SmallMediumLarge NarrowWideFluid
முஷாரப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி அச்சிடு E-mail
வியாழன், 12 ஜூன் 2008 14:31
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இதில் மிகத் தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியும் முன் வந்துள்ளார்.

முஷாரப் மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக ஷெரீப் உருவாக்கியுள்ள 10 அம்ச கண்டன தீர்மானத்தில், ராணுவ ஆட்சியை இரண்டு முறை அமல்படுத்தியது, அரசியல் சட்டத்தை மாற்றியது, நவாஸ் ஷெரீபை சிறையில் தள்ளியது, பிரதமருக்கே தெரியாமல் கார்கில் பகுதியில் படைகளை ஊடுருவ வைத்தது, இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாக காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சிறை வைத்தது, துப்பாக்கி முனையில் சர்வாதிகார ஆட்சி நடத்தியது,  இராணுவத்தை தன் தனிப்பட்ட படையாகப் பயன்படுத்தியது, தனக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு சலுகை காட்டியது, தனது ஆட்சி நீடிப்பதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இராணுவத்தை பயன்படுத்தியது, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவி விட்டு அறிவிக்கப்படாத போரை நடத்தியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இதில் கூறப்பட்டுள்ளன.

நவாஸ்-சர்தாரி கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் இந்தத் தீர்மானம் நிறைவேறுவது நிச்சயமாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந் நிலையில் கண்டனத் தீர்மானம் நிறைவேறுவதற்குள் முஷாரப் இராஜினாமா செய்துவிட வேண்டும் என அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.