| ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திரமும் தமிழீழ எல்லையும் |
|
|
| மதி | |
| 12. February 2008 19:59 | |
ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை கடந்த 04.02.2008 கொண்டாடியது. அன்னியரின் பிடியிலிருந்து இலங்கைத் தீவை இலங்கையில் பூர்வீக வாழ் மக்களிடம் அன்னியரால் கையளிக்கப்பட்ட நாள் 04.02.1948. இந்த நாள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். அது மட்டுமல்லாமல் இந்த நாளிற்கு முன் சிங்கள இனவாதிகளால் இரகசியமான வழிமுறையில் உரிமைகள் பறிப்புக்குள்ளாக்கப்பட்டன.
ஆனால்... ஸ்ரீலங்காவின் சுதந்திரம் கிடைக்கப்பட்ட நாள் தொடக்கம் கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிங்களப்பேரினவாதிகள் பலவழிகளிலும் ஒடுக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றனர். இதன்மூலம் இலங்கைத் தீவிற்குள் பூர்வீகமாக வாழ்ந்த தங்களைத் தாங்களே ஆண்ட ஈழத்தமிழர் அழிவிற்குள்ளாக்கப்பட்டனர்.
ஈழத்தமிழினம் சுதாகரித்துக் கொண்டு அறவழியில் அமைதியாக உரிமை கேட்டது. அதனை ஆயுதமுனையில் அடக்கி விடலாமேன கங்கணம் கட்டி தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதிகள் தொடந்தும் அழிவை செய்ய முடியாதவாறு தடுத்த்தாட் கொண்டனர் ஈழத்தமிழர். அவர்க்களின் உரிமைப் போராட்டம் உலகின் முன் அரங்கேறியுள்ள இன்றைய காலகட்டத்திலும் தமிழரை நிம்மதியாக வாழ முடியாது சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
சிலவேளை ஸ்ரீலங்காவின் சுதந்திர நாளை முன்வைத்து எழுத்துருவாக்கம் ஒன்று தேவை தானா என யாரிற்காவது கேள்வியெழுந்தால் தொடர்ந்தும் படியுங்கள் பலவிடயங்களை அறிந்து கொள்வீர்கள். அறுபது ஆண்டுகளாக ஆட்சியின் உயர்பீடத்தை அலங்கரித்த பல சிங்களத்தலைவர்கள் பதவியைப் பாதுகாத்த அளவிற்கு நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை எனத்தான சொல்லவேண்டும்.
அறுபதாண்டுகளாக விலைவாசி உயர்ந்துள்ளதென பல சிங்கள நாளேடுகளும் கேலிச்சித்திரங்களூடாக இதனை விபரித்திருந்தன. இதற்கு பதிலளிப்பது போலவோ தெரியவில்லை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச “பயங்கரவாத்தையும், வறுமையையும் ஒழிப்பேன்” என அவரின் உரையில் சூளுரைத்துள்ளார். உண்மையில் பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றால் அதன் அர்த்தம் ஈழத்தமிழரை ஒழிப்பேன் என்பது தான். எனவே ஈழத்தமிழரை ஒழிக்கப் பணத்தை கொட்டினால் ஸ்ரீலங்காவின் வறுமையை ஒருபோதும் ஒழித்து விட முடியாது. சிங்கள நாளேட்டில் மிகத் தீவிரமாக இனவாதத்தை கக்கும் “தினமின”வில் மட்டும் வித்தியாசமான கேலிச்சித்திரமொன்று காணப்பட்டது. கட்டிமொன்றில் கம்பீரமாக சிங்க்க்கொடி பறக்க அதன் கீழ் புலியொன்று எலும்புகளைப் பார்ப்பது போல்... இவர்களால் தினமினவில் சிங்க்க் கொடியை கம்பீரமாக பறக்கவிட்ட அளவிற்கு அன்றைய நாள் சிங்கக் கொடியை பறக்கவிட முடியாத புறச்சூழல் காணப்பட்டது.
