20. November 2008 16:57
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
21. August 2008 23:30
29. September 2008 22:52
19. August 2008 23:28
13. October 2008 13:01
மதமா அரசியலா போரா மருந்தா எதனால் அதிக பணம் பண்ணலாம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பிறேம்   
21. February 2007 05:04

ஒவ்வொரு நாளும் உன்னதமான நாளே

மதமா அரசியலா போரா மருந்தா எதனால் அதிக பணம் பண்ணலாம் ?





 உண்மையான உழைப்பு, தொழில்களின் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் இவைகளால்தான் அதிக பணம் உழைத்து முன்னேறலாம் என்று ஒரு காலத்தய மனிதன் கருதினான். அப்படியொரு காலம் இருந்தது உண்மைதான். ஆனால் இன்று அது வெறும் கனவுத்தனமான வாசகமாகிவிட்டது. பணம் பண்ணுவதற்கும் உற்பத்திக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை இன்றைய உலக நாடுகளின் போக்கு நமக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 உலகத்தில் எந்த நாடுகளுக்குப் போனாலும் அங்குள்ள விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் பெரிய இடங்களை பிடித்திருப்பவர்கள் சாமியார்கள்தான். இவர்கள் சகல சமயங்களில் இருந்தும் வெளிவந்த மனிதர்கள்தான். சர்வதேச பயங்கரவாதி என்று கூறப்படும் பின்லேடன் கூட அபிவிருத்திக்காக எதையும் கூறவில்லை ஒரு மதப்போரைத்தான் தொடர்ந்த பிரகடனப்படுத்தி வருகிறார். இயேசுநாதரின் பெயரில் இன்று எத்தனையோ சாமியார்கள் உலகத்தின் சுவர்களில் எல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தியா சென்றால் சாதாரண ஆட்டோக்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை இந்த சாமியார்களுக்கே முதலிடம். இப்போது ஐரோப்பாவின் தொலைக்காட்சிகளிலும் சாமியார்கள் மிகப்பெரிய விளம்பரங்களை பெரும் பணம் செலவழித்து செய்து வருகிறார்கள்.

 சமீபத்தில் கடவுள் இல்லை என்ற திராவிடர் கழக பாசறையில் இருந்த மு.கருணாநிதியை சத்தியசாயிபாபா சந்தித்தார். தமிழகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு 200 மில்லியன் ரூபாய்களை வழங்கினார். இரண்டு அமைச்சர்களுக்கு மோதிரங்களை வாயில் இருந்து வரவழைத்து வழங்கினார். தந்தை பெரியார் இருந்திருந்தால் கலைஞரைப்பற்றி என்ன கருத்துரைத்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய பெரியார் கழக கி. வீரமணியால் இயலவில்லை. இப்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அம்மா, அம்மா என்று ஒரு பெண்மணியின் படம் ஒட்டப்பட்டிருக்கிறது. அன்னை. ஆனந்தமயிர்தி என்று கூறுகிறார்கள். இந்த அம்மாவும் மு.கருணாநிதியை சந்தித்து ஒன்பது கோடி ரூபாய்களை வழங்கினார்.

 சாமியார் என்றால் யார் இத்தனை கோடிகளையும் அவர்கள் எங்கிருந்து சம்பாதித்தார்கள். இவர்களுக்கும் சாதாரண மனிதருக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டால், உடலை வருத்தி உழைக்காத இந்த சாமியார்களிடமே இன்று பணம் கோடிக்கணக்கில் விளையாடுகிறது தெரியவரும். இவர்களுடைய பணம் எல்லாம் அடியவர்கள் கொடுத்தது என்கிறார்கள். எனவேதான் பணத்தை உழைக்க மதம் ஒரு சிறந்த தொழிற்சாலை என்று கூற வேண்டிய நிலையை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். பெரும் பெரும் நடிகைகள் எல்லாம் சாமியார்களின் காமக்கிழத்திகளாக இருந்த கதை சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வெளியானது. பல கிறீஸ்தவ பாதிரியார்கள் பிரிட்டனிலும், இங்கிலாந்திலும் ஓரினச் சோர்க்கையில் ஈடுபட்ட வழக்குகள் நடைபெற்றமை தெரிந்ததே.

