| கொழும்பு செயலிழக்கும் அபாயம் என எச்சரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 17. July 2008 06:31 | |
சார்க் மாநாட்டினை நடத்தி வெளிநாட்டுத் தலைவர்களை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் மக்களை துன்புறுத்துகின்றது. சார்க் மாநாட்டினால் கொழும்பு நகரமே செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சார்க் மாநாட்டினை நடத்துவதன் மூலம் நாட்டையும் மக்களையும் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்காத அரசாங்கம் மாநாட்டுக்கு 280 மில்லியன் ரூபாவினை வீணாக செலவிடுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ரவி கருணாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, சார்க் மாநாட்டினால் கொழும்பு நகரமே செயலிழக்கப் போகின்றது. பாடசாலைகள், பாதைகள் மூடப்படவுள்ளன. புகையிரத மற்றும் பஸ் போக்குவரத்து சேவையும் தடை செய்யப்படவுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக 60 வருடங்கள் குடியிருந்த 600 குடியிருப்பாளர்களை கொம்பனி வீதி கிளனி பெசேஜிலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இந்த மக்கள் எங்கு போவார்கள்? சார்க் மாநாட்டின் பெயரால் இன்று நாட்டு மக்கள் துன்புறுத்தல்களுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். வீதியோரக் கடைகள் அகற்றப்படுகின்றன. ஏன் எனக் கேள்வி கேட்டால் நகரை அழகுபடுத்துவதற்காக என அரசாங்கம் பதில் சொல்கிறது. மக்களின் பிழைப்பில் மண் போடுவதையா அழகுபடுத்துவதென்பது? இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் தங்களது ஹெலிகொப்டர்களில் இங்கு வருகிறார்கள். இந்தியப் படைகளும் வருகை தந்துள்ளன. யுத்தச் சூழ்நிலையில் இலங்கையால் பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால் தங்களது பாதுகாப்புடன் வருவதாக இந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான மாநாடு நடத்தப்பட வேண்டியது அவசியமா? அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க பணமில்லையெனக் கூறும் அரசாங்கம் எமது நாட்டுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்காத சார்க் மாநாட்டிற்கு 280 மில்லியன் ரூபாவை செலவழிக்கின்றது. சார்க் கண்காட்சியை நடத்தி நாட்டையும் மக்களையும் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஜீ. எஸ். பி. பிளஸ் வரி ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. ஜீ.எஸ். பி. பிளஸ் வரியை மீண்டும் வழங்குவதற்கு அதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லையென்றும் மனித உரிமை மீறல்கள், ஊடக அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஜீ. எஸ். பி. பிளஸ் வரி இரத்தாகும் ஆபத்து தோன்றியுள்ளது. எதிர்க்கட்சியென்ற ரீதியில் இவ்வரியை பாதுகாத்துக்கொள்ள நிபந்தனையின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். ஆனால் அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது. இதனால் பாதிக்கப்படப்போவது ஒரு இலட்சத்திற்கும் மேலான ஆடைத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் யுவதிகளுமேயாவர். மாதம் 31ஆம் திகதியுடன் வாக்காளர் இடாப்புக்களில் பெயர்களை பதியும் நடவடிக்கைகள் முடிவுறுகின்றன. எனவே மக்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதித்து வாக்குரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கோட்டே, கொலன்னாவை, நாவலை போன்ற சில இடங்களில் கிராம சேவகர்கள் பதிவதற்கான ஆவணங்களை வழங்காமல் உள்ளனர். எனவே, பொது மக்கள் இது தொடர்பில் கவனத்தை செலுத்தி பதிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இழக்க வேண்டி நேரிடும். அரச வங்கியில் கடன் பண வீக்கம் 33 வீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை வங்கியிலிருந்து மேலதிக பற்றுக்கடனாக 5400 கோடி ரூபாவை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





சார்க் மாநாட்டினை நடத்தி வெளிநாட்டுத் தலைவர்களை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் மக்களை துன்புறுத்துகின்றது. சார்க் மாநாட்டினால் கொழும்பு நகரமே செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
