| தேசப்பற்றாளர் ஜி. நடேசன் - சீருடை தரிக்காத புலி:சண் தவராஜா |
|
|
| சுவிஸ் நிருபர் | |
| 30. May 2008 21:54 | |
|
2004 ஆம் ஆண்டு, மே மாதம் 30 ஆம் திகதி, திங்கட்கிழமை. காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 'ஹலோ" என்றதும் அழைத்தவரின் குரலில் ஒரு தடுமாற்றமும,; பதற்றமும் தெரிந்தது. '..... வேலைக்குப் போகவில்லையா?" 'இல்லை, ஏன்?" 'மாமாங்கத்தில ஜேர்னலிஸ்ட் ஒருவரச் சுட்டுப் போட்டுக் கிடக்காம். அது தான். .... ஒருவேள நடேசண்ணையா இருக்குமோ?"
அழைத்தவரின் குரலில் இருந்த தடுமாற்றத்தின் காரணம் இப்போது தான் புரிந்தது. 'எனக்கும் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்." அழைப்பைத் துண்டித்ததும் அலறத் தொடங்கிய தொலைபேசி பல மணிநேரம் நிற்கவே இல்லை. சரியாக ஒரு வாரத்துக்கு முன், மே 24 ஆம் திகதி பகல் 11 மணி இருக்கும். கிழக்குப் பல்கலைக் கழக பொருளியல்துறைத் தலைவர் கு. தம்பையா இரண்டகர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மறுதினம். மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தினை அண்டியுள்ள அவரது வீட்டில் குழுமியிருக்கின்றோம். நான், நடேசன், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத் தலைவர் இரா. துரைரத்தினம். மூவரிடமும் சோகமும் விரக்தியும் மண்டிக் கிடக்கிறது. என்ன கதைப்பது? எதனைப் பகிர்ந்து கொள்வது? வெளியே வருமாறு கண்ணால் சைகை செய்கிறார் நடேசன். 'மூன்று பேரப் போடுற எண்டு முடிவெடுத்திருக்கிறாங்களாம். ஒரு லெக்சரர், ஒரு ஜேர்னலிஸ்ட், ஒரு பிஸ்னஸ்மேன்! லெக்சரரப் போட்டுட்டாங்கள். அடுத்தது ஜேர்னலிஸ்ட் தான். தவராஜாக்கு உடனடியாப் பிரச்சின வராது. முதல்ல யாழ்ப்பாணத்து ஆளப் போட்டுத்தான் மட்டக்களப்பு ஆளப் போடுவானுகள். துரை! நீ யாழ்ப்பாணம் போறாய். உடனடியாகத் திரும்பி வராத ஒண்டிரெண்டு கிழம நிண்டு பார்த்து ஆறுதலாய் வா." இவ்வளவு தூரம் இடிந்து போய் நடேசன் கதைத்து இதற்கு முன்னர் பார்த்திருக்கவே இல்லை. நடேசன் கூறியது போல் அன்று யாழ்ப்பாணம் புறப்பட்ட துரைரத்தினம், மீண்டும் 30 ஆம் திகதி அதிகாலை திரும்பி வந்தது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தேசப்பற்றாளர் நடேசனின் உடலத்தை காவல் துறையினருக்கு அடையாளம் காட்டவே. தொண்ணூறுகளின் முற்பகுதியிலேயே நடேசன் எனக்கு அறிமுகமானார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அப்போது அவர் ஒரு ஆசிரியர். ~நெல்லை நடேஸ்| என்ற இலக்கிய வாதியாகப் பிரபலமாகியிருந்த நடேசன் படிப்படியாக ஊடகவியலாளராகப் பரிமாணம் பெற்றுக் கொண்டிருந்த காலம். இலக்கிய ஆர்வலரான நான் மட்டக்களப்பு வாசகர் வட்டம் உட்பட பல இலக்கிய வட்டங்கள் நடாத்தும் இலக்கியச் சந்திப்புக்களிலேயே நடேசனை அறிமுகம் செய்து கொண்டேன். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து பல்கலைக் கழகத்தில் படித்து, பட்டம் பெற்ற நடேசன் பேருவளையில் ஆசிரியராக இருந்த காலத்தில் தான் வரதராஜப் பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாண சபையில் பொதுசனத்தொடர்பு அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். தோழர் சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடமைக் கட்சியில் அவருக்கு இருந்த தொடர்பும், ஈடுபாடும் பல்கலைக் கழகக் கற்கையின் போது உருவான சிநேகிதமுமே பின்னாளில் இப்பதவியை ஏற்றுக் கொள்ளக் காரணமானது. தான் வகித்த பதவி தொடர்பாக அதிகம் கதைப்பதற்கு அவர் முன்வராத போதும், அதனைத் தவிர்த்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் அவரிடம் இருந்தது. அதேவேளை, இதுவே அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோர், அவரது தேசப்பற்றைக் கொச்சைப் படுத்தவும் அவரை ~ஈ.