 இவர்கள் எல்லாம் பட்டினத்தாரையும் பத்திரகிரியாரையும் மறந்து விட்டார்கள்.

 துறவறத்தை மேற்கொண்ட பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஒரு இடத்தில் சந்தித்தபோது பத்திரகிரியார் கையில் பிச்சை எடுக்க ஓர் ஓடு இருந்தது. பட்டினத்தாரிடம் அதுவும் இருக்கவில்லை. பத்திரகிரியாரைப் பார்த்து என்னைவிட நீயே பணக்காரன் என்று கூறினார் பட்டினத்தார். உடனே பத்திரகிரியார் கையில் இருந்த பிச்சைப்பாத்திரத்தையும் வீசி எறிந்தார். கோவணத்தைக் கூட வீசியெறிந்து பற்றற்ற மனிதர்களாக வாழ்ந்து காட்டினார்கள். பட்டினத்தார், பத்திரகிரியார் இருவருமே பெரும் செல்வந்தர்களாக இருந்து துறவிகளானவர்கள். இது போலவே அரச முடியைத் துறந்து துறவியானவர் புத்தர். இன்று சிறீலங்கா அரசிடம் பென்ஸ் கார்களை பரிசாக பெறுமளவிற்கு பணக்காரராக இருக்கிறார்கள் புத்தபிக்குகள். பணத்தை உழைக்க முதலீடு இல்லாமல், பாடுபடாமல் இலகுவான வழி எதுவென்று கேட்டால் சாமியார் வேடமே சிறந்தது என்பதை உணர இந்த உதாரணங்கள் போதும். அரசியலில் எதை நீங்கள் சாதிக்க விரும்பினாலும் இப்போது போக வேண்டிய இடம் மந்திரிகள் அல்ல மாந்திரீகம் செய்யும் இந்த சாமியார்களிடம்தான் என்பதே சாசுவதமான உண்மையாகிவிட்டது.

 மதம் மட்டுமா பணம் சேர்க்க உதவுகிறது இல்லை அரசியலும் முக்கியம் பெறுகிறது. அரசியலில் ஈடுபட்டால் உழைக்காமலே பெரும் பணத்தை சுரண்டி கோடீஸ்வரனாகிவிட முடியும் என்பதால் மக்கள் அரசியலை நோக்கி ஓடுகிறார்கள். சுனாமிக்காக சேர்க்கப்பட்ட பணத்தை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் அரசியல் அதிகாரங்கள் சூறையாடியிருக்கின்றன. எதைச் செய்வதானாலும் இன்று அரசியல் தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுக்காமல் செய்வது இயலாத காரியமாகி வருகிறது. ஆசியாவின் அரசியல் தலைவர்களில் பலர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் பாடசாலை சென்று கஸ்டப்பட்டு படித்தவர்களோ, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டவர்களோ அல்ல. மதத்தைப் போலவே உற்பத்தி இல்லாமல் பணத்தை பெட்டியில் போடக்கூடிய தொழிற்சாலையாக அரசியல் மாறியிருக்கிறது. அங்கே இவர்கள் உழைக்காமல் உண்ணும் குருவிச்சைகளாக ஒட்டியிருக்கிறார்கள்.

