29. August 2008 19:17
 
 
இன்று மனித உரிமைக்கு பரீட்சை -தடுமாற்றத்தில் இலங்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. May 2008 10:04
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில நாடுகள் பொருத்தமற்றவையென அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையிலும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கிற்கு மத்தியிலும் பேரவையின் 15 ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது.

ஐ.நா. பொதுச் சபையில் இன்று இடம்பெறும் வாக்குப் பதிவில் 192 உறுப்பினர்களும் வாக்களிக்க உரிமை உடையவர்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 97 பெரும்பான்மை வாக்குகள் தேவையாகும்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பதிலாக ஜெனீவாவை தளமாகக்கொண்டு 2006 இல் 47 உறுப்பினர்களடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைக்கப்பட்டது. அரசாங்கங்களின் உரிமைமீறல்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை போன்ற காரணங்களாலேயே மனித உரிமை ஆணைக்குழுவானது நன்மதிப்பை இழந்ததால் மனித உரிமைகள் பேரவை 2006 இல் உருவாக்கப்பட்டது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்தப் புதிய அமைப்பின் சட்டவிதிகள் அதன் செயற்பாட்டுத்திறனுக்கு உத்தரவாதமளிக்காததாக இருப்பதாக வாஷிங்டன் கூறுவதுடன் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது.

சூடானின் டார்பர் பகுதியில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் செயற்படவில்லையெனவும் அதேசமயம் காஸாப்பகுதியில் பலஸ்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் கடந்த இரு வருடங்களாக மனித உரிமைகள் பேரவை மீது கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தவருடம் பேரவையின் 15 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள 19 நாடுகள் போட்டியிடுகின்றன. இது முறைமையிலுள்ள பலவீனமென விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

போட்டித்தன்மை குறைவாக இருப்பது தகுதியற்ற நாடுகள் உறுப்பினராவதற்கு வழிசமைத்துக் கொடுப்பதாக அமையுமென அவர்கள் கூறுகின்றனர்.

ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க குழுக்களுக்கான ஆசனங்கள் வாக்கெடுப்பிற்கு முன்னராகவே தீர்மானிக்கப்படுவது வழமையாகும். ஆபிரிக்காவின் 4 ஆசனங்களையும் காபொன், கானா, மாலி, சம்பியா ஆகியவை பெற்றுக்கொண்டுள்ளன.

ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி ஆகியவை இலத்தீன் அமெரிக்காவுக்கான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

கிழக்கு ஐரோப்பாவுக்கான இரு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள உக்ரெய்ன், சேர்பியா, ஸ்லோவாக்கியா ஆகியவை போராடுகின்றன. அதேசமயம், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், இலங்கை, பஹ்ரெய்ன், கிழக்குத் திமோர் ஆகியவை ஆசியாவின் நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள போட்டியிடுகின்றன.

அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்பனவற்றை தத்தமது நாடுகளில் இந்தத் தேசங்கள் எவ்வாறு பேணிக் கடைப்பிடிக்கின்றன என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலேயே பேரவையின் வேட்பாளர்கள் கணிப்பிடப்பட வேண்டும் என்பது பேரவையின் ஒழுங்கு விதிமுறையாகும். அத்துடன், முக்கியமாக மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான நாடுகளின் அணுகுமுறையும் கணக்கிடப்படுகின்றது.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், ஐ.நா. கண்காணிப்பகம், சுதந்திர இல்லம் ஆகியவையே நாடுகள் தொடர்பான மதிப்பீட்டை முன்னெடுக்கின்றன.

பஹ்ரெய்ன், இலங்கை, பாகிஸ்தான், காபொன், சம்பியா ஆகியவை மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லையென்ற முடிவுக்கு இந்த அமைப்புகள் வந்துள்ளன.

அதேசமயம், காபொன், சம்பியா ஆகியவற்றுக்கு உறுப்பினராவதற்கான உத்தரவாதம் கிடைத்திருக்கின்ற போதும் போட்டியில்லாததாலேயே அவற்றுக்கு இந்த உத்தரவாதம் கிடைத்திருப்பதாக இந்த அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன.

இந்த முக்கியமான ஐ.நா. அமைப்பினூடாக மனித உரிமைகளை மேம்படுத்த ஜனநாயக நாடுகளுக்கு பொன்னான வாய்ப்பு கிட்டியிருப்பதாக ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும். ஐ.நா. கண்காணிப்பகத்தின் (UN Watch) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹல்லெல் நியூவர் கூறியுள்ளார்.

பிரேசில், பர்சினா பாசோ, கிழக்குத் திமோர் ஆகிய நாடுகள் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றன.

அதேசமயம், 11 நாடுகள் உறுப்புரிமையைப் பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதாக அவை கூறியுள்ளன.

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இரு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் பிரான்ஸும் பிரிட்டனும் இராஜ தந்திர ரீதியான மோதலை நியூயோர்க்கில் ஆரம்பித்துள்ளன.

இந்த இரு நாடுகளும் பேரவையில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்து வருகின்றபோதும் இப்போது ஸ்பெய்ன் இவற்றுக்கு சவாலாக போட்டியிடுவதால் இரு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் போட்டி காணப்படுகிறது.

 

 
< முந்தைய   அடுத்த >