| இலங்கையில் சிறுவர் ஆட்சேர்ப்பு: எதிரான நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் கோரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 12:22 | |
|
இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் இணைந்து செயற்படும் குழுக்கள், உட்பட உலகின் பல நாடுகளில் சிறுவர்கள் போராளிகளாக இணைக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் ஹலில்சாட் தெரிவித்துள்ளார். துணை இராணுவக் குழுவினர் 39 சிறுவர் போராளிகளை விடுவித்திருப்பதானது வரவேற்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட அவர், எனினும், தொடர்ந்தும் படையில் இருக்கும் சிறுவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் விதிகளையும் மீறியிருக்கும் 16 தரப்பினருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை சுட்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொள்வதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்கள், சிறுவர்களைப் படையில் இணைத்தல், உட்பட அனைத்து துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக சுட்டிப்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, செயற்குழுவொன்றை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பியோகப் படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்புச் சபையின் 1820 சரத்துக்கமைய விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும், ஏனைய துஸ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு ஏற்றவகையில் இந்த சரத்தை மேலும் விரிவுபடுத்தவேண்டும் எனவும் ராதிகா குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அரசற்ற தரப்பினருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- பிரசாத் காரியவசம் அரசற்ற தரப்பினர் சர்வதேச ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் சட்ட வரையறைக்கு உட்படுத்தப்படாததால், சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்ளும் அரசற்ற தரப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் படையில் இணைத்துக்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பாதுகாப்புச் சபை கவனம் செலுத்தவேண்டியது அத்தியாவசியமானது எனவும், ஏனையவிடயங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை சிறுவர்களைப் படையில் இணைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடபகுதியில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் சிறுவர்களைப் படையில் இணைப்பதற்குப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கும் பிரசாத் காரியவசம், விடுதலைப் புலிகள், பாடசாலை செல்லும் சிறுவர்களைப் பலவந்தமாகப் படையில் இணைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச ரீதியில் அமுல்படுத்தக் கூடிய சட்ட ஆவணங்களுக்குள் அரசற்ற தரப்பினர் உள்ளடக்கப்படவில்லையென்பதால், அவர்களுக்கு எதிராக கடுமையான விசாரணைகள், கடுமையான தண்டனைகள், சர்வதேச ரீதியில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். “சட்டங்களை மீறுபவர்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக பாதுகாப்புச் சபை மற்றும் செயற்குழு ஆகியன இணக்கம் கண்டிருந்தன. சுட்டிப்பான நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கியது. 1612 சரத்துக்கமைய சிறுவர்களைப் படையில் இணைப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் படையில் இணைத்தல் மற்றும் இனமோதல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் என்பவற்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டித்துள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




இலங்கையில் சிறுவர்களை படையில் ஆட்சேர்க்கும் சில குழுக்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




