், GBU-28 ரக புற ஊதாக் கதிர்களால் வழிநடத்தப்படுகின்ற குண்டுகளையும் சிறிலங்கா அரசாங்கம் பெற்றிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. சிறிலங்கா வான் படையின் உயர் அதிகாரிகளிடம் இருந்தே குறிப்பிட்ட இந்த வான்குண்டுகளின் விபரங்கள் சில இராணு ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வன்னி மீது சிறிலங்கா வான் படை மேற்கொள்ள இருக்கும் தாக்குதல்கள், அதற்கான சாத்தியங்கள், அதன் எதிர் விளைவுகள் என்பன பற்றி நாம் பார்பதற்கு முன்னர், மேற் கூறப்பட்டுள்ள நவீன ரக வான் குண்டுகள் பற்றி மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லதென்று நினைக்கின்றேன். 07.10.2001 அன்று அமெரிக்கா துருப்புக்கள் அப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த சம்பவம் எங்களில் அனேகமானவருகளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓசாமா பின்லாடனையும், அல்கைதா தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு வழங்கிய தலிபான்களையும் அழித்தொழிக்கும் நோக்கத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா அப்கான் மீது ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை ஆரம்பித்தது. அப்பொழுது ஒசாமா, அல்கைதா, அப்கான் போராளிகள் அனைவரும் அப்பாகிஸ்தானிலுள்ள டோராபோரா மலைகளின் கீழ் இயற்கையாக அமைந்துள்ள குகைகள், சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்து கொண்டார்கள். இந்த நேரத்தில்தான் அமெரிக்கப் படைகள் புதிய வடிவிலான குண்டுகளை அறிமுகப்படுத்தியிருந்தன. அந்த குண்டின்; பெயர் டெய்சி கட்டர். (daisy cutter)மலைகள், நிலக் கீழ் சுரங்கப் பாதைகள் போன்றனவற்றை ஊடறுத்துச் சென்று, கீழே வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. டெய்சி கட்டர் என்ற இந்த வகை குண்டுகள் 15,000 இறாத்தல் (6800 கிலோ) ஏடை உடையது. வானில் அதி உயரத்தில் (சுமார் 6,000 அடிகளுக்கும் அப்பால்) பறந்துகொண்டிருக்கும் எம்.சி.-130 ரக விமானங்களில் இருந்து இந்தக் குண்டுகள் வீசப்படும். இது விழுந்து வெடிக்கும் இடத்தில் இருந்து 900 அடி சுற்றளவை முற்றாகவே நாசமாக்கிவிடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த டெய்சி கட்டர் குண்டு பற்றி அப்கான் யுத்த காலத்திலேயே வெளியே தெரியவந்திருந்தாலும் இதே வடிவிலான குண்டுகளை வியட்னாம் யுத்த காலங்களிலும் அமெரிக்கா உபயோகப்படுத்தியிருந்தது. அப்கான் யுத்த காலத்தில் இந்த வகை குண்டுகளை ‘டெஸ்சி கட்டர் குண்டுகள்’ என்ற பெயரிலும், ‘கொமாண்டோ வால்ட்’ (Commando Vault) என்ற பெயரிலும் அமெரிக்கா உபயோகப்படுத்தியிருந்து. மேற்கூறப்பட்ட இந்த ‘டெய்சி கட்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படும் குண்டுகளின் ஒரு இராணுவ குறியீட்டுப் பெயர்தான் BLU-82B ரக குண்டுகள். இந்த BLU-82B ரக குண்டுகளைத்தான் சிறிலங்கா தற்பொழுது பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதேபோன்று ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்த காலத்தில், நிலத்தின் கீழ் பாரிய, அதிக பாதுகாப்பான பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த ஈராக்கிய படையினரையும், அதன் முக்கியஸ்தர்களையும் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மற்றொரு நவீன குண்டுதான், புற ஊதா கதிர்களினால் வழிநடத்தப்படுகின்ற GBU-28 Bunker Burst (Guide Bomb Unit-28) ரக குண்டுகள். சுமார் 5,000 இறாத்தல் எடை உடைய இந்த வகை குண்டுகள், புற ஊதா கதிர்களினால் வழிநடத்தப்பட்டு, இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வல்லமை பொருந்தியவை. நிலத்திற்கு கீழே சுமார் நுரறு அடி ஆழத்தில், சுமார் 20 அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் ‘பங்கர்களை’ கூட தாக்கி அழித்துவிடும் வல்லமை பொருந்தியவை இந்த (hard Target penetrate bombs) வகை குண்டுகள். இந்த வகை குண்டுகளும் தன்னிடம் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் செய்திகளை கசிய விட்டிருக்கின்றது. உண்மையா?
