20. November 2008 16:27
 
 
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீட அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
12. May 2008 21:45

whait_van.jpgசிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்ற மூவர் தங்களை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக்கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் பதுளையைச் சேர்ந்த ஒரு இளைஞரையும் கடந்த சனிக்கிழமை வானில் கடத்திச் சென்றுள்ளனர்.

புறக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

தெல்லிப்பழையைச் சேர்ந்த 24 வயதுடைய பரமநாதன் துஷ்யந்தன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.வசீகரன் , பதுளையைச் சேர்ந்த கண்ணன் ஆகிய மூன்று இளைஞர்களே கதிரேசன் வீதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

துஷ்யந்தன் கடத்தப்பட்டது தொடர்பாக தந்தையான முத்துகுமார் பரந்தாமன் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஏனைய இரண்டு இளைஞர்கள் தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் வெற்றிலை வியாபாரி என்றும் மற்றைய இரண்டு இளைஞர்களும் வெளிநாடு செல்வதற்காக விடுதியில் தங்கியிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞர்களை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்று அறியமுடியாத போதும் மேற்படி சிவில் உடையணிந்த ஆயுதபாணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் அப்பகுதியில் நடமாடியதாகவும் அவர்களிடம் இக்கடத்தல் தொடர்பாக வினவிய போது ஆத்திரத்துடன் துப்பாக்கியைக் காட்டி உறவினர்களை மிரட்டியதாகவும் புலித்தமிழர்கள் ஒருவரையும் விடமாட்டோம் அழிப்போம் என்று கொச்சைத் தமிழிலும் சிங்களத்திலும் திட்டியதாகவும் பிரதியமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளவத்தையில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்ட செல்லத்துரை செல்வகுமார் தொடர்பாக தகவல் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வெள்ளிக்கிழமை 4 ஆம் குறுக்குத் தெருவில் கடத்தப்பட்ட வர்த்தகரான விஸ்வநாதன் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

 

 
< முந்தைய   அடுத்த >