பி.ஆர்.எல்.எப்.ஆள்| என்ற வரையறைக்குள் அடக்கிவிடத் துணியவும் வாய்ப்பை வழங்கியது. என்னைப் பொறுத்தவரை நடேசன், தனது குடும்பத்துக்கு அப்பால் நேசித்த விடயங்கள் இரண்டு முதலாவது ஊடகப் பணி: இரண்டாவது மட்டக்களப்பு. செய்தி சேகரிப்பதில் நடேசனுக்கு நிகரான வேறொருவரை வாழ்நாளில் நான் சந்திக்கவில்லை. அந்த அளவு வேகமாகவும், விவேகமாகவும் செய்திகளைத் திரட்டுவார். செய்தி மூலங்களை அறிந்து, தன்னால் முடியாவிட்டாலும் நண்பர்கள் ஊடாகவாவது தகவல்களைத் திரட்டிவிடுவார். மட்டக்களப்பைப் பொறுத்த வரை தனக்குத் தெரியாமல், தன்னை மீறி செய்தி எதுவும் வெளியே சென்று விடாது சென்று விடக்கூடாது என்ற குழந்தைத் தனமான இறுமாப்பு ஒன்று அவரிடம் இருந்தது. எல்லாத் துறைகளைப் போலவே செய்தித்துறையிலும் குழிபறிப்புகள் இருந்தன. நண்பர்கள் ஒரு சிலரின் இத்தகைய வேலைகளால் மனமுடைவு ஏற்பட்டாலும் கூட ஒரு சில நாட்களிலேயே அவற்றை மறந்து விட்டு பழையபடி சுமுகமாகப் பழகத் தொடங்கி விடுவார். ~செய்திகள் நம்மைத் தேடி வரும் என இருக்கக் கூடாது. செய்திகளை நாமாக தேடிச் செல்ல வேண்டும். அதைவிட செய்திகளை நாமாக உருவாக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்| என்பது எம்மைப் போன்ற புதிய ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்குகின்ற அறிவுரை. இரண்டாவதாக அவர் நேசித்த விடயம் மட்டக்களப்பு. 'மட்டக்களப்பு, மட்டக்களப்பு என்று சொல்லிக் கொண்டு, அவனவன் தன்ர பொக்கற்ற நிரப்பிக் கொண்டிருக்கின்றான். நீங்க அவனுகளுக்கு வால் பிடிச்சுக் கொண்டு திரியிறீங்கள். நீங்களும் அப்படித்தான் உங்கட எம்.பி.மாரும் அப்படித்தான்" எனக் காட்டமாகக் கூறும் நடேசன் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குரிய முன்மொழிவுகளைச் செய்வதற்கும் அதற்கான உத்வேகத்தை வழங்குவதற்கும் தவறியதில்லை. ஒருவனின் முன்னேற்றத்தைச் சகிக்க முடியாதவர்கள். அவரின் பிரதேசத்தைச் சுட்டிக் காட்டிப் பரிகசிக்கும் பழக்கம் மட்டக்களப்பின் மேட்டுக் குடியினர் மத்தியில் இருந்தது. தற்போதும் இருக்கவே செய்கிறது.
நடேசனை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அவரை அந்நியப் படுத்தி விட ஒரு சிலர் முனைந்த வேளைகளில், 'கனடாவில குடியேறினா 5 வருசத்தில பிரஜா உரிமை கிடைக்கும். ஆனா, மட்டக்களப்பில செத்த பிறகும் கிடைக்காது. எத்தன வருசம் செண்டாலும் நான் யாழ்ப்பாணத்தான், யாழ்ப்பாணத்தான் தான்! புதினமான சமூகமடா இது!" என அலுத்துக் கொள்வார். 'இப்ப நெல்லியடியில போய் நிண்டு நான் இந்த ஊர் தான் எண்டு சென்றால் என்ன யாருக்கடா தெரியும்? நடேசனின் ஆவேசத்துடனான இக்கேள்விக்குப் பதிலே இல்லை. இதைத் தவிரவும் அவருக்கு மற்றொரு ஆதங்கம் இருந்தது. அது தன் வாழ்நாளில் ஒரு தடவையாவது தேசியத் தலைவரைத் தனியாகச் சந்தித்துக் கதைப்பது. முடிந்தால் செவ்வி ஒன்றைப் பெறுவது. 