சரி இனி விடயத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் வான் படையினாலும், அதன் இராணுவ ஆய்வாளர்களினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் எத்தனை தூரம் உண்மை, எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம். சரி இனி விடயத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் வான் படையினாலும், அதன் இராணுவ ஆய்வாளர்களினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் எத்தனை தூரம் உண்மை, எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.
முதலாவது அமெரிக்காவின் BLU-82டB ரக குண்டுகள் என்பது, அணு குண்டுகளுக்கு அடுத்த படியாக, பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதான குண்டுகள் என்று கூறப்படுகின்றன. சாதாரணமாக வெடி குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ரி.என்.டி. ரக வெடி மருந்துடன் 20 வீதம் அலுமினியத் துகள்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை குண்டுகள் அமெரிக்காவிடம் இருக்கின்ற நவீன ரக குண்டுகளுள் ஒன்று என்று கூறப்படுகின்றது. அதே போன்று ரஷ்யாவின் அண்மைய கண்டு பிடிப்பான, அனைத்தையும் விட பெரியதான குண்டு’ (Father of all bombs) என்று அழைக்கப்படுகின்ற குண்டுக்கு நிகரானதும், பிரித்தானியாவின் அதி சக்தி வாயந்த கண்டு பிடிப்பும், நில நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு என்று வர்ணிக்கப்படுகின்றதான T12 Cloud maker என்ற குண்டுடன் இணைத்துப் பேசப்படுவதுமான அமெரிக்காவின் ஒரு பெறுமதிவாய்ந்த கண்டுபிடிப்புத்தான் இந்த BLU-82B ரக குண்டுகள். இந்த வகை குண்டுகளை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது என்ற கூற்றில் சிறிதளவும் உண்மை இருக்க முடியாது.
அமெரிக்காவின் நீண்ட கால நண்பனும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு பெரிதும் துணை நின்ற நாடுமாகிய பாக்கிஸ்தான் விமானப் படைக்கு கூட, இந்த வகை குண்டுகளை அமெரிக்கா வழங்க முன்வரவில்லை. அப்படி இருக்க ‘கொசுறு’ சிறிலங்கா விமானப் படைக்கு இந்த வகை நவீன குண்டுகளை அமெரிக்கா வழங்கியிருக்கும் என்று கனவில் கூட யாரும் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. இதேபோன்றுதான், அமெரிக்காவின் GBU-28 Bunker Buster குண்டுகளும். மிக மிக அண்மையில், அதுவும், ஈராக் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னரே இந்த வகை குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. அதுவும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள Air Force Research Laboratory Munitions Directorate மற்றும் நியுயோர்க் மாநிலத்தில் உள்ள Watervliet Armory போன்ற ஆய்வு நிலையங்கள் இணைந்து பாரிய முயற்சிகளின் பின்னர் கண்டுபித்த தொழில்நுட்பத்தைக் கொண்டதுதான் இந்த GBU-28 Bunker Buster குண்டுகள். இவற்றை சிறிலங்கா போன்ற ஒரு ஜுஜுபி’ நாட்டிடம் கொடுத்து வேடிக்கை பார்பதற்கு அமெரிக்கா ஒன்றும் முட்டாள் கிடையாது. இந்த வகை குண்டுகள் சிறிலங்கா விமானப் படை வசம் இருக்கின்றன என்று கசியவிடப்பட்ட செய்திகள் வெறும் புரளியே தவிர வேறில்லை. எதற்காக?
