| ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்படுமா? |
|
|
| நிலவரம் பத்திரிகைக்காக சண் தவராஜா | |
| 16. June 2008 00:09 | |
அ ணு வல்லரசாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா? ஈராக் மீதான ஆக்கிரமிப்பாலும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும் ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப் போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திர நிலை மேலும் குழம்பிப் போகுமா? உலகின் அநேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் எரிபொருட்களின் விலை மேலும் உயர வழி செய்யுமா? இது இன்றைய உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
தனது உள்ளூர் சக்தித் தேவைகளுக்காக அணுசக்தியை விருத்தி செய்வதாகக் கூறி வரும் ஈரானின் அரசுத் தலைவர் மஹ்மூத் அஹமடினிஜாட், 'இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் இருந்து வருபவர். அவர் தனது கருத்தைப் பகிரங்கமாகவும் வெளியிட்டு வருகின்றார். இது தவிர பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசத்தில் காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் லெபனான் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக விளங்கும் போராளிக்குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் ஆதரவளித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுள் அநேகரால் 'சாத்தான்" என வர்ணிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய உலகிற்குத் தலைமை தாங்கத் துடிக்கும் ஈரான், அணுவல்லரசாக மாறுவதை எப்படியாவது தடுத்துவிடத் துடிக்கும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம், அதன் செல்லப்பிள்ளையான இஸ்ரேல் என்பவை ஈரானில் அணுசக்தித் திட்டத்தை - முடிந்தால் எண்ணெய் வளம்மிக்க ஈரானை - அழித்துவிட, அங்குள்ள வளங்களைக் கொள்ளையிடத் துடிக்கின்றன. ஈராக்கில் சதாம் ஹ_சைன் விடயத்தில் எவ்வாறு நாசகார ஆயுதங்களைக் கண்டறியும் குழுவை வைத்துக் கொண்டு இல்லாத ஆயுதங்கள் இருப்பதான மாய்மால அறிக்கைகளைப் பெற்று அதன் அடிப்படையில் ஐ.நா. சபையின் அனுமதி கூட இல்லாமல் அமெரிக்கா போர் தொடுத்ததோ அதைப்போன்ற அறிக்கைகளை சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு ஈரான் மீது பாய்ந்துவிட அமெரிக்கா துடிக்கின்றது. இத்தனைக்கும் 2007 டிசம்பர் 3 இல் அமெரிக்க உளவு நிறுவனங்கள் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த அறிக்கை, '2003 ஆம் ஆண்டிலேயே ஈரான் அணுகுண்டு உருவாக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாக"த் தெரிவிக்கின்றது. எனினும், 'தற்போதைய நிலையில் அணுகுண்டு உற்பத்தித் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனச் சரியான தகவல்கள் இல்லை" எனக் கூறுகின்றது. என்றாலும் கூட இந்த அறிக்கையை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது.
ஈரான் மீது போர் தொடுக்கப்பட வேண்டும் என அண்மையில் இஸ்ரேலிய துணைப்பிரதமர்களுள் ஒருவரும் போக்குவரத்து அமைச்சருமான சாவுல் மோபாஸ் கருத்து வெளியிட்ட கணத்திலேயே மசகு எண்எணயின் விலை 11 டொலர்களால் உயர்ந்து விட்டது. எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் உலகம் முழுவதிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு யுத்தத்தையும் கட்டுக் கடங்காத எரிபொருள் விலையேற்றத்தையும் அமெரிக்காவின் கூட்டாளிகளால் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஏனெனில், இவ்வாறான சூழலில் உள்நாடுகளில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பு தமது ஆட்சிக்கே அச்சுறுத்தலாகிவிடும் அபாயம் இருப்பதை அந்த நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, எரிபொருள் விலையேற்றத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் போர்க்கொடி உயர்த்தி விட்டனர். தமக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இவர்கள் அண்மையில் ஐரோப்பியப் பாராளுமன்றம் முன்பாகப் போராட்டம் நடாத்தியிருந்தனர். அத்துடன், ஈரான் மீதான தாக்குதல் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைப் போன்று இலகுவானதாக இருக்கப் போவதில்லை என்ற ஒரு புரிதலும் கூட மேற்குலக நாடுகளிடம் உள்ளது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் போது சதாம் ஹ_சைன் கிட்டத்தட்ட இஸ்லாமிய உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தார். ஆனால், ஈரானின் நிலைப்பாடு வித்தியாசமானது. ஷியா பிரிவு முஸ்லிம்களைக் கொண்ட ஈரான், இஸ்லாம் என்ற தத்துவத்தை முன்னுறுத்தியே தனது அனைத்துக் காரியங்களையும் செய்து வருகின்றது. இந்நிலையில் அதனை இஸ்லாமிய உலகில் இருந்து தனிமைப்படுத்துவது கடினமானது. இத்தகைய பின்னணியிலேயே, ஈரான் மீதான