| இராணுவ, அரசியல் புள்ளிகள் இலக்கு வைக்கப்படுவார்களா? |
|
|
| நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி | |
| 15. June 2008 23:49 | |
“எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது.
கடந்த சில நாட்களில் தலைநகர் கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் இலக்கு வைத்து நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இத்தகைய குண்டுத் தாக்குதல்கள் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் பொதுமக்களே இலக்கு வைக்கப்பட்டனர். போர்க்களங்களுக்கு வெளியே பொதுமக்களை இலக்கு வைப்பது சர்வதேச ரீதியில் ஒரு போரியல் குற்றமாயினும் இலங்கையில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்களை பதிலடித் தாக்குதல்களாகவே நோக்கலாம். வன்னியிலுள்ள பொதுமக்களை இலக்கு வைப்பதால்தான் கொழும்பில் இந்த நிலை ஏற்படுகிறது. கொழும்பிலுள்ள மக்களின் பாதுகாப்பு குண்டுத் தாக்குதல்கள் மூலம் கேள்விக் குறியாக்கப் பட்டமைக்கு படைத்தரப்பினரே காரணமானவர்கள். அதேநேரம் படைத்தரப்பினர் இத்தகைய குண்டுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் திராணியற்றவர்களாக உள்ளமை அவர்களுக்கு ஏற்பட்ட மற்றுமொரு இழுக்காகவே உள்ளது. வன்னியில் காட்டுப்பகுதி ஊடாக ஆழஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் செல்வதால் அந்தத் தாக்குதல்களை நடத்துபவர்களைப் பிடிப்பது சற்று கடினமான விடயமே. அத்துடன் வன்னியில் பொதுமக்களை இலக்கு வைக்கும் பெரும்பாலான தாக்குதல்கள் விமானங்கள் மூலமே நடத்தப் படுகின்றன. ஆனால், கொழும்பின் நிலைமை அவ்வாறில்லை. கொழும்பின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்துள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் குண்டுகள் வெடிக்கின்றன. குண்டு வெடிப்பை நடத்துபவர்கள் படைத்தரப்பினருக்கு 'டிமிக்கி" காட்டிவிட்டுத் தப்பி விடுகின்றனர். அதியுச்ச பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் எப்படி உள்நுழைகின்றனர் என்பதையும், குண்டுகளை எப்படிக் கொண்டு வருகின்றனர் என்பதையும் கண்டறிய முடியாமல் படைத்தரப்பு பெரிதும் குழம்பிப்போய் விட்டது. வன்னிக்கு வெளியே புலிகளின் இராணுவ புலனாய்வுத் துறையே தாக்குதல்களை ஒருங்கிணைப்பது வழமை. கொழும்பில் புலிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமான இருவர் இப்போது அங்கே இல்லை. அவர்களில் ஒருவர் புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் நியூட்டன். மற்றவர் புலிகளின் புலனாய்வுத்துறையின் இராணுவத் தாக்குதல் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ். கொழும்பின் பிரபல தமிழ் ஆசிரியர் நேரு மாஸ்ரருடன் கொழும்பிலிருந்து கண்டி சென்றுகொண்டிருந்த நிய+ட்டன் இராணுவ புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டார். இது நடந்தது 2005 ஆம் ஆண்டு. கேணல் சாள்ஸ் 2008 ஜனவரியில் மன்னார் பள்ளமடுவில் கிளைமோர் தாக்குதலில் வீரச் சாவடைந்தார். இவர்கள் இருவரும் கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் பங்கேற்றவர்கள். புலிகளின் தலைமைத்துவத்தால் அதிகம் நேசிக்கப் பட்டவர்கள். இவர்களின் இழப்பு கொழும்பில் இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்றே எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், எதிர்பார்க்கப் பட்டதற்கும் மாறாக இன்று கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தக் குண்டுத் தாக்குதல்களை நிறுத்தும் வல்லமை படைத்தரப்பிற்கு உள்ளதா? அல்லது இனிமேலும் முடியுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் கேணல் சாள்ஸின் உயிரிழப்பு குறித்து புலிகள் தகவல் வெளியிட்ட பின்னரே கேணல் சாள்ஸ் என்றால் யார், அவர் நடத்திய தாக்குதல்கள் எவை என்பன பற்றிய விபரங்களை இராணுவ புலனாய்வுத்துறை பெற்றுக் கொண்டது. இதுதான் இராணுவ புலனாய்வுத்துறையின் லட்சணம். இந்த லட்சணத்தில் கொழும்பிலிருந்து கொண்டு தற்போது செயற்படும் புலிகளின் முக்கியஸ்தர்களையோ அல்லது போராளிகளையோ இராணுவப் புலனாய்வுத்துறை கைது செய்யலாம் என்று நினைப்பது நகைப்புக்கு இடமானதாகவே