பாகிஸ்தானுடன் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இந்தியா தயாராகஉள்ளது என்ற தகவலைத் தாங்கியவாறு புதிய பாகிஸ்தான் அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி செவ்வாய்கிழமை இஸ்லாமாபாத் புறப்படுகிறார்.
வன்முறைகள் நிறுத்தப்பட்டாலே சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனேயே நாங்கள் பாகிஸ்தான் செல்கிறோம்” என இஸ்லாமாபாத் புறப்படுவதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறினார்.
திங்கட்கிழமை இஸ்லாமாபாத் சென்றடையும் சிவ்சங்கர் மேனம், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சல்மான் பஷீரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
எதிர்வரும் புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்டூம் ஷா மஹமூட் குவெரிஷ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பிரணாப் முஹர்ஜி தனது இரண்டு நாட்கள் பாகிஸ்தான் விஜயத்தின் போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் அசீவ் அலி சர்தாரியையும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசவ் ராசா கிலானியையும் சந்தித்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த மார்ச் மாதத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்தபின்னர் முதல்தடவையாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னர் எங்கு நிறுத்தப்பட்டனவோ அங்கிருந்து தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வது பற்றி ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|