| கச்சத்தீவு: மீட்கும் நேரம் வந்துவிட்டது - முதல்வர் |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 07:33 | |
|
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது: "மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இந்தப் பிரச்னை சர்வதேச பிரச்னை. இதில் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு கச்சத்தீவை அளிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. அதன்பிறகு, கச்சத் தீவில் மீன்பிடிக்கவும், அங்கு நமது மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தவும் உரிமைகள் வழங்கப்பட்டன. 1976-ல் அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருந்தபோது, கச்சத் தீவு ஒப்பந்தத்தில் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படும் விதத்தில் விதிகள் மாற்றப்பட்டன. இந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத்தரக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். இப்போது கச்சத் தீவில் நமது உரிமைகளை மீட்பதற்கான தருணம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன். தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லைக்கு அப்பால் ஒரு அங்குலம், 2 அங்குலம் என்று தள்ளிச்சென்று மீன்பிடிப்பதால் அவர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதல்ல. அவ்வாறு சென்று மீன்பிடிப்பவர்களைக் கைதுசெய்யலாம், பேச்சுவார்த்தை நடத்தி விடுதலை செய்யலாம். அவர்களைச் சுட்டுக்கொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. மீனவர்கள் கொல்லப்படும் பிரச்னையில் தீர்வு காணும் வழிமுறைகளில், தமிழர் ஒருவரை இலங்கைத் தூதராக்க வேண்டும் என்பதும் ஒன்று. ஆனால், இந்தப் பிரச்னையில் தீர்வு ஏற்பட, அதையே முழுமையான காரணமாகச் சொல்ல முடியாது' என்றார் கருணாநிதி. |
| < முந்தைய | அடுத்த > |
|---|






கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை மீட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.