படையெடுப்புக்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணு உலையை இலக்குவைக்கும் தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்ட அமெரிக்காவின் கூட்டாளிகள் தயங்கி வருகின்றனர். அணுசக்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கடந்த 18 வருடமாக ஈரான் மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில வருடங்களாக இது தொடர்பான அதிருப்தியை மேற்குலகம் விடுத்து வருகின்றன. எனினும் இந்த விவகாரம் திடீரென சூடுபிடித்ததற்;கு ஏதாவது காரணம் இருக்கிறதா? இஸ்ரேல் தனது 60 ஆவது சுதந்திரதினத்தை அண்மையில் கொண்டாடியது. இதன்போது கருத்து வெளியிட்ட, ஈரானிய அரசுத் தலைவர், 'யூதர்கள் மீதான மனித வேட்டை என்பது ஆதாரமில்லாத கதை. இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்" எனக் கருத்து வெளியிட்டிருந்தார். இதேசமயம் உள்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இஸ்ரேலியப் பிரதமர் எஹ_ட் ஓல்மட் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஈரான் விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டார். அவரது பதவிக்குக் குறிவைத்துள்ள அவரது சகாக்களோ அவரைவிடத் தீவிரமான அறிக்கைகளை இதுவிடயத்தில் விடுத்து வருகின்றனர். மறுபுறம் தனது பதவிக்காலத்தில் இரண்டு யுத்தங்களைப் பிரகடனஞ் செய்தவர் என்ற பெருமையைப் பெற்ற அமெரிக்க அரசுத் தலைவர் ஜோர்ஜ் புஷ், ஈராக் விவகாரத்துக்கு தனது பதவிக் காலத்தில் முடிவுகாண முடியாமல் தவிக்கிறார். தற்போதைய நிலையில் ஈராக் மண்ணில் 1,40,000 அமெரிக்கத் துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன. இதுதவிர மாதமொன்றுக்கு 10 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டு வருகின்றது. முடிவில்லாமல் நீண்டு செல்லும் இந்த யுத்தத்தில் யூலை மாதம் ஒரு முக்கிய காலமாகும். ஐ.நா. சபையில் அமெரிக்கா வற்புறுத்திப் பெற்ற அனுமதி அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது. இந்நிலையில் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேறியாக வேண்டும். இன்றைய நிலையில் அமெரிக்கா வெளியேறினால் ஈராக்கில் உள்ள பொம்மை அரசு தாக்கி எரியப்படும். உள்நாட்டு யுத்தம் வெடிக்கும். நாடு ஈரானிய ஆதரவு ஷியா போராளிகளின் கையில் விழும். இதனை, அமெரிக்கா விரும்பவில்லை. இந்நிலையில் ஈராக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. இதற்கான சம்மதத்தைப் பெற ஈராக்கிய பிரதமர் நூரி மாலிக்கி தெஹ்ரானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதற்குச் சம்மதம் தெரிவிப்பதனூடாக தனது அணுத்திட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஈரான் முயலுமா அல்லது தனது அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக நிற்குமா என்பது ஒரு சில நாட்களில் தெரியவரும். தனது பதவிக்காலத்தில் ஈராக் விவகாரத்துக்கு முடிவுக்காண விளையும் ஜோர்ஜ் புஷ் ஈரான் விவகாரத்திலும் தலையிட நினைக்கின்றார். இதற்கு அடுத்த அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஆகியோரின் ஆதரவைக் கோரி வருகின்றார். இவர்கள் பச்சைக் கொடி காட்டினால் நவம்பர் 3 இல் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்று அடுத்த ஆண்டு ஜனவரி 20 இல் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு இடையில் ஈரான் மீது தாக்குதல் நடாத்தப்படலாம் என ஆரூடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜோன் மக்கெய்ன் Bomb, bomb, bomb! bomb, bomb, Iran! என்ற பாட்டுக்கு நடனமாடியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. Aipac என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய யூத அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட பராக் ஒபாமா, 'ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதில் சாத்தியமான அனைத்து வழிகளும் பிரயோகிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இவர் அனைத்து வழிகளிலும் என்பதை அழுத்திக் கூறியதனூடாக 'ஈரானுடன் பேச்சு நடாத்தப்படும்" எனத் தான் முன்னர் தெரிவித்த கருத்தில் இருந்த விலகியுள்ளாரா அன்றி தேர்தல் பிரசாரத்துக்காக இவ்வாறு கூறினாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தலைவர்களின் முடிவுகள் யுத்தத்தை நோக்கியதாக இருந்தாலும் அனைத்து வழிகளிலும் பாதிக்கப்படும் பொதுமக்களின் முடிவு யுத்தத்துக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றது. தலைவர்கள் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்களா? அல்லது மக்களின் கருத்துக்குச் செவி சாய்க்காமல் தாம் விரும்பியபாதையில் செல்வார்களா என்பது அடுத்த 6 மாதங்களுள் தெரிந்து விடும். நன்றி நிலவரம் கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|