இருக்கும். தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் பொதுமக்கள் குறிவைக்கப்படும் சம்பவங்களின் பின்னணியை எடுத்துப் பார்த்தால் அதற்கு முதல்நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்னதாகவோ வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பது தெளிவாகும். எனவே, வன்னியில் பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமெனில் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்க வேண்டிய தேவை முன்னிருப்பது கசப்பான உண்மைதான். தமது பகுதியிலுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டிய திட்டங்களைத்தான் புலிகள் முன்னெடுத்து வருகின்றனர். அது குறித்து இன்று சர்வதேச சமூகமும் புரிந்து கொண்டுள்ளது. முன்பெல்லாம் வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை கண்டும் காணாமலும் இருந்துவந்த சர்வதேசம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் புலிகளை நேரடியாகக் கண்டித்து வந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அரசாங்கமும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென்று நேரடியாகவே தெரிவிக்கும் சர்வதேசம், கொழும்பில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளை கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. சர்வதேச சமூகத்திற்கு இப்போது ஓரளவுக்கு யதார்த்தம் புரிந்து விட்டது. சர்வதேசம் கூறுவதுபோல் அரசாங்கம் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவது தவிர்க்கப் படலாம். ஆனால், வன்னியில் பொதுமக்களை இலக்கு வைக்கும் தாக்குதல்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்வருமா என்பது கேள்விக் குறியே. அறுதியிட்டுக் கூறுவதானால் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்துமென எதிர்பார்ப்பது கல்லில் நார் உரித்த கதைபோன்றே இருக்கும். இதன் காரணமாகவே தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் அரசாங்கமும் படைத்தரப்பும் மேலதிக நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இன்னும் சந்திக்கப் போகின்றன. இந்தவொரு நிலை தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் ஒருவித பதற்றத்தை உருவாக்கி தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைப் போக்கை உண்டு பண்ணும் சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளது. மொறட்டுவ பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலையடுத்து பல்கலைக் கழகத் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவமும், தெகிவளை மற்றும் வெள்ளவத்தை பகுதியிலுள்ள தமிழர்களின் வீடுகள் சிலவற்றிற்கு வீசப்பட்ட கல்லுகளும், வீதியால் சென்ற தமிழ் இளைஞர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்ட சம்பவமும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபமிடும் சம்பவங்களாகவே பார்க்கப் படுகின்றன. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயம் தற்போது அரசின் கைகளிலேயே உள்ளது. அதாவது பந்து அரசின் கைகளிலேயே உள்ளது. இந்தப் பந்தை அரசு சரியாகக் கையாளாத சந்தர்ப்பத்தில் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் கொழும்பிலும் இயல்புநிலை முற்றாகச் சீர்குலைந்து கலவர நிலை தோற்றம் பெறக்கூடும். வன்னியில் பொதுமக்களை இலக்கு வைக்கும் தாக்குதல்களை நிறுத்தும் பட்சத்தில் இந்நிலை மாற்றமடையலாம். அரசு இதில் எதனை விரும்;புகிறது என்பதை அடுத்துவரும் நாட்களில் ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ளலாம். அதேநேரம் கொழும்பிலிருந்து செயற்படும் புலிகளால் சிங்கள மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல அரசியல் பிரமுகர்களினதும் பாதுகாப்பும் மேலும் மேலும் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கிறது. அரச தரப்பு முக்கிய அரசியல்வாதிகளினது பாதுகாப்பு வாகனங்களைத் தொடர்ந்து நோயாளர்காவு வாகனமும் கூடவே செல்லும் அளவுக்கு நிலைமை மோசடைந்திருக்கின்றது. இதுவே கொழும்பின் இன்றைய நிலை. தமது பாதுகாப்புப் பிரிவில் நம்பிக்கை இழந்ததன் விளைவாகவே நேயாளர்காவு வாகனமும் அரசியல்வாதிகளுடன் கூடவே நகர்ந்து வருகிறது.
