உ லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றென கூறிக்கொள்ளும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் மனச்சாட்சிக்கு மாறாகவே நடந்து வருகின்றது. ஈழத்தமிழர் உறவு விரும்பத்தகாதது என்ற மனோநிலையினை தக்கவைத்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஈழத்தமிழரின் குருதியில் பிழைப்புவாத அரசியலை நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் படைதளபதியான சரத் பொன்சேகாவிற்கான இந்தியாவின் வரவேற்பு என்பது ஈழத்தமிழரின் செங்குருதியை பிசைந்துழக்கிய கால்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாகவே ஈழத்தமிழ் சிந்தனையாளர்கள் நோக்குகின்றனர்.
இந்தியாவின் இத்தகைய போக்கிற்கு காரணம் ராஜீவ்காந்தியின் படைகொலை தானென பரவலாக பேசப்படுவதை பலரும் அறிவோம். ஆனால்..... ஈழத்தமிழர் விவகாரத்தில் மான் விழுங்கிய மலைப்பாம்பு போல் இந்தியா இருப்பதற்கு இது காரணமாகாது. ஏனெனில் 1991 ஆம் ஆண்டு தான் ராஜீவ்காந்தியின் படுகொலை இடம் பெற்றது. ஆனால் இதற்கு முன்னரும் பிராந்திய வல்லரசான இந்தியா நீதியான போக்கை முற்று முழுதாக கொண்டிருக்கவில்லை என்பதை பெரிதாக ஆய்வு செய்து அறியவேண்டிய விடயமில்லைத்தானே!
ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதற்கு காரணம் தமிழரை கோரமாக படுகொலை செய்வதைத் தடுப்பதற்காகவே. தமிழீழ மீட்பிற்காக போராளிகள் பயிற்சியெடுப்பதற்கு பின்தளத்தையும் பயிற்சியையும் கொடுத்தது இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா இந்தியா தனது நலன் சார்ந்த விடயத்திற்கு தமிழீழ விடுதலைப்போராளிகளை உள்வாங்க முற்பட்டபோது சில குறிப்பிட்ட குழுக்கள் அதற்குள் சிக்கிவிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் மறுபுறம் ஈழதமிழினத்தின் உரிமைப்போராட்டம் தான் எங்கள் ஒரே கொள்கையென தங்கள் கொள்கையில் உறுதியாக நின்றனர்.
இதன்போது மதில் மேற் பூனை என்ற நிலையில் நின்ற குறைந்தளவானவர்களையும், குறிப்பிட்ட சிறு தொகை அடிவருடிகளையும் தவிர பெருவாரியான மக்கள் எமது பாதுகாப்பைத் தரவல்லவர்கள் பக்கமே நாம் நிற்போமென நின்றனர். அந்த நிலையுடன் நின்ற மக்களை தமது வழிக்குக் கொண்டுவர சிங்களப் பேரினவாதிகள் செய்ததையே இந்தியாவும் செய்தது. அது இந்தியப்படை இலங்கைத் தீவில் தமிழர் தாயக நிலப்பரப்பில் நிலை கொண்டிருந்த காலம். சாவகச்சேரி சந்தைப்படுகொலை, யாழ் வைத்தியசாலைப் படுகொலை, ஊரெழுப்படுகொலை, யாழ் பல்கலைகழகம் முன்பான படுகொலை என ஏராளமாக சொல்லலாம். இதன் மூலம் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமாக ஈழத்தமிழரை இந்தியப்படைகள் கொன்றொழித்தனர். இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யபட்டவில்லையே? எனவே வேறொரு காரணம் உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான பாராமுகத்திற்கும் வெறுப்பிற்கும் இன்னுமொரு காரணத்தையும் பலரும் பரவலாக பேசுவார்கள். தமிழீழத்தை இந்தியா அங்கீகரித்தால் தமிழ்நாடும் தனிநாட்டுக்கோரிக்கையினை முன்வைக்கக் கூடிய நிலைப்பாடொன்று வந்துவிடுமென இந்தியா அச்சப்படுவதாகவும் அதுதான் இந்தியா ஈழத்தமிழரை விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடக்கின்றததோ எனவும் பேசப்படுவது முற்றுமுழுதாக சரியான காரணமாக தெரியவில்லை. ஏன் என்பது பற்றி பார்ப்பதற்கு நாமிங்கு அன்றைய கிழக்குப் பாகிஸ்தானுக்குள் இந்தியப்படையினர் நுழைந்த வரலாற்றை வைத்துக்கொண்டு பார்ப்பது பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன்.
