|
வியாழன், 26 ஜூன் 2008 07:14 |
|
அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி புஷ், இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
புஷ்ஷின் இந்த விருப்பத்தை, ஜனாதிபதி மாளிகையின் ஊடகச் செயலாளர் டானா பெரினோ வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிப் பிரதிநிதிகளின் கூட்டம் டில்லியில் நேற்றுப் புதன்கிழமை நடைபெறுவதற்கு முன்னர் இந்தக் கருத்தை அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை ஜனாதிபதி புஷ் இற்கு அவ்வப்போது தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட ஊடகச் செயலாளர் டானா பெரினோ, இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதென்று புஷ் கருதுவதாகக் கூறினார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதியுடன் புஷ்ஷின் பதவிக் காலம் முடிவடைவதாகவும், புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற புஷ் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் அடுத்து பதவிக்கு வரவுள்ள ஆட்சியாளர்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பார்களென அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் காசே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
|