| பிரதமர் அலுவலகமா? சமரச அலுவலகமா?: மார்க்சிஸ்ட் கேள்வி |
|
|
| வா.கி.குமார் | |
| 15. July 2008 20:59 | |
|
தொழில் நிறுவனங்களுக்குள் எழும் பூசல்களுக்கு சமரசம் காணும் அலுவலகமாக பிரதமர் அலுவலகம் மாறக்கூடாது என்று கூறியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பிரதமரை திங்கள்கிழமை சந்தித்தார். இவருக்கும் இவரது தம்பி அனில் அம்பானிக்கும் இடையே பூசல் உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமது சொந்த நலனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் தொழில்நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்குள் நிலவும் உட்பூசலை தீர்க்கும் சமரச மையமாக பிரதமர் அலுவலகம் செயல்படுவதாக இருக்கக்கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாம் ஆதாயம் ஈட்டமுடியுமா என்ற வகையில் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அம்பானி சகோதரர்களின் பிரச்னையில் தலையிட்டு சமரசம் காண பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது அபாயகரமான முன்னுதாரணம் என்று பொலிட்பீரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானியின் நெருங்கிய நண்பர் அமர் சிங். அவர் அம்பானியின் சகோதரர்களுக்குள் சமரசம் ஏற்பட பிரதமர் தலையிடவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ள நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சமாஜவாதி கட்சி. புதிய கூட்டணி கட்சியான சமாஜவாதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தெரிவித்துள்ள யோசனைகள் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|