இந்த இடத்தில்தான் பல கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. சிறிலங்காத் தரப்பின் மிகைப்படுத்தப்பட்ட அறைகூவல் வெளித்தெரிகின்றன. தன்னிடம் இல்லாத ஆயுதங்களைப் பாவித்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை அழிக்கப்போவதாக சிறிலங்கா இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் எதற்காக அறிக்கை விடவேண்டும்? விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தங்கும் இடங்கள் தமக்குத் தெரியும் என்று பசில் ராஜபக்ஷ கூறுகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருக்கும் இடம் சிறிலங்கா விமானப் படைக்கு தெரியும் என்று சிறிலங்கா விமானப் படைத் தளபதி ரொஷன் குணதிலக தெரிவிக்கின்றார். முக்கியஸ்தர்கள் பதுங்கியிருக்கும் பங்கர்கள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் தாக்கியழித்துவிடக் கூடியதான குண்டுகள் சிறிலங்காப் படைகளிடம் உண்டு என்றும் சிறிலங்காவின் இராணுவ ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். அப்படியானால் அந்தக் காரியத்தை ஏன் இன்னமும் நீங்கள் செய்யவில்லை? விடுதலைப் புலிகள் முக்கிஸ்தர்களின் தங்குமிடமும் தெரிந்து, அவர்களைத் துல்லியமாகத் தாக்கியழிக்கும் வல்லமையும் சிறிலங்கா படைத்தரப்பின் வசம் இருந்தால், எப்பாடுபட்டாவது அதனை நிறைவேற்றி விட்டுத்தான் அவர்கள் மறுவேலை பார்த்திருப்பார்கள். நிச்சயமாக ஊடகங்களில் அறிக்கை விட்டுப் பூச்சாண்டி காண்பித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையைப் பார்பவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் இருப்பிடங்களையும் நகர்வகளையும் நாம் நன்கறிவோம்’’ என்று கூறிய கோத்தபாய, 'அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களை மாற்றி அமைக்கவேண்டும். அல்லாவிடில் அவர்களை ஒவ்வொருவராக வீழ்த்துவோம்.’’ ஏன்று தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார். சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணம் இதிலிருந்து வெளித் தெரிகின்றது. அதாவது விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் தங்களது பாதுகாப்பான இடங்களை கைவிட்டு புதிய இடங்களுக்கு மாற வேண்டும் என்று சிங்களத் தலமை விரும்புகின்றது. அதாவது, பாரிய தாக்குதல் ஒன்றிற்காக விடுதலைப் புலிகளிள் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்ற தயாரிப்பு வேலைகள், பயிற்சிகள் அனைத்தையும் இடைநிறுத்தி விட்டு, புதிய பங்கர்களை அமைக்கும் பணிகளில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்’ என்று சிறிலங்கா தலைமை கூறுகின்றது. சிங்களத்தினது அறைகூவலின் உள்நோக்கம் இப்பொழுது உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.இன்றைய போரியலில், “உளவியல் போர்” என்பது ஒரு முக்கியமான போராக நோக்கப்பட்டு வருகின்றது. எதிரியைக் குழப்பி, அவனை அச்சமடைய வைத்து, அவனை எந்த நேரமும் ஒரு தற்காப்பு நிலைக்குள்ளேயே வைத்திருப்பதென்பது, உளவியல் போரில் ஒரு முக்கிமான அம்சம். புலித் தலைவர்களை குறிவைத்துள்ளதாகக் கதை விட்டு, ஒருவித உளவியல் போரை தமிழர் தரப்பின் மீது திணித்துவிடும் முயற்சியில்தான் சிங்களம் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றது. துல்லியம்
சரி இனி மற்றொரு விடயத்தைப் பார்ப்போம்.
அமெரிக்கா வசம் இருக்கின்றதான முக்கிமான, அதி சக்தி வாய்ந்த குண்டுகள் பற்றி நாம் மேலே பார்த்திருந்தோம். ஏராளமான வேவு விமானங்கள், ஏராளமான செய்மதிகள், அதி உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான விமானங்கள்…. இவை அனைத்தினதும் உதவியுடன், மேற்கூறப்பட்ட அதி சக்திவாய்ந்த குண்டுகளை அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், யுக்கொஸ்லாவியாவிலும் அமெரிக்கா வீசி இருந்தது.