1971 டிசம்பரில் அன்றைய கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியப்படையினர் பாகிஸ்தான் படையினருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த இந்திய பாகிஸ்தான் போர் பதின்நான்கு நாட்கள் இடம்பெற்றது. இதில் 3037 இந்தியப்படையினரும் 7982 பாகிஸ்தான் படையினரும் பலியானார்கள். கிழக்குப் பாகிஸ்தான் "பங்களாதேஷ்" என்ற தனிநாடாக சுதந்திர தேசமானது. இதன்போது அயலில் ஒரு புதிய நாடு உருவாவதற்கு முக்கிய பங்காளியாக இந்தியா இருந்தது.
காஷ்மீர் 1947 ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் செய்த நாளில் இருந்து காஷ்மீரை மையமாக வைத்து பிரிவினைக் கோரிக்கை தீவிரமடைந்த நிலையில்... வங்காளதேசம் உருவாக இந்தியா தனது படையை அனுப்பி பலியிட்ட போது அயலில் புதிய நாடொன்று உருவாவதனால் இந்தியாவிற்குள் பிரிவினைக்கருத்து மேலோங்கி விடுமென எண்ணாத இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்தால் தமிழகத்திற்குள் பிரிவினைக் கருத்து மேலோங்கி விடுமென எவ்வாறு கருதலாம்? எனவே இதைவிட வேறொரு காரணம் இருந்தாக வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாநில ஆட்சியைக் கொண்டிருப்பதிலும் பார்க்க மத்திய ஆட்சியிலும் பங்காளிகளாக இருந்து வருகின்றனர். இதைவிடவும் தமிழரை இன அழிப்பு செய்யவுமில்லை அவர்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம் பெறவுமில்லை. தமிழ்நாட்டு தமிழர் ஈழத்தமிழரிற்கிருக்கும் பிரச்சனைபோல் பிரச்சனையை சந்திக்க வேண்டிவந்தால் தனிநாடு கேளுங்கள் என்று வலியுறுத்துவதல்ல எனது நோக்கம். நான் இங்கு முரசம் வாசகர்களிற்கு கூற விரும்புவது தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என கருதிக் கொண்டு இந்தியா ஈழத்தமிழர் விவகாரம் தீண்டத்தகாதவொன்றென நடந்து கொள்ளவில்லை. மிகவும் உன்னிப்பாக கூர்ந்து கவனித்துக் கொண்டே அது தனதலுவலைப் பார்க்கிறது. அப்படியான பார்வைக்குள் இருந்து கொண்டே நீண்டகாலமாக பலவழிகளிலும் ஈழத்தமிழர் விவகாரங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா தலையிட்டே வருகின்றது. ஆனால் அது தனது பிராந்திய நலன் என்ற குறிக்கோளிடன் செயற்பட்டு வருவதன் விளைவே சரத்பொன்சேகாவிற்கான வரவேற்ப்பு.
பங்களாதேஷ் போன்று தமிழீழம் உருவாகிவிட்டால் இந்தியாவிற்கு எங்கே வலிக்கப்போகிறது? தமிழீழம் தனிநாடாக சுதந்திரம் பெற்று விட்டால் அதனால்... இந்தியாவிற்குள் பிரிவினைவாத கருத்து மேலோங்கிவிடப்போவதில்லை. அதற்கான பிரதான காரணம் பாகிஸ்தானைப்போன்று இந்தியாவின் கடும் வைரியாக சிறிலங்காவை உருவாக்கிவிட இந்தியா தயாராயில்லை. எனவே இந்தியா தமிழ் நாட்டின் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் குரலையும் தாண்டி சிறீலங்காவிற்கு உதவத்தான் போகின்றது. இந்துமா கடலின் பெரும் ஆதிக்கம் கைநழுவி விடக் கூடாது. சிறீலங்கா சீனாவோ அமெரிக்காவோ மேற்குலகின் எந்தவொரு நாட்டின் பார்வைக்குள்ளும் சிக்கிவிடக்கூடாது சிறீலங்காவை தனது பிடிக்குள் வைத்திருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும். ஆகவே தமிழழம் உருவாவதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருப்பதன் பிரதான காரணமாக சிறீலங்காவிற்குள் தெற்காசியவல்லசரோ உலக வல்லரசோ காலூன்றி விடக்கூடாதென்பதற்கா என்று கருதுவற்கே இடமுண்டு. இன்றைய நிலையை நோக்குகின்ற போது இதனையே அனுமானிக்க முடிகிறது.
