| ஒப்பந்தத்தின் ஆறாவதாண்டில் ஓர் ஊடுருவல் |
|
|
| மதி | |
| 21. February 2008 23:42 | |
சிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க்கப்போகிறோம்? என்பது ஒரு முக்கியமான கேள்விதான். இவையெல்லாவற்றிற்கும் பதிலாக இந்த ஒப்பந்த்ததில் என்ன சொல்லப்பட்டது அவற்றில் எதனையெல்லாம் நிறைவேற்றினார்கள் என மீளவும் பார்க்க வேண்டியது அரசியல் கள யதார்த்தமாகவே தெரிகிறது.
சரத்து ஒன்றின் பிரிவு இரண்டில் ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதென முதலில் பார்ப்போம். நேரடியான மற்றும் மறைமுகமான துப்பாக்கிச் சூடுகள், திடீர் தாக்குதல்கள், பதுங்கித்தாக்குதல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பொதுமக்களின் அல்லது இராணுவத்தின் சொத்துகளை அழித்தல், நாசவேலை, தற்கொலைத்தாக்குதல்கள், மற்றும் ஆழ ஊடுருவும் அணிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், விமானக் குண்டுவீச்சுக்கள், கடல்வழி வலிந்த தாக்குதல்கள், என்பனவற்றை செய்யக்கூடாது, என வலியுறுத்துகிறது. ஆனால்.... இதனை சிங்கள அரசும் அதன் படைகளும் எந்தளவு தூரம் கருத்திலெடுத்து விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை தவிர்த்தது என்பது பெறுமதியான கேள்வி தானே? இன்று மகிந்தவின் தலையில் முழுப்பழியும் விழுந்தவிட்டது ஆனால்... ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ரணில் விக்கிரமசிங்க கையாலாகு கொடுத்துக் கொண்டே முதுகில் குத்துபவராக இருந்தார். புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தது. “புலிக்கொடியை ஏற்றுகின்றனர். அது யுத்தநிறுத்த மீறல்” என்ச் சொல்லியபடி மகளிர் அரிசியற்துறைப் போராளிகளின் இடுப்பு பட்டியில் குறிவைத்து அரசதரப்பினர் தங்களின் இயலாமையை வெளிக்காட்டியபடியே, வேறுபல வழிமுறைகளையும் கையாண்டபடியே விடுதலைப் போராட்டத்தை கருவறுப்பதில் கவனம் செலுத்தினர். ஆழ ஊடுருவும் படையணியை புலிகளின் ஆளுகைக்குள் நகர்த்தி புலிகள் மீது தாக்குதல்கைத் தொடுத்தனர். இதன்மூலம் சில பதில் நடவடிக்கை செய்த புலிகள் நிதானமாவே காய்களை நகர்த்தினார்கள்.சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போதும் புலிகளை எப்படியாவது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலக வைக்க வேண்டும் என்பதில்தான் கூடிய கவனம் செலுத்தினார்கள். எப்படி தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனரோ அதேபோல ஒப்பந்த முறிவை தமிழர் தரப்பினரே செய்ய வேண்டுமென்பதற்காக தூண்டப்பட்டனர். இதனால் ஒப்பந்தம் எழுத்தில் அலங்காரமாக இருக்க சிறீலங்கா அரசு ஒப்பந்த்த்திற்கு முரணாக தாராளமாகவே அனைத்து வழித்தாக்குதல்களையும் செய்தது. இதில் விமானக்குண்டுவீச்சு மூலம் தமிழ் மக்களை கொன்றழிப்பதில் மிகவும் அக்கறை காட்டியது. மன்னாரிலும் வாகரையிலும் பலநூற்றுக் கணக்கான மக்கள் பலியிடப்பட்டனர். புலிகள் ஒட்டுமொத்தமாக போர்நிறுத்த மீறல் எதனையுமே செய்யவில்லை என சொல்லமுடியாது. ஆனால்... சிறீலங்கா அரசோ தொடராக மீறலை ஆரம்பித்த நாள் தொடக்கம் செய்து கொண்டு பழியை புலிகளின் தலையில் போட்டுவிட வேண்டுமென்றே தொடர்ந்தும் மிகவும் கவனமாக ஈடுபட்டனர். ரணில் விட்ட குறையை மகிந்த தொடர்ந்தார். மாவிலாற்று விவகாரத்தில் தமிழரின் மனிதாபிமான பிரச்சனையை தீர்க்காமல் அதனைக் கூட பேசித் தீர்க்க முடியாதவர்களாய் போரின் மூலம் ஆயுதத்தை பிரயோகித்து தீர்ப்பதற்கு படையை நகர்த்தி தொடராக கிழக்கை மீட்கும் போர் என தொடர்ந்து, வடக்கில் புலிகளை பலவீனப்படுத்துவோம் என