ஆனால், இத்தனை தொழில் நுட்பத்தின் உதவியுடனும் உலக வல்லரசான அமெரிக்காவினால் வீசப்பட்ட அந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகளின் துல்லியத்தன்மை எத்தனை தெரியுமா?
வெறும் 28 வீதம் மட்டும்தான். அதிக பட்சம் 40 வீதம் துல்லியத் தன்மையுடன்தான்; இலக்குகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அப்படி இருக்க, வெறும் கிபிர், மிக் விமானங்களில், சாதாரண குண்டுகளை பொருத்திக்கொண்டு வீரம்பேசும்; சிறிலங்கா வான்படையின் வாய்சவடால் ரொம்ப ஓவர். பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் மீதான வான்தாக்குதல் என்பது எதிர்பாராத ஒன்று. அனைவரும் அறிந்து, நன்கு வெளித்தெரிந்த ஒரு இலக்கின் மீது சிறிலங்கா வான்படை மேற்கொண்ட தாக்குதலில் எதிர்பாராமல் திரு.தமிழ்செல்வன் அகப்பட்டுக்கொண்டார். அவ்வளவுதான். ஆனால் புலிகளின் தலைவர்களை ஒவ்வொருவராக தாக்கியழிப்பது என்று சிங்களம் சவால் விடுவது என்பது, சிறிலங்கா வான்படை வசம் உள்ள பலம், திறமை, துல்லியம் என்கின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுமக்கள் மீதும், பாடசாலைச் சிறுமிகள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், தேவாலயங்கள் மீதும், ஏன் சொந்தப் படைகள் மீதும் கூட குண்டுகளைப் வீசும்; கையாலாகாத சிறிலங்கா வான்படையிடம், இந்த பலம், திறமை, துல்லியம் என்கின்ற விடயம் எல்லாம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பெரிய கேள்விதான். ஒப்பரேசன் செக்மேட்: இந்த இடத்தில் இன்னுமொரு உதாரணத்தையும் பார்த்துவிடுவோம். இந்தியப் படை காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை அழிப்பதற்கு என்று மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை இன்றுள்ள சந்தர்ப்பத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 1988 இல், விடுதலைப் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு என்று, இந்தியப் படைகள் பாரிய எடுப்பில் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. முதலாவது: ‘ஒப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul) இரண்டாவது: ‘ஒப்பரேசன் வீரத் (Operation Viraat) மூன்றாவது: ‘ஒப்பரேசன் செக்மேட் (Operation Check-mate) ஒப்பரேசன் திரிசூல்’ 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. ‘ஒப்பரேசன் வீரத்’ அதே வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. தேசியத் தலைவரைக் குறிவைத்து வடபகுதி முழுவதுமாக இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கு ‘ஒப்பரேசன் செக் மேட்’ என்று பொதுவான பெயரிடப்பட்டிருந்தது. செக் மேட்: என்கின்ற வார்த்தை சதுரங்க(Chess) விளையாட்டில் உபயோகிக்கப்படுவது வழக்கம். சதுரங்க விளையாட்டின் இறுதியாக ஒரு தரப்பில் உள்ள ராணிக்கு எதிரி குறிவைத்து, அந்த ராணி நகர முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பத்தை ‘செக்மேட்’ (Check- mate) என்று கூறுவார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரும் எங்குமே நகர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்தியப் படையினரின் கைகளில் அகப்படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியுமே இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த படை நடவடிக்கைக்கு இப்படியான ஒரு பெயரை இந்தியப் படைத்துறைத் தலைமை சூட்டியிருந்தது. “புலிகளின் தலைவர் ஒன்று தம்மிடம் சரணடைய வேண்டும்…, அல்லது சயனைட்டை உட்கொண்டு; தற்கொலை