சிங்கள தேசத்தில் பல குண்டு வெடிப்புக்கள் இடம் பெற்றன. அதனால்... பதட்டமும்,சோகமும் நிறைந்த நிலையில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டிய சிங்க்க் கொடியைத்தான் வேறுவழியின்றி முடிக்கம்ப உயரத்தில் பறக்க விட்டனர். இதன் மூலம் சிங்கள மக்கள் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழரை சுதந்திரமாக வாழ விடவில்லையென்றால், சிங்களப் பேரினவாதிகள் தமிழரை அழிப்பது தொடர்ந்தால், சிங்கள நாடு சுதந்திரமாக இருக்க முடியாது. இதில் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரவாதச் செயலைத் தொடர விடக்கூடாது, என்பதில் சிங்களச் சிந்தனையாளர்களும், மக்களும் இதுவரை எவ்வளவு காத்திரமான நடவடிக்கையினை எடுத்தீர்கள்? இந்த இடத்தில் நான் ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். பேராசிரியர் சுசலித கம்லத் போன்றவர்கள் தங்களின் உயிர் இருக்கும் வரை தமிழர் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக குரல் கொடுப்பேன் எனச் சொல்கின்றார். அவர்கள் புரிந்து கொண்ட அளவிற்கு தன்னினத்தின் குருதி சுவைக்கும் சிலர் புரிந்து கொள்ளவில்லை. அதொருபுறமிருக்க பேராசிரியர் சுசலித கமலத் போன்றவர்களின் கூற்றினை நாற்காலிகளை எப்படிப் பாதுகாப்போம் என்று சிந்திக்கும் சிங்களப் பேரினவாதிகள் செவிமடுத்த வரலாறு இல்லையெனத் தான் சொல்லவேண்டும்.
மகிந்தராஜபக்சவின் உரையில் ஒன்றரை மாவட்டம் தானாம் புலிகளில் ஆளுகையில் உள்ளதென வெகுளித்தனமான கருத்தொன்றை உதிர்த்துள்ளார். மாவட்டங்கள் கூட இவருக்கு சரியாகத் தெரியவில்லையா? மன்னாரின் வடக்குப்பகுதி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்மாவட்டத்தின் ஒருபகுதி என பெரும் பகுதியை புலிகள் ஆளுகைக்குள் வைத்திருப்பதோடு ஏனைய பிரதேசங்களிலும் புலிகள் அரச படையினருக்கு சவாலாக இருந்து வரும்போது மகிந்த ராஜபக்சவின் இந்தக்கதை சிங்கள மக்களை படு மடையர்களாக்கும் வகையிலான கருத்தாவே தென்படுகின்றது.
ஒன்றரை மாவட்டங்கள் தான் புலிகளின் ஆளுகைக்குள் உள்ளதென கூறிய மகிந்த ராஜபக்ச இன்னும் எல்லையை சரியாக நிர்ணயிக்கவேண்டும் எனத் தன் செயற்பாட்டின் மூலம் வலுப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் சுதந்திரநாளை கொண்டாடுவதற்காக மதவாச்சிக்கப்பால் வவுனியா, மன்னார் மக்கள் கொழும்பிற்குள் நுளைந்து விடக்கூடாது என்று மதவாச்சியுடன் போக்குவரத்தையும் தடுத்துள்ளார். இன்று இந்த விடயத்தை சரியாக நோக்குபவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். எல்லை அகலப்படுத்தப்பட்டுவிட்டது. வடக்கின் எல்லை எதற்காக வவுனியாவில் இருந்து 15 மைல்கள் தொலைவில் உள்ள மதவாச்சிக்கு கொண்டுவந்து விட்டனர். வடக்கிற்கான முக்கிய எல்லை சோதனை நிலையமாக பெரும்பகுதி மதவாச்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு சென்ற தொடரூந்துகள் பல ஆண்டுகளிற்கு முன்னரே வவுனியாவுடன் மட்டுப்படுத்தப்பட்டு இப்போது தொடரூந்துகள் மதவாச்சியுடன் நிறுத்த பழக்கப்படுத்திகொண்டு வருகின்றனர். இதன் மூலம் தெரிவதென்ன? எல்லை அகலப்படுத்தப்படுகின்றது. வவுனியாவிற்கு வடக்காக இருக்கும் விளக்குவைத்தகுளம் சோதனைச்சாவடி களமுனையாவும் சூனியப்பிரதேசமாவும் பெருமளவிற்கு மாற்றங்காணப்பட்ட நிலையில், தென்னிலங்கையின் பேச்சுக்கள் எடுப்பாக இருந்தாலும் செயலில் அந்தளவிற்கு காத்திரத் தன்மையை காணமுடியவில்லை, என்பதைச் சுட்டிக்காட்டலாம்.
ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திரநாளுடன் முன்பிருந்த பேரினவாத அரசுகள் செய்யாதளவிற்கு மகிந்தவின் அரசு மதவாச்சியுடன் எல்லையை அகட்டிக்கொண்டுவந்து விட்டதுடன், பெரும் பதட்டத்துடன் தான் சுதந்திர நாளை கொண்டாட வேண்டிய நிலையையும் ஏற்படுத்திகொண்டது.
இதிலிந்து தெரிவதென்ன தமிழர் தனியரசை நோக்கி நகர்கின்றனர். இதனை விரும்பியோ விரும்பாமலோ ஏனையவர்கள் ஏற்பதனை தவிர வேறென்ன செய்யமுடியும்.
04.02.1957 அன்று திருக்கோணமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை கட்ட முற்பட்ட தியாகி திருமலை நடராஜனை சுட்டுக்கொன்றனர். அவர் போன்றவர்களின் செயலின் காரணம் என்ன என்பதனை சிங்களப் பேரினவாதிகள் சரியாக ஆய்விற்குட்படுத்தியிருந்தால், தமிழரின் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையினமையும் பறிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு தொகையான அழிவுகள் ஏற்பட்டிருக்காது.
இன்றளவும் திருந்தாதவர்களாகவே சிங்களப் பேரினவாதிகள் இருந்து வருகின்றனர். எனவே வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற பாதையில் தமிழர் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவு தமிழினத்தை அழித்து அதன் மேல்நின்று சிங்களம் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும்? என்ற நிலையை சிங்களம் உணரும் காலமாகத்தான் இன்றைய காலமுள்ளது.
தலைவர் பிரபாகரன் அவர்கள் சொன்னது போல் அறுபதாண்டுகளாக சிங்களப் பேரினவாதிகளின் சிந்தனைகள் இருந்து வருகின்றன. இரண்டாயிரத்து மூன்றாமாண்டு தலைவரின் மாவீர்ர்நாள் உரையில் கூறியிருப்பதைப் பாருங்கள்.
இந்த நிலையில் கருப்பொருளை மாற்றாது ஈழத்தமிழினத்தை இன அழிப்புச் செய்து கொண்டு சிங்கள தேசம் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் எப்படியிருக்க முடியும்?
வழிவந்த சிங்களப் பேரினவாதக் கதாநாயகர்களில் இன்றுள்ளவர் 17 நவம்பர் 2005 ல் பதவியைப் பிடித்துக் கொண்ட போதும் அவரின் வழிமுறைதான் வேறுபடுகின்றதே தவிர இலக்கு ஒரு நேர்கோட்டில் தான் நகர்கின்றது. அவரின் தலைமையில் மூன்றாவது சுதந்திரநாள் கொண்டாடப்படுகையில், தமிழரின் தாயக எல்லையை மதவாச்சிக்கு கொண்டு வந்ததுடன். சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளின் நிலைமையையும் தலைகீழாக மாற்றியுள்ளார்.
ஆகவே.... இறுதியாக என்நினைவிற்கு வருவது சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவாக கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் சிங்கள ஊடகவியலாளரான பண்டார “தமிழர் சுதந்திரமாக இருந்தால்த்தான் சிங்களவர் சுதந்திரமாக இருக்கலாம்” என்று கூறிய கருத்து உண்மையான கருத்துத்தான். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டை வழியனுப்பிவிட்டு ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திரநாள் கடந்தும் புரியாதவர்களாக இருந்தால்........ “சாகிறேன் பந்தயம் பிடி” என்ற பழமொழிதான் நினைவில் வருகின்றது.
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