வீராப்புடன் படை நகர்வுகளை முடுக்கிவிட்டபடி... வஞ்சகமாக புலிகளை ஒப்பந்தத்தில் இருந்து விலகவைக்க முயன்று தோற்ற நிலையில்த் தான ஒப்பந்தத்திலிருந்து விலகினர். சரத்து ஒன்றின் பிரிவு எட்டில் தமிழ்த்துணை இராணுவக்குழுக்களை போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் திகதியில் இருந்து முப்பது நாட்களுக்குள் சிறீலங்கா அரசு ஆயுதமற்றவர்களாக்கும். இந்த அணிகளிலுள்ள ஆட்களுக்கு சிறீலங்கா அரசு தனது ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் ஒழுங்கமைப்பிற்குள்ளும் இணையும் வாய்ப்பை அளித்து வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் பணிபுரியவகை செய்யும். இப்படித்தான ஒப்பந்தத்திலுள்ளது. இதனை முப்பது நாட்களுக்குள் சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியதா? இந்த விடயத்தை மட்டுமாவது நிறைவேற்றியிருந்தால் சமாதான முயற்சிகளை நன்கு நகர்த்தியிருக்க முடியும். சமாதானத்தில் அக்கறை இருந்திருந்தால் சிறீலங்கா அரசு இதனை செய்திருக்க வேண்டும். ஆனால்... சிறீலங்கா அரசு செய்ததோ மேலும் புதிய துணை ஆயுதக் குழுக்களை உருவாக்கி நாசகாரச் செயல்களை செய்வதில்த்தான் முழுமூச்சாக ஈடுபட்டது. இப்படி உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்களை வைத்து தெருநாய்களை சுட்டுத்தள்ளுவதுபோல் தமிழரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். பெயர் குறிப்பிடக்கூடிய ஆயுதக்குழுக்களைத் தவிர படைபுலனாய்வாளர்களின் அதிகாரி ஒருவரின் தலைமையில் சிறு சிறு குழுக்களாக பல குழுக்களை வைத்து நாசகார வேலைகளை முடுக்கி விட்டனர். இந்தக்குழுக்களைப் பற்றி பிறிதோர் சந்தர்ப்பத்தில் விபரமாகப் பார்ப்போம். துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் ஒட்டுமொத்தமாக அதனைக் கண்டும் காணாமல் விடுவது போலவிட்டு விட்டு மேலும் அப்படியான வேலைத்திட்டங்களை முடுக்கிவிட்டால் எப்படி சமாதானம் நிலைக்கும்? சரத்து இரண்டின் பிரிவு இரண்டின்படி கலாச்சார அல்லது மத உணர்வுகளை பாதிக்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அல்லது அத்தகைய கருத்துக்களைப் பரப்புவதை இரு தரப்பினரும் தவிர்த்தல் வேண்டும். இரு தரப்பினரில் எத்தரப்பேரும் தற்போது தமது பிடியில் வைத்திருக்கின்ற வணக்கத் தலங்களிலிருந்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் வெளியேறி, பொதுமக்கள் செல்ல வழிசெய்ய வேண்டும். உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்துள்ள வணக்கத்தலங்களிலிருந்து அவை பொதுமக்களுக்கு பாவனைக்கு திறந்துவிடப்படாத பட்சத்திலும் கூட அனைத்து ஆயுதம் தரித்த அணிகளும் வெளியேறி அவை பொதுப்பணியாளர்களால் நல்ல நிலையில் பேணப்பட வேண்டும். இது நடந்த்தா? தமிழரின் தாயகத்தில் நூற்றி எழுபத்தெட்டு வணங்கத்தலங்கள் சேதமாக்கப்பட்டன. பல முக்கியமான வணக்கத்தலங்களை சிறீலங்காப் படையினர் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்திருக்கின்றனர். ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட்டவர்கள். மேலும் ஆக்கிரமிப்புக்களை செய்தனரே தவிர ஒப்பந்தத்தில் உள்ளபடி நடக்கத்தவறினர். சரத்து இரண்டின் பிரிவு மூன்றில் ஏதேனும் ஒரு தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாடசாலைக் கட்டிடங்கள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து விடுவிக்கப்படத்தொடங்கி அவற்றுக்குரிய பாவனைக்கு மீளக்கையளிக்கப்படல் வேண்டும். இந்த நடவடிக்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளிலிருந்து நூற்றி அறுபது நாட்களுக்குள் முற்றுப் பெறவேண்டும். சமாதான ஒப்பந்தும் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைவடைகின்றது. ஆய்வு முரசத்திற்காக <--- மதி --- >