இன்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை சீனாவைப் போன்ற பாதையில் நகர்த்துவதே சரியென எண்ணிச் செயற்படுவதாகத் தான் உணர முடிகிறது. எனவே இப்படியான எண்ணத்துடன் ஈழத்தமிழர் விவகாரத்தில் புதிய அணுகு முறையைத் தான் கையாள்கின்றது. ஆனால்... அணுகுமுறை தான் புதிதே தவிர தன்நலன் சார்ந்த வேலைத்திட்டத்தின் மூலம் ஒன்றாகவே உள்ளது. அன்று தொடக்கம் இன்றுவரை அது மாறவில்லை. போராளிகளிற்கு பயிற்சி கொடுத்த நாள் தொடக்கம் இன்றைய நாள்வரை இந்தியா தனது நலனில் அக்கறையாக இருந்தமையினால் தான் கொழும்பில் அன்றைய இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தியை சிங்களப்படையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கிய போது படையாள்
ஒருவர் துப்பாக்கியின் பின்புறத்தால் பிடரியில் அடித்த போது அந்த வலியையும் அவமானத்தையும் இந்தியா சகித்துக்கொண்டது.
தன் நாட்டுப் பிரதமரை தாக்கியவர்களின் நாட்டைச் சேர்ந்த படைத்தளபதிக்கு இன்று செங்கம்பள வரவேற்பு கொடுக்கின்றதென்றால் அயல் நாடொன்றில் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் இனம் அழிக்கப்படுவதற்கு துணைபோனபடியே தன்நலன் மீது மட்டும் மிகத்தீவிரமாக உள்ளது என்று தான் அர்த்தம்.
இந்தியா என்னதான் குத்தி முறிந்தாலும் ஈழத்தமிழர் தமது சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளிற்காக ஏங்கிக்கொண்டிருப்பதோ அந்த இனிய நாளிற்காக போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற உண்மையை தெரிந்தே களத்தில் நிற்கின்றனர். ஏற்கனவே ஏராளம் துயரை சுமந்து கொண்டே நடமாடவேண்டிய தேவை ஈழத்தமிழரை நிர்ப்பந்தித்துள்ளது. இந்திய "அமைதிப்படை"யென்ற பெயருடன் இந்தியப் படையினரை தமிழர் தாயத்ததிற்குள் நிலைநிறுத்தி ஏறக்குறைய ஆறாயிரம் ஈழத்தமிழ் மக்களை கொன்றொழித்தனர். இதுவுட்பட இதுவரை காலமும் ஈழத்தமிழ் மக்கள் ஒரு லட்சம் வரையானோர் சிங்களப் பேரினவாதிகளாலும் அழிக்கப்பட்டுள்ளனர். எனவே உயிர் கொடுத்து உயிரைப் பாதுகாக்கப் போராட வேண்டுமென்ற எண்ணம் ஈழத்தமிழர்களிடம் திணிக்கப்ப்ட்டு விட்டது. இப்படியான நிலையில் போராடும் ஒரு இனத்தின் நிலமையை புரியாதவர்கள் போல அயலில் உள்ள மிகப்பெரும் நாடான இந்தியா நடந்து கொள்ளலாமா? குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என் எந்த வேறுபாடுமின்றி இன்றும் சிங்களப் பேரினவாத அரசின் முக்கிய பணியாக ஈழத்தமிழர் அழிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மனிதாபிமானத்துடன் இந்தியா செயற்படாமல், ஈழத்தமிழரை மூச்சுத்திணற வைப்பதற்கான வேலைகளைச் செய்யலாமா?
