|
உணவுப் பொருட்களுக்கு நிறக்கலவையை தடைசெய்ய சுவிஸ் வைத்தியர்கள் கோரிக்கை |
|
|
|
ரி.என்.ஜே
|
|
15. April 2008 22:26 |
உணவுப் பொருட்களுக்கு நிறக் கலவையினை பயன்படுத்துவதை (Coloring – Farbstoff) தடைசெய்யவேண்டுமென்று சுவிற்சர்லாந்தின் வைத்தியர்கள் கேட்டுள்ளனர். இதற்கான காரணமாக இவ்வகை நிறக்கலவைகள், குழந்தைகளில் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வுகளின் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட நிறமாற்றும் அறோமா கலவைகளில், குழந்தைகளை தீவிரத்தன்மை (Aggresive) கொண்டவர்களாக மாற்றும் தன்மை இருப்பதாக இங்கிலாந்தின் Southampton பல்கலை கழகத்தினால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுப்புறச் சூழலுக்கும் இது பாதகத் தன்மை ஏற்படுத்துவதாக கூறியுள்ள சுவிஸ் வைத்தியர்கள் உணவுப் பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு பாவிக்கபடும் செயற்கையான நிறக் கலவைகளை முற்றுமுழுதாக தடைசெய்ய வேண்டுமென கோரியுள்ளனர். குழந்தைகளின் இனிப்புப் பொருட்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றிற்கு நிறக் கலவைகள் நிச்சயமாக அவசியமற்றது என்று வைத்தியர்கள் சபைத்தலைவர் பீற்றர். எம். கேலின் கூறினார்.
ஐரோப்பிய உணவுக் கட்டுப்பாட்டுச் சபையானது இந்த ஆய்வு தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளது. தெளிவான முடிவுகளை கண்டறிய புதிய பரிசோதனைகள் செய்யப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுவிஸ் கூட்டாட்சி சுகாதாரப்பிரிவினரின் இவ்விடயம் தொடர்பான நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
|