| நிவாரணம் கோரி திருமலையில் இன்று மூவின மீனவர்களும் ஆர்ப்பாட்டம் |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 16:56 | |
திருகோணமலைக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தும் படி கோரியும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக மாதம் 20,000 ரூபா பணமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இன்று வெள்ளிக்கிழமை திருமலையில் மீனவ சமூகத்தின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை நகரின் மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் பங்கு பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி, கிண்ணியா, திருமலைப் பட்டினமும் சூழலும், மூதூர் ஆகிய கரையோரப் பிரதேசங்களில் செயற்படும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ""திருமலைக் கடலில் மீன்பிடிப்பதற்கு இப்போது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மீன்கள் வலையில் அகப்படாது. எனவே, இந்த நேரத்தை காலை 4 மணிக்குக் கடலுக்குச் சென்று மாலை 7 மணிக்குக் கரைக்கு திரும்புவதாக மாற்ற வேண்டும். நேரக் கட்டுப்பாட்டால் வருமானத்தை இழந்து கஷ்டப் படும் மீனவக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 20 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான இழப்பினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களின் வீடுகளுக்கு உடனடியாக மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அது போன்றே குழாய் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கும் நீரிணைப்பு வழங்க வேண்டும். வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை காலம் தப்பிய காரணத்தினால் ஏலத்தில் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|






திருகோணமலைக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தும் படி கோரியும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக மாதம் 20,000 ரூபா பணமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இன்று வெள்ளிக்கிழமை திருமலையில் மீனவ சமூகத்தின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.




