| பாலமீன்மடு மனிதப் படுகுழி தொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரிக்க வேண்டும் |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 19:58 | |
|
1985 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் பல்வேறு படுகொலைகளும் மனித புதைகுழி விவகாரங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மட்டு, அம்பாறை மாவட்டங்களில் கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், கிழக்கு பல்கலைக்கழகம், புனாணை, மைலந்தனை, உடும்பன்குளம், தங்கவேலாயுதபுரம் போன்ற இடங்களில் படுகொலைகள் இடம்பெற்றன. இது தொடர்பாக அரசாங்கத்தினால் எந்தவொரு முறையான விசாரணைகளும் நடத்தப்படவில்லை. இவ்வாறு படுகொலைகள், புதைகுழி விவகாரங்களை விசாரணையின்றி மூடிமறைப்பது அரசாங்கத்தின் வழக்கமான ஒரு செயற்பாடாகும். கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் முன் சாட்சியளித்தவர்கள் படுகொலையுடன் தொடர்புள்ள உயர் இராணுவ அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு தெரிவித்த போதிலும் எவரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். தற்போதும் மனித புதைகுழி உள்ள இடம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்புதான் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் இப்படுகொலைக்கு இராணுவத்தினரும் அரசாங்கமும் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தக் காலப்பகுதியில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாவட்டத்தில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவம் மிக மோசமாக அதிகரித்து காணப்பட்டன. இவ்வாறான கடத்தல், காணாமல் போவது தொடர்பாக அரசாங்கம் நீதியான விசாரணை எதனையும் செய்யவில்லை. எனவே, இந்த மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்வந்து விசாரணைகளை நடத்த வேண்டும். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் சகல வழிகளிலும் உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு மனித புதைகுழி தொடர்பாக நீதியான விசாரணை நடத்த சர்வதேச மன்னிப்பு சபை, மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.



