| ஜி-8 மாநாட்டில் புஷ்-மன்மோகன் சந்திப்பு: அணுசக்தி ஒப்பந்த முன்னேற்றம் குறித்து முக்கிய ஆலோசனை? |
|
|
| சனி, 05 ஜூலை 2008 01:19 |
|
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ நகரில் ஜி-8 மாநாடு வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. இதில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர், முக்கிய அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், இதர துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பிரதிநிதிகள் ஜப்பான் புறப்பட உள்ளனர். வெளியுறவுத் துறை செயலர் பேட்டி: இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: ஜி-8 மாநாட்டில் ஜூலை 9-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சந்திக்கும்போது, இந்திய-அமெரிக்க நாடுகள் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து புஷ்ஷிடம் மன்மோகன் சிங் தெரிவிப்பார். மற்றபடி அவர்கள் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்பதை தற்போது கூற இயலாது. எவ்வளவு விரைவாக... அணுசக்தி ஒப்பந்தத்தை எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனும், அணு உலைகளுக்கு எரிபொருள் வழங்கும் நாடுகளின் (என்எஸ்ஜி) பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஜி-8 மாநாட்டில் என்எஸ்ஜி நாடுகளின் தலைவர்களும் வருவார்கள். அவர்களுடன் தேவையான வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றார். அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் முடிந்து கொண்டிருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆக்கர்மென் கூறிய கருத்து குறித்து சிவசங்கர் மேனனிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிவசங்கர் மேனன் குறிப்பிட்டார். மாநாட்டில்... உலக வெப்பமாதல், உணவுப் பற்றாக்குறை, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவாதங்களுடன் பல்வேறு சர்வதேச பிரச்னைகள் ஜி-8 மாநாட்டில் அலசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |








ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டின்போது அங்கு வரும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.