| சன் டி.வி. வழக்கில் அழகிரி மகனுக்கு நோட்டீஸ் |
|
|
| வா.கி.குமார் | |
| 25. July 2008 14:21 | |
|
சன் டி.வி. நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக டேப் செய்து ஒளிபரப்புவதாக ராயல் கேபிள் விஷன் மீது "சன் டி.வி. நெட் ஒர்க்' வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மு.க. அழகிரி மகன் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இப்பிரச்னை குறித்து அட்வகேட் கமிஷனர் விசாரணை தேவை எனவும் சன் டி.வி. வலியுறுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் மேலாளர் எல். ஜோதீஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ராயல் கேபிள் விஷன் நிறுவனம் சமீபத்தில் மதுரையில் எம்.எஸ்.ஓ. சேவையைத் தொடங்கியது. இதன் உரிமையாளர் மு.க. அழகிரி. தமிழக முதல்வரின் மகன். அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் ராயல் கேபிள் விஷன் நிர்வாக இயக்குநர். இந்நிறுவனம் சன் டி.வி. நிகழ்ச்சிகளைப் பெற முறையாக அணுகவில்லை. சன் டி.வி. நிகழ்ச்சிகளை சட்ட விரோதமாக டேப் செய்து ஒளிபரப்புகின்றனர். இதற்கு கேபிள் ஏஜெண்ட்களும் துணை போகின்றனர். போலீஸில் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சன் டி.வி. நிறுவனத்துக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது'' என மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதி ஏ. குலசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சன் டி.வி. சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி கூறியது: இச்சட்ட விரோத நடவடிக்கை குறித்து ஜூன் 6-ந் தேதி முதல் காவல் துறை அதிகாரிகளுக்கு கூரியர், பதிவுத் தபால் மூலம் மனுக்கள் அனுப்பினோம். இதைப் பெற போலீஸ் அதிகாரிகள் மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இது போல் 30 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மட்டும் பெறப்பட்டுள்ளது. புகார்தாரரிடம் விசாரணை நடத்தாமலேயே புகாரில் உண்மை இல்லை எனக்கூறி முடித்து விட்டனர். அட்வகேட் கமிஷனரை நியமனம் செய்து புகாருக்கு உள்பட்ட இடங்களை ஆய்வு செய்து ஆறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும். நீதிபதி குலசேகரன்: புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய மறுத்தது ஏன்? பெறப்பட்ட ஒரு புகாரையும் உடனடியாக முடிக்கவேண்டிய காரணம் என்ன? கூடுதல் அட்வகேட் ஜெனரல் கண்ணதாசன்: புகார் கொடுத்தவர்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலிடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சில வீடுகளுக்குச் சென்று போலீஸôர் ஆய்வு செய்தனர். புகாரில் கூறியபடி சன் டி.வி. நிகழ்ச்சி எதுவும் தெரியவில்லை என்பதால் அப்புகார் முடிக்கப்பட்டது. விஜயநாராயணன்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். கண்ணதாசன்: இது உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்கு. நேரடியாக எப்படி உயர் நீதிமன்றத்துக்கு வர முடியும்? விஜயநாராயணன்: போலீஸýக்கு எதிரான வழக்கு என்பதால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சன் டி.வி. நிகழ்ச்சி டேப் செய்யவில்லை எனபது தவறு. அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து சன் டி.வி. புகாருக்கு பதிலளிக்க உள்துறை செயலாளர், டி.ஐ.ஜி., போலீஸ் கமிஷனர், ராயல் கேபிள் விஷன் நிர்வாக இயக்குநர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இரு வாரங்களில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