2002 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நேரில் கண்டதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பு கிட்டவில்லை. இறுதியில் நடேசனின் இரண்டு ஆதங்கங்களுமே நிறைவேறவில்லை. மட்டக்களப்பில் பிறக்காத போதும் மட்டக்களப்பை மனதார நேசித்த அவரால் மட்டக்களப்பில் தனது உயிரை விட முடிந்த போதும், தனது பூதவுடலை விட முடியவில்லை. மட்டக்களப்பை நேசிப்பவர்கள் எனத் தங்களைக் கூறும் கைக்கூலிகளால் அவர் கொல்லப்பட்டதால் அவரது இறுதிக் கிரியைகளை மட்டக்களப்பில் நடாந்த அவரது உறவினர்கள் சம்மதிக்கவில்லை. தீமையிலும் நன்மை என்பதைப் போல அவர்கள் அவ்வாறு அனுமதி மறுத்தமையால் அவருக்கு ஒரு தேசப்பற்றாளருக்குரிய இறுதி மரியாதை நிகழ்வை நடாத்த முடிந்தது. இதனால் நெல்லியடி மக்களால் மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகெங்கும் வாழும் மக்களால் கூட நடேசன் யாரென்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அதிகாலை படைப் புலனாய்வாளர்களால் நடேசனின் வீட்டுக்குக் கைக்குண்டொன்று எறியப்பட்டது. அதிர்ஸ்ட வசமாக இலக்குத் தவறியதால் பாரிய சேதம் ஏற்படவில்லை. அன்றைய சம்பவத்துடன் 4 பிள்ளைகளின் தந்தையான அவர் வெகுவாக கலங்கிப் போனார். அதனை விடவும் அவர் கலங்கிய இரண்டு வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன. பாடசாலை சென்று வந்த அவரது கடைசி மகன். படைப்புலனாய்வுப் பிரிவிலுள்ள ஒரு தமிழரால்(?) வெருட்டப்பட்டு, மட்டக்களப்பு அந்தோனியார் தேவாயலத்தில் தனிமையான பகுதிக்குக் கொண்டு செய்யப்பட்டார். இதிலும் அவருக்கு அதிர்ஸ்டம் துணை நின்றது. தெரிந்தவர் ஒருவர் கண்டதால் பையனால் தப்பிவர முடிந்தது. அதிர்ச்சி காரணமாக சிறுவனால் ஒரு வாரத்துக்கும் மேலாக கதைக்க முடியாமற் போய்விட்டது. கடத்திச் சென்றவனின் நோக்கம் எதுவாக இருக்கக்கூடும் என்ற சிந்தனை நடேசனின் உள்ளத்தில் ஒரு பாரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 2001 ஆம் ஆண்டு யூலை மாதம் என நினைக்கின்றேன். கேணல் மானவடுகே என்பவர் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தளபதியாக தற்காலிகமாக பொறுப்பேற்றிருந்தார். மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடத்தில் 23.2 ஆவது படையணித் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்ட நடேசன் 'நீ ஒரு சீருடை தரிக்காத புலி. உனது செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் நீ மட்டுமன்றி உனது மொத்தக் குடும்பமுமே அழிக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டார். படைத்தரப்பின் அச்சுறுத்தல் என்பது ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை எதிர்பார்க்கப் படுகின்ற ஒன்றே. ஆனாலும், இராணுவத் தளபதி விளைவுகள் எதனையும் பற்றிக் கவலைக் கொள்ளாமல் தனது அலுவலகத்துக்கே வரவழைத்து எச்சரித்தமை நடேசனை மட்டுமன்றி எம்மனைவரையுமே கலக்கத்துக்கு ஆளாக்கியிருந்தது. இலக்கியவாதியான நடேசனுக்கு கட்டுரை வரைதல் ஒரு இலக்கியமா இல்லையா என்பதில் சான்றோருடன் பாரிய கருத்து வேறுபாடு இருந்தது. இது தொடர்பாக இலக்கியவாதிகளுடனும், பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் அடிக்கடி தர்க்கத்தில் ஈடுபடுவார். கட்டுரை ஒரு இலக்கியமே என்பதில் அவருக்கு ஆணித்தரமான கருத்து இருந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய நடேசன் நினைத்திருந்தால் தான் உண்டு: தன் வேலை உண்டு என வாழ்ந்திருக்கலாம். அவர் அவ்வாறு வாழ முனையவில்லை. அவர் போன்றவர்களால் அவ்வாறு வாழவும் முடியாது. அதனாலேயே அவர் இன்று தேசப் பற்றாளர் என்ற பெருமையோடு தமிழீழ சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றார். மட்டக்களப்பின் உண்மையான வரலாறு எழுதப்படும் காலத்தில் நடேசனின் பெயரும் அதில் இடம் பிடித்திருக்கும் என்பது நிச்சயம். அவரை அழிப்பதன் ஊடாக அவரை சரித்திரத்தில் இருந்து அகற்றிவிடத் துடித்தவர்களுக்கு அதுவே ஒரு பாடமாகவும் அமையும்.
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|







