சுழற்சி முறையில் கல்வி, காணி, முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தல் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு, காணியமைச்சு சுழற்சி அடிப்படையில் முதலமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென நிபந்தனை விதிப்பதெனவும் அவற்றை ஜனாதிபதி ஏற்குமிடத்து சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிப்பதெனவும் இல்லையேல் ஆதரவளிப்பதிலிருந்து விலகுவதெனவும் தீர்மானித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதிக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது ஜனாதிபதியிடமிருந்து சில வாக்குறுதிகள் கிடைக்கப்பெற்றதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்குத் தேர்தல் காலத்தில் சுதந்திர முன்னணி சார்பில் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிக ஆசனங்களைப் பெறுகிறார்களோ அந்தச் சமூகம் சார்பானவருக்கு முதலமைச்சுப் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும், இவ்வாக்குறுதிக்கு மாற்றாக ஜனாதிபதி பிள்ளையானுக்கு முதலமைச்சுப் பதவியை வழங்கியதையடுத்து ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் தாம் தனித்து இயங்கப் போவதாக ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையேயான சந்திப்பின் போது கிழக்கின் சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்குமாறும் இதையடுத்து தாம் சில சலுகைகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இவ்வுறுதி மொழியையடுத்து கிழக்குக்கு விரைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் அங்கு முக்கியஸ்தர்களின் கருத்துக்களை அறிவதில் ஈடுபட்டுள்ளனர்.
மாகாண சபையில் பிள்ளையானுக்கு எதிராக செயற்பட்டு ஆட்சியைக் கவிழ்ப்பதன் மூலம் அது தமிழருக்கெதிரான செயற்பாடாக கருதப்படலாமெனவும் சில முக்கியஸ்தர்கள் ஹிஸ்புல்லா தரப்புக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு, காணியமைச்சு, சுழற்சி அடிப்படையில் முதலமைச்சுப் பதவியையும் ஜனாதிபதி ஹிஸ்புல்லாவுக்கு வழங்குவாராயின் சுதந்திர முன்னணிக்கும் பிள்ளையானுக்கும் ஆதரவளிக்கலாமெனவும் நிபந்தனையை ஏற்காவிட்டால் மாகாண சபை இயங்காமலிருக்கும் சூழ்நிலை ஏற்படும் எனவும் அரச தரப்புக்கு எடுத்துக் கூறுவதற்கு ஹிஸ்புல்லா தரப்பு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அது பற்றி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு அறிவிப்பாரெனவும் கட்சியின் தலைமைப் பீடமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சவாஹிர் சாலி மற்றும் சுபைர் ஆகியோர் தெரிவித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து ஹிஸ்புல்லாவின் தனித்து இயங்கும் நிலைப்பாட்டுக்கு சாதகமான பதில் கிடைக்காமையும் அமைச்சர் அதாவுல்லாவின் ஒத்துழைப்பின்மையும் ஜனாதிபதியின் எச்சரிக்கையுமே ஹிஸ்புல்லாவையும் அவர் தரப்பையும் நிலைப்பாட்டை மாற்றமடையச் செய்ததற்கான முக்கிய காரணமென தெரிவிக்கப்படுகிறது.
|