| வடக்கில் போரைத் தீவிரப்படுத்துவதா? தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதா? |
|
|
| தினக்குரல் பத்திரிகைக்காக விதுரன் | |
| 9. December 2007 18:18 | |
|
கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கில் தனது முழுப் பலத்தையும் பிரயோகிக்க முனைகிறது. விமானக் குண்டுவீச்சுக்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள், ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களென வடபகுதி தினமும் சின்னாபின்னமாகின்றது. அச்சத்தின் மத்தியிலேயே அந்தப் பகுதி மக்கள் வாழ்கின்றனர். வடக்கில் பாரிய யுத்தத்தை நடத்தியவாறு தெற்கை பாதுகாக்க அரசு முனைகிறது. வடக்கு - கிழக்கே யுத்தமுனையென்பதால் அங்கு எந்த அழிவையும் மேற்கொள்ளலாமென்ற எண்ணம் காலாகாலமாக அரசுகளின் மத்தியில் உருவாகிவிட்டது. வடக்கு - கிழக்கிலிருந்து வெளியே புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களானது கோழைத்தனமானவையெனவும் அப்பாவி மக்களை இலக்காகக் கொண்டவையெனவும் அரசு கூறுகின்றது. வடக்கு - கிழக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் அரசு தெற்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது மிக மோசமான பயங்கரவாதமென்கிறது. வடக்கு - கிழக்கு யுத்தமுனையென்றால் அந்த யுத்தத்தை அரசு தெற்கிலிருந்தே நடத்துகிறது. வடக்கு - கிழக்கில் யுத்தத்தை மேற்கொள்வோர் தெற்கிலிருந்தே செல்கின்றனர். கொழும்பிலிருந்தே அரசு இயந்திரம் செயற்படுவதால் யுத்தம் கொழும்புக்கும் தெற்கிற்கும் எப்போதோ வந்துவிட்டது. கடந்த 25 வருடமாக யுத்தத்தின் கொடுமைகளை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். பெரும் உயிரழிவுகள் சொத்தழிவுகள் என்பதுடன் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் அகதிகளாகிவிட்டனர். உரிமைப் பிரச்சினைக்காக போராடத் தொடங்கிய மக்கள் இன்று உயிர் வாழ்வதே பிரச்சினையென்றாகிவிட்டது. சொந்த மக்களென்றும் பாராது காலாகாலமாக சிங்கள அரசுகள் தமிழர்களுக்கெதிராக மிகக் கொடூரமான யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எதிரி நாடொன்றுடன் போரிடுவது போல் சொந்த மக்களுடன் போரிடுகிறது. தமிழர்களின் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்களப் பிரதேசங்களாக்க இனவாதிகள் துடிக்கின்றனர். இதனால், தமிழ் பகுதிகளில் இடம்பெற்ற யுத்தம் இன்று சிங்களப் பகுதிவரை விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் யுத்தம், வடக்கு - கிழக்கில் தான் நடைபெற வேண்டுமென்ற நியதியில்லை. தெற்கிலிருந்து படையெடுப்போர் வடக்கு - கிழக்கை ஆக்கிரமித்து வருகையில் வடக்கு - கிழக்கில் புலிகள் பலம்மிக்கவர்களாக மாறிவிட்டால் யுத்தம் தென்பகுதியை நோக்கித் திசை திரும்புமென்பது சாதாரண விடயம். பலம், பலவீனத்தை அடக்க முற்படுவதால் யுத்த முனைகளும் இடம்மாறுகின்றன. தமிழர்கள் சந்தித்த பேரழிவுகளை சிங்களவர்களும் சந்திக்கத் தொடங்கும் போதும் உண்மையான பிரச்சினையை அவர்கள் உணரத் தொடங்குவர். தெற்கில் கொலைகள் விழும்போது வடக்கில் என்ன நடக்கிறதென்ற உண்மை தெரியவரும். தங்கள் சொந்த இடங்களை விட்டு ஒவ்வொருவரும் வெளியேறும் போதுதான், வடக்கு - கிழக்கில் தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டோரின் அவலம் தெரியவரும். இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான். காலச்சக்கரம் சுழல்கிறது. அழிவுகளும் இடம்மாறுகிறது. இது படிப்பினையாக இருக்குமானால் எங்கும் அழிவுகள் ஏற்படாது. இங்கு ஏற்படும் அழிவுகளைத் தடுக்க வேண்டுமானால் அங்கு ஏற்படும் அழிவுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு எவராவது இடம்பெயரக் கூடாதென்றால் அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டுமென்ற உணர்வு அடிமட்டத்திலிருந்து ஏற்படுமானால் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடும். வடக்கு - கிழக்கைப் போன்றே தெற்கிலும் இன்று நிலைமை உருவாகி வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெறும் தாக்குதல்களையடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தலால் மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்கவும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தி அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை மிகவும் ஸ்திரமாயிருக்கிறதெனக் காட்ட வேண்டிய நிலையில் அரசும் படைத்தரப்பும் இருக்கின்றன. வன்னியில் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றது. ஆழ ஊடுருவும் படையணிகள் வன்னிக்குள் ஊடுருவி