 போர் என்பது அழிவிற்கே காரணமாகிறது என்று மக்களில் பலர் கருதுகிறார்கள். ஆனால் இன்று அதிக பணத்தை வருத்தமில்லாமல் உழைக்க ஆதாரமாக அமைவது போர்தான். ஈராக் போரில் கைமாறிய பணம் இதுவரை எந்தவொரு அபிவிருத்தியிலும் கைமாறவில்லை. ஈராக்கிற்கான உணவு மருந்து பரிமாற்றத்திற்கு பதிலாக எண்ணெய் என்ற பேரத்தில் ஐ.நா சபையின் அதிகாரிகளே கோடான கோடிகளை வாரி தமது பாக்கட்டுக்களில் போட்டுக் கொண்டார்கள். ஈராக்கை போர் மூலம் அழிக்கும் பணிக்கு கைமாறிய பணம் ஒரு தொகுதி, பின் அதன் அபிவிருத்திக்கு கைமாறிக் கொண்டிருக்கும் பணம் அதைவிட பலபலப்பல கோடியாகும். ஆயுத விற்பனை, தரகு, அகதிகளுக்கான செஞ்சிலுவைச்சங்க சேவை, கண்ணிவெடி விற்றல், பின் அதையே அகற்றல் என்று போராகவும் சமாதானமாகவும் செய்யப்படும் வர்த்தகம் கணக்கு காட்டத் தேவையில்லாத பெரும் வர்த்தகமாக இருக்கிறது. அதிக பணம் உழைக்க அறிவுள்ள நாடுகள் தேடுவது போர்தான். பணத்தை உழைக்கும் மிகப்பெரிய அதி நவீன தொழிற்சாலை போர்க்களம்தான். எனவேதான் உலகில் என்றுமே போர்கள் ஓயப்போவதில்லை. போரை நிறுத்தினால் சிறீலங்கா என்ற அரசே இந்து சமுத்திரத்தில் தாழ்ந்துவிடும், அதை வாழ வைப்பதே போர்தான் என்பது பலர் அறியாத உண்மையாகும்.

 இவைகள் தவிர பணத்தை உழைக்க மிகப்பெரும் துணையாக அமைவது மருந்துப் பொருட்கள் அழகுசாதன விற்பனைகளாகும். உடல் இளைக்க, தலையில் முடி வளர, சலரோகம் இல்லாமல் போக, இளமை பெற, மருத்துவ சிகிச்சை என்று கூறுகிறார்கள். முன்னர் மதம் பரப்பித் திரிந்த பலர் இப்போது காளான்களில், பாசிகளில் மருந்துப் பொருட்களை செய்வதாகக் கூறி மருந்தோடு மதமும் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஏமாற்று மருந்துகளை அறியாமை மிக்க பாமர மக்கள் பெருந்தொகையாக வாங்குகிறார்கள், ஏமாற்றமடைகிறார்கள். உற்சாகமாக இருக்கிறோம் என்று சில மருந்துகளை வாங்கிவந்து அவற்றால் இரத்த அழுத்தம் அதிகமாகி, அதற்காக வைத்தியம் செய்த பல தமிழர்களை நான் நேரடியாகப் பார்த்துப் பேசி அவர்களிடமிருந்த போலி மருந்துகளை பிடுங்கி வீசியுமிருக்கிறேன்.

 கவர்ச்சி ஏமாற்றத்திற்கு பலியாகி பல இளம் பெண்கள் பல்லாயிரக்கணக்கான பணத்தைக் கொடுத்து கிறீம்கள், மாத்திரைகள் போன்றவற்றை வாங்கி தமது இளமையையும், பணத்தையும் நாசமாக்கி இளவயதிலேயே முதிர் கிழவிகளாகி வருகிறார்கள். டென்மார்க்கில் மட்டும் பல அந்தர் மருந்துப் பொருட்கள் மாதாமாதம் பார்சல்களாக வருகின்றன. இணையம் மூலம் பல ஏமாற்றுப் பேர்வழிகள் விற்கும் மருந்துகளை இவர்கள் வாங்கி ஏமாற்றமடைகிறார்கள். முன்னர் டெற்றாசைக்கிளின் என்ற மாத்திரையை விற்ற அமெரிக்கா ஒவ்வொரு மாத்திரையிலும் 350 மடங்கு அதிக இலாபம் வைத்திருந்தது. போலியாக மருந்து விற்றால் எவ்வளவு இலாபம் வருமென ஊகித்துப் பார்க்க இந்த உதாரணம் தரப்படுகிறது.

 இவை தவிர பெரும் முதலாளிகளுக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் காமக்கிழத்திகளாக இருக்கும் பல மாடல் அழகிகள், எச்.ஐ.வி வைரசை பரப்பி வைத்தியம் பண்ணும் அதிகாரசக்திகள், போதைவஸ்த்து கடத்தும் மாபியாக் கூட்டங்கள், விபச்சாரிகளை நாடுநாடாக விநியோகிப்போர் என்று இலகுவாக பணம் தேடுவோரை பட்டியலிடலாம். இவர்களுடன் ஒப்பிட்டால் நெற்றி வியர்வை சிந்தி பாடுபடும் தொழிலாளர் பரிதாபமானவர்களே. ஏழ்மையிலிருந்து அவர்களுக்கு என்றும் விடிவு கிடைக்கப் போவதில்லை, மேற் சொன்ன சக்திகள் அவர்களை நின்மதியாக வாழவிடப் போவதுமில்லை. இதுதான் இன்றைய உலகின் பொருளாதார, அரசியல், சமுதாய வாழ்வின் உண்மை நிலையாகும்.

 இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் இன்றைய பொருளாதார ஒழுங்கமைப்பில் உள்ள பாரிய தவறுதலே காரணம் என்று திட்டவட்டமாகக் கூறலாம். போரே இல்லாத உலகம், மோசடிகள் இல்லாத உலகம், ஏழைகள் இல்லாத உலகம், உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லாத உலகம், வல்லரசு நாடுகள் ஏழை நாடுகள் என்ற பேதமில்லா உலகம் என்று நாம் காணும் கனவுகள் அத்தனையையும் நிறைவேற்றக் கூடிய அத்தனை வளங்களுடனும் இந்த உலகைப் படைத்திருக்கிறான் இறைவன். அதனை சரியாக பங்குபோடத் தெரியாத அறியாமை காரணமாகவே மதம் தொடங்கி போர்கள் வரை அத்தனை அவலங்களும் உலகில் உருவாகியிருக்கின்றன.

 ஒவ்வொரு மனிதரும் இந்த உண்மைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உழைப்பின் வலி அறியாத இவர்கள் பணத்தின் எஜமானர்களாக இருப்பது ஏன் என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் ஏமாரும் மக்களே அல்லாது ஏமாற்றுவோர் அல்ல என்பதே உண்மையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தெளிவுள்ள மனிதனாக மாறினால் மதங்கள் முதல் மருந்துகள் வரை எவற்றாலுமே ஏமாற்றப்பட முடியாதவர்களாக மாறலாம். தவறுகளை தவறென்றும், உண்மைகளை உண்மையென்றும் தெளிவுபட நெஞ்சிற்கு உரைத்து வைரமான நெஞ்சுடன் வாழ்வோரை யாதொரு சபலமும் அணுக முயல்வதில்லை.

 மண் மீது உழைப்போர் எல்லாம் வறியராம் - உரிமை
 கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்
 இதைக் கண்மீது கொண்டு அந்திக்குப் பின் - விண்மீனாய்
 கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.

 இது பாரதிதாசன் பாடலாகும். போலிகளினால் ஏமார்ந்து கிடக்கும் மக்களைப் பார்த்து வானமாமலையாகிய இறைவனின் இதயம் கொப்பளித்துக் கிடப்பதே நட்சத்திரக் கூட்டங்கள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. கதிரவன் வர கொப்பளங்களான நட்சத்திரங்கள் மறைவதைப் போல அறிவுக்கதிரவனை உதிக்கச் செய்து இந்த அவலங்களை ஒரே நொடியில் கடந்து, இயற்கை சிரிக்கும் இனிய புதிய வாழ்வைப் பெற்று மகிழுங்கள்.

 ரோஜாவின் மணம், குதித்தோடும் அருவி, குழந்தையின் சிரிப்பு, பாலின் சுவை, பழத்தின் இனிமை, உண்மைக் கலைகளின் அழகு, பேரண்டப் பெருவெளியாய் கிடக்கும் இறைவனின் பேரானந்தம், மெல்லிய பூங்காற்று என்று எண்ணற்ற நயவஞ்சகம் கலவாத பேரின்பங்கள் உலகெல்லாம் நிறைந்து சிரிக்கின்றன. அவற்றை அனுபவியுங்கள். வழிகாட்டிகள் யாரும் இல்லாமலே இவ்வுலகினை அடையாளம் காண, வேத நூல்களைப் படிக்காமலே விண்நிறைந்த இறைவனைக் காண உங்கள் கண் முன்னே இறைவன் பாதை அமைத்துள்ளான். அதைக்கண்டு அதன் வழி நடவுங்கள். களங்கத்தில் அடிபட்டுப் போகாத பெரு வாழ்வினைப் பெறுங்கள்.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >