| கட்டணச் சேனல்களை வழங்காவிட்டால் நடவடிக்கை: தனியார் டி.வி.க்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 16. July 2008 05:52 | |
|
தஞ்சையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து "விடியோ கான்பிரன்ஸ்' மூலம் தொடங்கி வைத்து அவர் பேசியது:- சில கட்டணச் சேனல்கள், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சேவைகளை வழங்க இதுவரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அவர்களிடமிருந்து சேவையைப் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 300 - க்கும் அதிகமான கட்டணச் சேனல்கள் உள்ளன. அனைத்து கட்டணச் சேனல்களையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் வழங்குவது சாத்தியமல்ல. மக்களிடம் செல்வாக்குப் பெற்ற 70 முதல் 80 சேனல்களை அளிக்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னைக்கு தனி கட்டணம்: வருமானத்தைப் பெருக்குவதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படவில்லை. நியாயமான கட்டணத்தில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 150 கட்டணமாக மக்கள் செலுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் தனித் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. எனவே மாநிலம் முழுவதும் ஒரே கட்டணமாக ரூ. 100 வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டது. சென்னையில் செட்-டாப் பாக்ஸ் இல்லாமல் சில குறிப்பிட்ட சேனல்களை மட்டும் பெறுபவர்களுக்கு ரூ. 100 கட்டணமாவும், செட்-டாப் பாக்ஸ் மூலம் இணைப்பு பெறுபவர்களுக்கு மத்திய அரசின் "டிராய்' விதிப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும். கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து சேனல்களை பெற்றுத் தருவதற்கு பல எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதில் பல எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து கணிசமான தொகையை வசூல் செய்து பெரும் லாபம் சம்பாதித்து வந்தன. இது பற்றி ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்தன. முதல்முறையாக...: எந்த மாநிலத்திலும் அரசாங்கம் கேபிள் டிவி நிறுவனத்தைத் தொடங்கவில்லை. தமிழகத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் தொடங்கும்போது சில மாதங்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. பிரச்னைகளை ஒவ்வொன்றாகக் களைந்து இந்தத் திட்டத்தை வெற்றி பெறச்செய்ய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பாரபட்சமின்றி...: அரசு கேபிள் டிவி நிறுவனம் பாரபட்சமின்றி இணைப்புகளை வழங்கும். முதல்கட்டமாக முன்பதிவு செய்த கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு இணைப்புகள் வழங்கப்படும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு விரைவில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். தற்போது இயங்கி வரும் எம்.எஸ்.ஓ. நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் கருணாநிதி. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு கட்டணச் சேனல்களை வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் டி.வி. நிறுவனங்களுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