பொதுமக்களை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்துவதால் மக்களுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுவதுடன், அந்த மக்கள் அச்சத்தாலும் பீதியாலும் சொந்த இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறுகின்றனர். ஒருபுறம் மோசமான யுத்தம். அதனைச் சாட்டி நடைபெறும் விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களின் மத்தியில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதலால் மக்கள் நடைப்பிணங்களாகிவிட்டனர். வன்னிக்குள் ஆழஊடுருவும் படையணிகள் புலிகளின் தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைக்க முடியாவிடினும் பொதுமக்களை இலக்கு வைப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதே படையினரின் திட்டம். அத்துடன் வன்னிக்குள் ஊடுருவும் படையினரைக் கூட தடுக்க முடியாத நிலையில் புலிகள் பலவீனமடைந்து விட்டதொரு நிலையிலிருப்பது போல் காண்பிப்பதே படைத்தரப்பின் நோக்கமாகும். இவ்வாறானதொரு நிலைதான் இன்று, வடக்கிற்கு வெளியே சிங்களப் பகுதிகளில் தோன்றியுள்ளது. தெற்கில் யால, திஸ்ஸமகராம, மற்றும் ஜனாதிபதியின் சொந்த இடமான அம்பாந்தோட்டையிலும், மேற்கில் தலைநகர் கொழும்பிலும், வடமேற்கில் அநுராதபுரத்திலும் வடக்கு - கிழக்கிற்கு இடையில் மணலாறை அண்டிய கெப்பிற்றிகொல்லாவையிலும் இடம்பெறும் தாக்குதல்கள் சிங்கள மக்களை பெரும் அச்சத்திற்குள்ளும் பீதிக்குள்ளும் ஆழ்த்தியுள்ளது. புலிகளே இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக படைத்தரப்பு கூறுவதால், தெற்கே ஊடுருவும் புலிகளைத் தடுக்க முடியாத நிலையில் படையினர் பலவீனமடைந்து விட்டார்களோ என்றதொரு அச்சநிலையை, அண்மைக்கால தாக்குதல்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வன்னிக்குள் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொள்ளும் தாக்குதல்களானது புலிகளுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும் நோக்கம் கொண்டது. புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்களை மட்டுமன்றி பொதுமக்களின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தி அந்தப்பிரதேசங்களில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதுடன் மட்டுமல்லாது படையினர் எந்த நேரத்திலும் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிடுவரென வன்னிப் பகுதி மக்களுக்கு செய்தியொன்றைத் தெரிவிக்கும் நோக்கமும் கொண்டது. இதேபோன்றே தெற்கில் இடம்பெறும் கிளேமோர் தாக்குதல்களும் குண்டுவெடிப்புக்களும் அரசுக்கும், படையினருக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசுத் தலைவர்கள் மற்றும் படைத்தளபதிகளின் நடமாட்டங்களை மட்டுமன்றி சிங்கள மக்களின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தி அந்தப் பிரதேசங்களில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாது, புலிகள் எந்த நேரத்திலும் தெற்கில் எவ்வாறான தாக்குதல்களையும் நடத்தக்கூடியவர்களென்ற செய்தியை தென்பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கம் கொண்டது. தெற்கில் சிங்கள மக்களுக்கெதிராக `மெல்லக் கொல்லும்' தாக்குதல்களை புலிகள் ஆரம்பித்திருப்பதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. வடக்கு - கிழக்கில் தினமும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல், விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களென தமிழ் மக்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்படுகையில் தெற்கில் சிங்களவர்களை `மெல்லக் கொல்லும்' தாக்குதல்களை புலிகள் ஆரம்பித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். யாழ்.குடாநாட்டில் மட்டும் கடந்த ஒன்றரை வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறையிலும் இதுபோன்ற படுகொலைகள் தினமும் தொடர்கிறது. வடக்கு - கிழக்கில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் கடத்தப்பட்டோர், காணாமற் போனோர் தொகை 4000 இற்கும் அதிகம். படையினரும் அவர்களோடிணைந்து இயங்கும் குழுக்களுமே இவற்றுக்குக் காரணமென பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இவ்வாறானதொரு நிலை தெற்கில் இன்னமும் தோன்றாவிடினும் தற்போது தெற்கில் இடம்பெறும் சம்பவங்கள் இவ்வாறானதொரு நிலையை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அதைவிட கடத்தப்பட்டும் காணாமல் போனோரின் எண்ணிக்கையுள்ளது. இவையெல்லாம் இதுவரை தமிழ் மக்கள் தலைநகரில் அனுபவித்த இன்னல்கள். இவ்வாறானதொரு நிலைமை தங்களுக்கேற்பட்டு விடுமோ என்ற அச்சம் இன்று தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வடக்கில் இடம்பெறும் மோசமான சம்பவங்களின் தாக்கம் தற்போது தெற்கில் உணரப்படுகிறது. எனினும், தெற்கில் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் ஓட்டையால் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இடம்பெறும் தாக்குதல்களைத் தடுக்க முடியாத நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. யாலவில் இராணுவ மினி முகாமொன்றை புலிகள் தாக்கிய பின் அம்பாந்தோட்டையிலும் திஸ்ஸமகராமவிலும் இடம்பெற்ற சம்பவங்கள் அங்கு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டது. இது அரசுக்கும் படையினருக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. மக்கள் அச்சத்தால் இடம்பெயரும் நிலையுருவானது. ஜனாதிபதியின் சொந்த மண்ணில், புலிகள் நடத்திய தாக்குதல்களால் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகக் கூடாதென்பதில் அரசும் படைத்தரப்பும் தீவிரம் காட்டின. புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தாவிடினும் மக்களின் அச்சத்தையும் பீதியையும் தணித்து அவர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டிய கட்டாய நிலை தோன்றியதால், அங்கு மேலதிக படைகள் குவிக்கப்பட்டு புதிதாக ஊர்காவல் படைக்கு ஆட்கள் திரட்டப்பட்டும் அங்கு அச்சமும் பீதியும் நிலவுகிறது. இங்கேற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கிடையில் அநுராதபுரம் மாவிலாச்சி பகுதியில் நான்கு விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட அங்கு நிலைமை மோசமடைந்தது. ஏற்கனவே, அநுராதபுரம் விமானப் படைத்தளத்தை புலிகள் முற்றாகத் துவம்சம் செய்திருந்த நிலையில் வில்பத்து சரணாலயத்தின் எல்லையில் மாவிலாச்சியில் நடைபெற்ற சம்பவம் மக்களை மேலும் பீதியடையச் செய்தது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து அந்த மாவட்டத்தில் முதல் தடவையாக அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டிருந்த போதும், மாவிலாச்சி சம்பவம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தவே ஊர்காவல் படைகள் அமைக்கப்பட்டு ஆட்களை திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொழும்பில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடிக்கவே தலைநகரின் பாதுகாப்பு கேள்விக் குறியானது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கைது செய்யப்பட அது சர்வதேச ரீதியில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. கொழும்பிற்குள் புலிகள் மேலும் தாக்குதல்களை நடத்தலாமென எச்சரிக்கப்பட்டு வருகிறது. படைநிலைகளையும் கேந்திர முக்கிய நிலைகளையும் எப்படிப் பாதுகாப்பதென அரசும் படைத்தரப்பும் திகைத்துப் போயுள்ளன. நிலைமை இவ்வாறிருக்கையில் கெப்பிற்றிகொல்லாவவில் கடந்த புதன்கிழமை பயணிகள் பஸ் ஒன்று கிளேமோர் தாக்குதலுக்கிலக்கானது. இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட இப்பகுதியின் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டு பிரதான வீதிகளில் படையினர் நிறுத்தப்பட்டும் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது எல்லைக் கிராமங்களில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களையடுத்து, மக்கள் இடம்பெயரும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளதால் மக்களைத் தடுத்துநிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர மேலும் பெருமளவு படையினர் தேவைப்படுகின்றனர். இது, யுத்தமுனையில் படையினருக்கு பலத்த தட்டுப்பாட்டை உருவாக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. கெப்பிற்றிகொல்லாவ தாக்குதலையடுத்து மணலாறில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணலாறு மற்றும் அநுராதபுரம் எல்லைப் பகுதியில் 300 இற்கும் மேற்பட்ட விஷேட பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதுங்குகுழிகளில் பெருமளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதைவிட எல்லைப்புற பாதுகாப்புக்காக முடிந்தவரை மணலாறிலும் அநுராதபுரத்திலும் ஊர்காவல் படைக்கு ஆட்களைத் திரட்டும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இராணுவத் தளபதி உட்பட சிரேஷ்ட படை அதிகாரிகள் அடிக்கடி இப் பகுதிக்கு விஜயம் செய்து மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அச்சத்தால் இடம்பெயர்வதைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து, பெருமளவு படையினர் இந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 50 இற்கும் குறைவான புலிகள் இந்தப் பகுதிகளில் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுகையில் 5000 இற்கும் மேற்பட்ட படையினர் இந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப்புறங்களில் திரும்பும் திசையெங்கும் படையினரை நிறுத்தினால் மட்டுமே மக்களின் அச்சத்தை போக்க முடியுமென அரசு கருதுகின்றது. தெற்கில் புதிதாகத் தோன்றியுள்ள நிலைமையும் வடக்கில் யுத்த முனைகளில் ஏற்படும் இழப்புக்களும் படையினருக்கு பெரும் ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பியோடிய பல்லாயிரக்கணக்கானோருக்கு மீண்டும் மீண்டும் பொது மன்னிப்பை வழங்கி அவர்களில் குறிப்பிட்டளவானோரை திருப்பி அழைத்துவிட மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. புதிதாக இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியும் எதிர்பாராத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் யுத்தமுனையில் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் கொழும்பிலும் தென் பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய நிலை அரசுக்கேற்பட்டுள்ளது. தற்போது கொழும்பின் பாதுகாப்புக்காக 20,000 இற்கும் மேற்பட்ட படையினருடன் பொலிஸாரும் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், பொருளாதார நிலைகளும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் தாக்குதல்களுக்கிலக்காகலாமென்ற அச்சத்தால் மேலும் மேலும் படையினரைத் தருவிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால், இராணுவத்தில் 12 வருடகாலம் சேவையாற்றி சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களை மீண்டும் கடமைக்கு திரும்புமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. யுத்தமுனைகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள், கொழும்புநகரின் பாதுகாப்புக்கே அவர்கள் அமர்த்தப்படுவரெனவும் அரசு உறுதியளித்துள்ளது. எனினும், அதற்கும் சரியான பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு கொழும்பின் பாதுகாப்பு நிலையிருக்கையில் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கிற்கு வெளியே எல்லைப்புறப் பகுதிகளிலும் கொழும்பிலும்தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தலேற்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைகுறித்தே அரசு சிந்திக்கின்றது. அதேநேரம், தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் புலிகள் ஊடுருவிவிட்டதால் மேலும் பல பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெறும் வாய்ப்புக்களிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் படையினர் தங்கள் கவனத்தை செலுத்துகையில் புலிகள் தெற்கில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு போர்முனையில் தினமும் உக்கிர சமர் நடக்கையில் ஆழ ஊடுருவி மேற்கொள்ளும் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இதுவரை நாளும் படையினரே ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதில் தீவிரம் காட்டி வந்தனர். தற்போது புலிகளும் இதனை ஆரம்பித்துள்ளதால் அரசும் படைத்தரப்பும் திகைத்துப் போயுள்ளன. வடக்கில் போரைத் தீவிரப்படுத்துவதா அல்லது தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதா என்பது குறித்து உறுதியான முடிவை எடுக்க முடியாது அரசு தடுமாறுகிறது.புலிகளின் தலைமையை அழிக்க வடக்கில் விமானத் தாக்குதலையும் ஆழ ஊடுருவும் தாக்குதலையும் தீவிரப்படுத்த வேண்டுமென படைத்தரப்பு கூறுகிறது. இது பொது மக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகின்ற போதும் இது குறித்து அரசு சிறிதும் கவலைப்படுவதாயில்லை. சர்வதேச சமூகமும் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது அரசுக்கு வாய்ப்பாகிவிட்டது. இந்த நிலையில் வடக்கில் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க தெற்கிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்த வேண்டுமென்றதொரு நிலைக்கு தற்போது புலிகள் வந்துள்ளனர். இதனால், வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் நிலைமை மோசமடைவதை தடுக்க முடியாது போய்விடும் நன்றி தினக்குரல் கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




தெற்கில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வடக்கில் புலிகளின் கடும் சவால்களை படையினர் சந்தித்து வருகையில் கொழும்பிலும் தெற்கிலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலானது வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து விடலாமென்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