கொழும்பில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தாக்குதல்களில் பொதுமக்களே அதிகமாக இலக்கு வைக்கப்பட்டாலும் நாளடைவில் இந்நிலை பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக மேலும் தீவிரமாக விரிவடையலாம். கடந்த சில நாட்களாக கொழும்பிலும் அதனையண்டிய பகதிகளிலும் குண்டுகள் மீட்டகப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்களை வெளியிட்டு வருகிறது. பேருந்துகளிலும், பொது இடங்களிலும் இருந்து கண்டு பிடிக்கப்படும் குண்டுகளின் எண்ணிக்கை வழக்கம் போல் அல்லாமல் மிகவும் அதிகமாகவே இருப்பது கொழும்பில் புலிகள் தாக்குதல்களை மேலும் தீவிரமாக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளனரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி இருக்கிறது. யால காட்டுக்குள் முன்பு இருந்தவர்களைவிட தற்போது மேலதிகமாக 500 இற்கும் அதிகமான புலிகள் வருகை தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. யால, பொத்துவில், லூஹகல, றதெல்ல ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள இவர்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். வெளியே வரமுடியாத சந்தர்ப்பத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் வியாபாரிகளுக்குப் பணத்தாசை காட்டிப் பொருட்களைக் காட்டுக்குள் கொண்டுவர வைக்கின்றனர். பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்கும் ஆசையில் புலிகளுக்குத் தேவையானவற்றை இந்த வியாபாரிகள் வழங்கி வருகின்றனர். யாலவில் நிரந்தரமாக வசிக்கும் சிங்கள மக்களும் முஸ்லிம்களும் அங்கே பாதுகாப்புக் கெடுபிடிகள் இன்றி நடமாடுவதால் அவர்களையே தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக புலிகள் வளைத்துப் போட்டுள்ளனர். இதனைப் பாதுகாப்புத் தரப்பினரின் உளவுத் தகவல்களும் உறுதிப் படுத்தியிருந்தன. இதனால் யாலவில் பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காட்டுக்குள் நுழையும் சிங்கள மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் கடுமையாக கண்காணிக்கப் படுகின்றனர். ஆனாலும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமது படையினருக்கே தண்ணிகாட்டி விட்டு மாற்றுப் பாதைகள் ஊடாக உழவு இயந்திரங்களிலும் மாட்டு வண்டில்களிலும் காடுகளுக்குள் சென்று விடுகின்றனர். அங்கே பொருட்களும் பணமும் கைமாறுகின்றன. இந்த விடயங்கள் அங்குள்ள பாதுகாப்புத் தரப்பினருக்கு தெரியவந்த போதும் அவர்கள் கையாலாகதவர்களாகவே இருப்பது வேடிக்கையான விடயமே. பெரும்பாலான வியாபாரிகள் பொத்துவில் காட்டுக்கு பகுதி ஊடாகவே அடர்ந்த காட்டுக்குள் விறகு வெட்டச் செல்பவர்கள் போன்று நுழைகின்றனர். உண்மையில் விறகு வெட்டச் செல்பவர்களும் இப்பகுதி ஊடாகவே காட்டுக்குள் நுழைவது வழக்கம். ஆனால் விறகு வெட்டச ;செல்பவர்கள் போன்று செல்லும் வியாபாரிகள் தப்பிவிட உண்மையான விறகு வியாபாரிகள்தான் படைத்தரப்பிடம் மாட்டி வருகின்றனர்.
கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை பொத்துவில் பெரிய உல்லை ஊடாக காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற 12 பேரை காட்டுக்குள் இருந்த ஆயுததாரிகள் கைதுசெய்தனர் என்றும் பின்னர் மூவரை விடுவித்து பொருட்களைக் கொண்டுவருமாறு கூறினர் என்றும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் மூவரும் படைத்தரப்பிடம் வந்து காட்டுக்குள் நடந்தவை பற்றி விபரித்துள்ளனர். உடனடியாகவே அதிரடிப்படையின் விசேட படையணி அப்பகுதிக்கு விரைந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு விட்டனர். நன்றி: சுவிஸ் நிலவரம் பத்திரிகை( 13.06.2008 ) கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



“எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது.




