| செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் எம்.பி. பதவி பறிபோகுமா? |
|
|
| வா.கி.குமார் | |
| 11. July 2008 07:44 | |
|
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம், 2 ம.தி.மு.க. எம்.பி.க்களின் எம்.பி. பதவிக்கு ஆபத்து வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று ம.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் செஞ்சி ராமச்சந்திரன் தெரிவித்தார். அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததால், தங்களுடைய ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், அரசுக்கு ஆதரவு தருவதாக முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளது. ஆட்சிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். ஆனால், கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனி அணியாகச் செயல்பட்டு வரும் செஞ்சி ராமச்சந்திரனும், எல். கணேசனும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். கட்சியின் பொறுப்புகளில் இருந்து மட்டும்தான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக அவர்கள் இன்னும் நீடிக்கிறார்கள். எனவே, அவர்கள் ம.தி.மு.க. எம்.பி.க்களாகத்தான் கருதப்படுகின்றனர். சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோரும் எம்.பி.க்களாக உள்ளனர். கட்சியின் கொறடாவாக கிருஷ்ணன் உள்ளார். கொறடா ஆணையை மீறினால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி பதவியை இழக்க நேரிடும் என ம.தி.மு.க. தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், மக்களவை எம்.பி.க்கள் குழு தலைவர்தான் முக்கியமானவர் என்றும், எனவே அவருடைய ஆணைதான் முதன்மையானது என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் குழுவின் தலைவராக உள்ள எல். கணேசன்தான் இதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியிருக்கும். மக்களவை கூடும் தேதி முடிவு செய்யப்பட்ட பிறகு இதுபற்றிப் பேசி முடிவெடுக்கப்படும் என செஞ்சி ராமச்சந்திரன் தெரிவித்தார். கொறடாவின் ஆணைக்குதான் எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்பதால் இந்த இருவரும்கூட, வைகோ எடுக்கும் நிலையைத்தான் ஆதரிக்க வேண்டியிருக்கும் என ம.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகின்றனர். கொறடா தன்னிச்சையாக முடிவெடுப்பாரா, மக்களவைக் குழுத் தலைவர் தெரிவிக்கும் முடிவை செயல்படுத்துவாரா அல்லது கட்சித் தலைமை சொல்கிற முடிவைச் செயல்படுத்துவாரா என்ற அடிப்படையை வைத்துதான் இந்த நடவடிக்கையும் இருக்கும் என்று அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், குழுத் தலைவர் சொல்கிற முடிவைத்தான் கொறடா செயல்படுத்த வேண்டும் என்ற வரம்பு இருக்கிறதா என்பதைப் பற்றி செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் அணியினர் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகின்றனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