ராஜீவ் காந்தியின் படுகொலை பற்றி மட்டும் பேசும் இந்தியாவிடம் ஈழத்தமிழ்ச் சமூகம் கேட்கும் கேள்வியொன்றிற்கு இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய பதிலென்ன? அதாவது ஏற்கனவே இந்தியாவின் இரு பிரதானமானவர்களின் படுகொலை பற்றி பேசாதளவிற்கு ஈழத்தமிழரின் ஈழத்தமிழரின் வேதனையைப் புரியாதவர்களாக ராஜீவ்காந்தியின் படுகொலையை மட்டம் ஏன் மிகத்தீவிரமாகப் பேசுகின்றீர்கள்?
- 30.01.1948 அன்று அகிம்சையின் தந்தை என்ப் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்
- 1984 ம் ஆண்டு மெய்பாதுகாவலர்களாலேயே இந்திராகாந்தி சுட்டுப் படுகொலை செய்யபட்டார்.
இருபெரும் தலைவர்களின் படுகொலைபற்றி அவ்வளவாக பேசாதவர்கள் ராஜீவ்காந்தியின் படுகொலை பற்றி மட்டும் துள்ளிக் குதிக்கின்றனர். இப்படிச் சொல்வதன் மூலம் கொலை சரிதான் என்று நியாயப்படுத்தவில்லை. குரோத மனப்பான்மைக்கு முடிவு கட்டுங்கள் நீதியுடன் ஈழத்தமிழர் விவகாரத்தை நோக்குங்கள் எனத்தான் கேட்கின்றனர் அவர்கெளன இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
ஈழத்தமிழரைப் பொறுத்தவரை சுயநல அரசியல்வாதிகளையும், சிங்களப் பேரினவாதிகளையும் அரசிற்கு அரசென்ற ரீதியில் கைகொடுக்கும் நாட்டவரையும் சந்தித்தே தமதி பக்க நியாயத்தை வெளிச்சோல்ல வேண்டிய கட்டாயத்திலும் இவை எல்லாவற்றையும் சுதாகரித்துக்க கொண்டே பிழைத்துக்கொள்ள வேண்டியவர்களாகவுள்ளது. அதை வளர்ப்பதற்கான வேலைகளை முடுக்கி விடுவதிலும் பார்க்க நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அகிம்சைக்கு உதாரணமாக காந்திதேசம் இல்லை என்று சொல்லக்கூடியளவிற்கு கட்டுமீறிய கடும் போக்கை ஈழத்தமிழர் பக்கமிருந்து இந்தியா தளரத்திக் கொள்வது தொடர்ந்தும் ஈழத்தமிழர் உயிர்வாழ்வதற்கிருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பாய் இருப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என் இங்கு கோடிட்டு வலியுறுத்தலாம்.
நடந்தவை எல்லாம் முடிந்த கதை இனி நடப்பவை என்றாலும் ஈழத்தமிழரின் அழிவில் எவரும் அரசியல் நடத்துவது மனச்சாட்சிக்கு ஒப்பானதல்ல. இந்தியா ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும் 1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்த்ததில் ஈழத்தமிழரின் தாயகமான இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கை இணைத்து நின்றதன் நிலமை என்ன? ஈழத்தமிழரிற்கும் அரசியல் தந்திரங்கள் தெரியும். எந்த வரலாற்றிலும் காலங்காலமாக ஏமாந்தே அழிந்தனர் என்ற வரிகள் நிலைப்பதில்லை. தொடர்சியாக ஏமாறுவதற்கு மடையர்களில்லை ஈழத்தமிழர்கள். தமிழீழம் இந்தியாவுடன் இந்தியா உதவாவிட்டால் என்ன நல்லுறவை பேணவே விரும்பும். சிறீலங்கா வேண்டுவதை எல்லாம் வேண்டிவிட்டு பிடரியில் அடிக்கும். இந்தியப்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான போரின் மூலத்தையும் அது ஏற்படுவதற்கான காரணி என்ன என்பதையும் இந்தியா நேர்மையுடன் பார்த்துக் கொள்வதும் அதன் சிறப்பை மேலும் வெளிப்படுத்த உதவும் என இங்கு குறிப்பிடக் கூடிய தென நினைக்கின்றேன்.
1987 ஆம் ஆண்டு இந்தியப்படை இலங்கைத்தீவிற்குள் வருவதற்கு முன் வானில் வட்டமிட்ட இந்திய வானூர்திகள் யாரிற்கு உணவுப்பொட்டலங்களை போட்டது. ஈழத்தமிழருக்கு தானே. அப்படியென்றால் ஈழத்தமிழரிற்கு உதவத்தானே இந்தியா அன்று அலுவல் பார்த்தது. ஒப்பந்தம் செய்து கொண்டு படையையும் அனுப்பிய இந்தியா புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பன்னிரெண்டு பேர் (குமரப்பா, புலேந்திரன், போன்ற் தளபதிகள் உட்பட்டவர்கள்) பலியாகிய போது இதற்கெடுத்த நடவடிக்கை என்ன? திலீபன், அன்னை பூபதி போன்றவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்தை கருத்திலெடுக்காதேன்? உணவுப் பொட்டலங்களை போட்டது ஏமாற்று வித்தை தானே? அன்று எம்மை மீட்க்க வந்த மீட்பர்களை என்றல்லவா இந்தியப்படையினரை ஈழத்தமிழர்களை நினைத்தார்கள். ஆனால்.... இந்தியப்படை ஈழத்தமிழரை செய்தென்ன? உண்மைகளைச் சொல்லுவீர்களா? இந்த இடத்தில் தான் மூத்த ஊடகவியலாளர் கோபாலரட்னம் (எஸ்.எம்.ஜி) எழுதிய "அந்த உயிர்தானா உயிர்", "ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை" போன்ற நூல்கள் நினைவிற்கு வருகின்றன. பிரச்சனை ஈழத்தமிழருக்கு, காப்பாற்றப்பட வேண்டியவர்கள் ஈழத்தமிழர்கள், காப்பாற்றப்படுவோம் என மகிழ்ந்தவர்களின் அன்றைய நிலை என்னவாயிற்று? சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள் வீழ்ந்த கதையாகிவிட்டதல்லவா?
கொஞ்சமல்ல ஆறாயிரத்திற்குமதிகமானவர்களை இந்தியப்படையினர் கொன்றொழித்தனர். நம்பியவர்களின் நெஞ்சில் துளையிட்டனர். துடித்துப் போன துன்பியல் வரலாறு. இந்தக் கொடுமையை இந்தியாவா செய்தென்று வர்ணிக்கக் கூடிய ஆயிரம் கதைகளை மறந்து தானே இன்று சிங்களப்படைகளின் கொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பி உயிர்வாழ்வதற்காக உயிராப்த்துள்ள பெருங்கடலையும் தாண்டி தஞ்சம் கோரி தமிழ்நாட்டிற்குள் வருகின்றார்கள் ஈழத்தமிழர்கள். மறந்து போன துன்ப வரலாற்றை ஏன் இந்தியா மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டும். அப்படி நினைவு படுத்துவதற்காகத்தானே இன்றதன் சொல்லொன்றும் செயலொன்றுமாகவுள்ளது. எனவே தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என ஈழத்தமிழர்கள் பாதுகாப்பிற்காக இந்தியத் தமிழர் மட்டுமல்ல உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டிய காலமாகத் தான் இன்றைய காலம் தெரிகின்றது.
இந்தியா ஒன்றை மட்டும் கவனித்துச் செயற்படுவது அதன் மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்காமலிருக்கக் கூடியதென எண்ணுகின்றேன். 1987 ம் ஆண்டு விட்ட தவறை மீண்டும் விடாதிருப்பது இந்தியாவின் பெருமையை என்றும் கீழிறக்கி விடாதென எழுதிவைக்கக் கூடிய விடயம் என்று சொல்லலாம் என்பது தான் அதுவாகும்.