சரத்து இரண்டின் பிரிவு நான்கில் பொதுச் செவைகளுக்கான மற்றைய கட்டிடங்கள் அனைத்தும் அவற்றிற்குரிய பாவனைக்கு மீளக்கையளிக்கப்பட்டதற்கான பட்டியலொன்று இருதரப்பினராலும் தயாரிக்கப்பட்டு போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த்திலிருந்து முப்பது நாட்களுக்குள் வெளியிடப்படவேண்டும். சிறீலங்கா அரசாங்கம் தமிழரை ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்தி அவர்களின் வளர்ச்சியை முடக்கி விடுவதற்காக அனைத்து விடயங்களிலும் கைவைத்தனர். பாடசாலைகள், பொதுஇடங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை. ஒப்பந்தம் செய்தது ஏமாற்றுவதற்கென்பதில் தான் அதனை சிறுதுளியென்றாலும் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும் தமிழர் தரப்பு கூடியவரை பொறுமை காத்துத்தான் சிறீலங்கா தரப்பினரின் முகத்திரையை கிழித்து அவர்களின் சுயத்தை அம்பலமாக்கினர். இது தான் உண்மை. எனினும் உலக சமூகம் ஏன் இன்னும் பாராமுகமாக இருக்க வேண்டும். எதனையும் நடைமுறைப்படுத்தாததை கேள்வியெழுப்ப தவறியது நியாயமானதா?
சரத்து மூன்றின் பிரிவு ஒன்பதில் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கண்காணிப்பு குழுவின் அங்கத்தவர்களது உயிர்ப்பாதுகாப்பிற்கும் ஏனைய குழுவின் அங்கத்தவர்களது உயிர்ப்பாதுகாப்பிற்கும் பொறுப்புடையோராக இருப்பர். கண்காணிப்பு குழுவினரின் பாதுகாப்பில் கூட சிறீலங்கா அரச தரப்பினர் அசமந்தப் போக்குடன்தானிருந்தனர். வாகரையிலும், பூனகரியிலும் கண்காணிப்புக் குழுவினர் கடமையில் நின்றபோதே சிறீலங்காப்படையினர் எறிகணைகளை வீசித் தாக்கினர். மட்டக்களப்பில் கண்காணிப்பு குழுவின் அலுவலகம் மீதான கைகுண்டு தாக்குதலிற்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் சிறீலங்கா அரசதரப்பினர்தான். இதுபற்றி கண்காணிப்புகுழுவினர்கூட உலக சமுதாயத்திற்கு அவ்வளவு அக்கறையாக வெளிப்படுத்தவில்லை.
ஒப்பந்த்த்தில் சொல்லப்பட்ட சில முக்கியமான விடயங்கள் தான் நாம் இங்கு பார்த்தோம். ஆனால்... இதே போன்று பல விடயங்கள் நல்லமுறையில் எழுதப்பட்டுத்தான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை சிறீலங்கா அரசு சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல், ஒப்பந்த்த்தை ஒருபுறத்தில் வைத்துவிட்டு சிங்களப் பேரினவாதிகள் காலகாலமாக செய்து வந்ததையே செய்துவந்தனர்.
ஒப்பந்தத்தில் எதனை நடைமுறைப்படுத்தினர் என உலக சமூகத்திடம் நாம் கேட்கவேண்டும். தமிழர் தரப்பின் அரசியல்ப்பணி புலம்பெயர்ந்த ஈழத்தமிழரிடம் நிறையவே கிடக்கிறது. இது வரலாற்றுக் கடமை. காலம் கடந்தபின் கையைப் பிசைவது எதனையும் அள்ளித்தரப்போவதில்லை. ஒப்பந்தம் சரியாகச் செய்யப்ட்டது சிங்களதேசம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டியது எமது ஒவ்வொருவரின் பணியெனவும் ஒப்பந்தத்தின் சிலபகுதிகளைப் பார்க்கின்ற போதாவது தெரிகிறதல்லவா? கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



சிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க்கப்போகிறோம்? என்பது ஒரு முக்கியமான கேள்விதான். இவையெல்லாவற்றிற்கும் பதிலாக இந்த ஒப்பந்த்ததில் என்ன சொல்லப்பட்டது அவற்றில் எதனையெல்லாம் நிறைவேற்றினார்கள் என மீளவும் பார்க்க வேண்டியது அரசியல் கள யதார்த்தமாகவே தெரிகிறது. 