செய்யவேண்டும்… - இரண்டையும் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது” என்று இந்தியப் படைத் தளபதிகள் இந்திய அரசியல் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். அந்த அளவிற்கு புலிகளின் தலைமையை நோக்கி முற்றுகைகள் இறுகியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். புலிகளின் தலைவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த முற்றுகைகளில் இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் இந்திய இராணுவம் என்பன முழுப்பலத்துடன் இறக்கப்பட்டிருந்தன. இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள். ஏதாவது ஒரு வளைத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். சண்டைகள் ஆரம்பமான போதுதான், புலிகளின் தலைவரைப் பிடிப்பதென்பது தாம் நினைத்த அளவிற்கு இலகுவான ஒரு காரியம் அல்ல என்று இந்தியப் படையினருக்குப் புரிந்தது. புலிகளின் தலைவரைப் பிடிப்பதாகக் கூறிக் களம் இறங்கிய குர்க்காப் படையினரின் இரத்தம் வன்னி மண்ணுக்கு உரமாகிக்கொண்டு இருக்க, புலிகளின் தலைமை நெருங்குவது இந்தியப் படைக்கு கனவாக மாறிக்கொண்டிருந்தது. அந்தப் படை நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தவர் லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். ஈழத்தில் இவர் நிகழ்த்திய வீரத்திற்காக பின்நாளில் இந்திய அரசின் உயர் விருதான ‘வீர் சக்ரா’ (Vir Chakra) விருதைப் பெற்ற ஒரு பெரிய வீரர். அப்படிப்பட்ட லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். ஒரு சந்தர்பத்தில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ‘விடுதலைப் புலிகளின் தலைவரையும், அவருடன் இருந்த போராளிகளையும் குண்டு வீசி அழித்துவிடும்படி’ அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்திகள், பதினைந்திற்கு மேற்பட்ட மிராஜ்- 2000 மிகையோலி குண்டு வீச்சு விமானங்கள், சுமார் ஐந்து வேவு விமானங்கள், முல்லைத்தீவு-திருகோணமலை கடல் எல்லையைக் காவல் செய்தவாறு சுமார் எட்டுப் போர்க்கப்பல்கள், இருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப் படகுகள் - இவைகள் அனைத்திலும் இருந்து ஒரே நேரத்தில் சகட்டு மேனிக்கு குண்டுகள் வீசப்பட்டன. அதுவும் வன்னியின் ஒரு சிறு வனப் பகுதியான நித்திகைக்குள காடுமீது, சக்திவாய்ந்த குண்டுகள் நுற்றுக் கணக்கில் அல்ல, ஆயிரக் கணக்கில் வீசப்பட்டன. ~கார்பெட் பொம்பிங்’ (Carpet Bombing) என்று கூறப்படுகின்றதான, குண்டுகளினாலான படுக்கைஇந்தியப் படையினரால் அந்தப் பிரதேசத்தில் விரிக்கப்பட்டன. ஆனால் உறுதியும், நேர்மையும், உண்மையும் தமிழ் மக்களின் உணர்வும்| அன்று அங்கு வெற்றி பெற்றது. அன்று நித்திகைக்குளக் காட்டின் மீது தாக்குதல் நடாத்திய இந்தியாவின் போர்க் கலங்களுடன் ஒப்பிடும் போது, இன்று சிறிலங்காவின் வசம் இருக்கின்ற கலங்கள் என்பது மிக மிகச் சிறியன. பல மடங்கு குறைந்த சக்தி கொண்டன. ஆனால் அந்த நித்திகைகுளச் சண்டைக் காலத்துடன் ஒப்பிடும் பொழுது, இன்று விடுதலைப் புலிகள் வசம் இருக்கின்ற வளங்கள் என்பன, கற்பனைக்கெட்டாத அளவு பாரியவை. இத்தனை வளங்களுடன், அன்றிருந்த அதே உறுதியும், நேர்மையும், உண்மையும் தமிழ் மக்களின் உணர்வும்தான்’ இன்றும் வன்னியில் இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, சிறிங்காவின் வான்படையினால் அங்கு எதனைப் பெரிதாகச் சாதித்துவிடமுடியுமென்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