அண்மையில் வை. கோபாலசாமி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதமொன்றிற்கு பதிலளிக்கும் போது இலங்கையில் இராணுவத்தீர்வு சாத்தியமில்லை எனச் சொல்லியிருக்கின்றார்.
மன்மோகன் சிங் சொல்வது சரியா தவறா என்பது பிறிதோர் காலத்தில் தர்க்கம் செய்யப்பட வேண்டியது. ஆனால் இன்றுவரை இந்தியப்படை ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயருடன். ஆகவே அமைதியை நிலைநாட்ட வந்த அமைதிப்படையினருடன் புலிகள் போர் புரிந்தார்கள் என்று இன்றும் சிலர் கூறிவருகின்றனர். அப்படியானவர்களிற்கு பதிலும் கேள்விதான். துருப்பு காவி கவச ஊர்திகள், டாங்கிகள், கனரக பீரங்கிகள், ரொக்கற் செலுத்திகள், பறக்கும் டாங்கி எனப்படும் சண்டைக்கான உலங்கு வானூர்திகள் இவையெல்லாம் அமைதிப்படையினருக்கு எதற்காக? ஆகவே... 1987 ஆம் ஆண்டு இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தவறிழைத்தது. அதுபோன்று தொடர்ந்து செய்யலாமா? உங்கள் பிராந்திய நலனிற்காக ஒரு இனத்தின் அழிவில் குளிர்காயலாமா?
ஆய்வு முரசத்திற்காக மதி
ஈழத்தமிழினத்தை அன்று இந்தியா காப்பாற்றும் என்று எண்ணியவர்களின் மனங்களை வெல்லாது விட்டது ஏன்? இப்போழுது ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை ஏன் இந்தியா அங்கீகரிக்கக் கூடாது? என ஏங்குகின்ற ஈழத்தமிழரின் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டுவது போன்று நடப்பதேன்?
காலம் காலமாக ஈழத்தமிழரை அழித்துவரும் சிங்களப் பேரினவாதிகளின் கொலைவெறிக்கு மாறி மாறி பலர் தலைமை தாங்கினர். அதனை கொலைக்களத்தில் வழிநடத்த பல படைத்தளபதிகள் மாறி மாறி பதவி வகித்தனர். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்க சரத் பொன்சேகா தளபதியாகவுள்ளார்.
இன்றெந்த தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டு பேசவல்ல அமைதிக் கெதிரானவராக கண்டறியப்பட்டுள்ளார். இவர் ஈழத்தமிழரை நாளாந்தம் கொன்றொழித்து அவர்களின் குருதியில் மேலேறி நின்று உழக்கிப் பிசைந்த கால்களை இந்தியா விரித்த செங்கம்பளத்தில் ஏறி நடைபோட முடிந்தமைக்கு என்ன அர்த்தம்? அப்படியெனின் ஈழத்தமிழினத்தின் செங்குருதி குடிப்பதற்கு இந்தியா செங்கம்பள வரவேற்பளிக்கப்போகின்றதா? காந்தி தேசமே உங்கள் மனச்சாட்சியை உலுப்புவதற்கு இந்தக் கேள்விகள் சமர்பணமாகட்டும்.
எந்த நிலை வந்தபோதும் ஈழத்தமிழர் கொடுத்த விலைக்கு பெறுமதியான பொருள் வேணடுமென்ற நிலை தளராதவர்களாகவுள்ளனர்.
எந்தவொரு தனி நபரையும் அல்லது நிறுவனத்தையும் விட குறிக்கோளே பெரிது" ஏ. பி .ஜே. அப்துல்கலாம்
ஈழத்தமிழரும் அப்துல் கலாமின் கூற்றிற்கமைவாகவே தொடர்ந்தும் நடைபோடுவது சரியென எண்ணி நடைபோட எத்தனிப்பர்.
இலக்கியன் wrote on ஏப்ரல் 09, 2008
Sathiya wrote on ஏப்ரல் 03, 2008
தமிழின்பன் wrote on ஏப்ரல் 02, 2008
| |
Title: ஈழதமிழினத்தின் உரிமைப்போராட்டம் தான் எங்கள் ஒரே கொள்கையென தங்கள் கொள்கை
|
|