| 5 வருட `யுத்த நிறுத்தம்': அடுத்தது என்ன? |
|
|
| பிறேம் | |
| 26. February 2007 03:56 | |
|
இரு தசாப்த யுத்தம், ஐந்தாண்டு யுத்த நிறுத்தம் அடுத்து என்ன என்ற கேள்விக்கு நம்பிக்கையின்மையுடன் கூடிய பதிலையளிக்கின்றனர் இராஜதந்திரிகளும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும்
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவே இராஜதந்திர வட்டாரங்களின் ஒரே நம்பிக்கையாகவுள்ளது. அதேவேளை, மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து அவர்கள் கவலை வெளியிடுகின்றனர். காயமடைந்துள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பும் கைவிடமாட்டார்கள். சர்வதேச ரீதியில் தங்களைக் குற்றவாளியாக்க விரும்பாததால் அதனைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் வெளியிடப்படுகின்றது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய சமாதானப் பேரவை ஏற்பாடு செய்த மாநாட்டிலேயே இந்த உணர்வலைகள் வெளியிடப்பட்டன. விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான காலப்பகுதி பற்றி நன்கறிந்தவர். உடன்படிக்கை அமுலான ஆரம்ப காலங்களில் அதனைக் கண்ணுற்றவர் பிரட்மன் வீரக்கோன். இந்திய - இலங்கை ஒப்பந்தம் போல யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும் சிறிது காலத்தின் பின்னர் அனைவரும் பிழைகளை கண்டுபிடிக்கத் தொடங்கி விட்டனர் என்கிறார் பிரட்மன். யுத்த நிறுத்த உடன்படிக்கை அவசர அவசரமாக ஏற்படுத்தப்பட்டது. ஏனையவர்களின் கருத்தொருமைப்பாடு பற்றி நாட்டின் தலைவரின் சம்மதம் குறித்து அவ்வேளை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவலைப்படவில்லை என தெரிவிக்கப்படுவதை மறுக்கிறார் பிரட்மன். அரசாங்கத்தை விட முதலில் விடுதலைப் புலிகளே யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்கள் என சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் அவ்வேளை ஆனையிறவு போன்ற பாரிய தளங்களை இழந்திருந்ததையும், ஜெயசிக்குறு போன்ற இராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை சந்தித்திருந்ததையும் கட்டுநாயக்க தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்ததையும் நினைவு கூர்கின்றார். மேலும், ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்த சிறுபான்மைக் கட்சிகள், தமக்குக் கிடைத்த வெற்றியை நிரந்தர சமாதானத்திற்கான ஆணையாகவே கருதின. மேலும் அவ்வேளை, அரசாங்கத்தின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க இருந்ததையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சியின் தலைவர் ஜனாதிபதி சந்திரிகா என்பதை கருத்தில் கொள்ளும் போது அவரது அங்கீகாரத்தைப் பெற முயல்வது ஒப்பந்தத்தை மேலும் தாமதமாக்கியிருக்கும் என்றும் பிரட்மன் குறிப்பிடுகின்றார். ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படும் நோர்வேயிற்கு அனுசரணைப் பணியை வழங்கியது குறித்த விமர்சனத்திற்கும் பிரட்மன் பதிலளித்தார். ஏனைய நாடுகள் எவையும் முன்வர தயாராகவில்லை. இந்தியா ஏற்கனவே தனது கையைச் சுட்டுக் கொண்டது எனக் கூறிய பிரட்மன், மேலும் இரு தரப்புகளாலும் சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நாடாக நோர்வே காணப்பட்டது என்றும் தெரிவிக்கின்றார். மேலும், யுத்த நிறுத்த உடன்படிக்கை மூலம் விடுதலைப் புலிகளுக்குப் பெருமளவு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டன. இறைமை பறிபோனது என்பதையும் நிராகரித்த பிரட்மன் வீரக்கோன், யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இரு பகுதிகளினதும் பிடியில் இருந்த நிலங்களே உடன்படிக்கையில் எல்லைகளாக அமைந்தன என்றும் குறிப்பிட்டார். யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தங்களை ஆயுத ரீதியாக பலப்படுத்தியதாக குற்றச்சாட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது சமாதான உடன்படிக்கையல்ல. மாறாக யுத்த நிறுத்த உடன்படிக்கையே எனக் குறிப்பிடும் பிரட்மன் வீரக்கோன், இரு தரப்பும் தங்களை இராணுவ ரீதியாகப் பலப்படுத்திக் கொண்டன என்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பலாபலன்களை வட, கிழக்கு மக்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை எனக் கூறப்படுவதை தான் நிராகரிப்பதாக கூறுகின்றார் பிரட்மன். உலக வங்கியை மேற்கோள் காட்டுகின்றார். அதேவேளை, சகல அரசாங்கங்களும் இதனால் பலாபலன்களை அனுபவித்தன. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு 4 பில்லியன் டொலர் கிடைத்தது. பின்னர் வந்த அரசிற்கு கடல்கோள் நிதி கிடைத்தது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பலாபலன்களை மகிந்த ராஜபக்ஷ கூட பயன்படுத்துகின்றார் என்று கூறும் பிரட்மன் காயப்பட்ட நிலையிலும் யுத்த நிறுத்த உடன்படிக்கை நகரும். இரு தரப்பும் தாங்கள் அதனை முறித்துக் கொண்டதாக வெளியுலகம் குற்றம் சாட்டுவதை விரும்பமாட்டார்கள் என்கிறார். கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. வட, கிழக்கில் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் தோன்றியுள்ள நிலை உடன்படிக்கையை ஆபத்தாக்கியுள்ளது என்கிறார். இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கியோசி அராகி , ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதையும் மனித உரிமை மீறல்களையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறாததே நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பான் இந்த முட்டுக்கட்டை நிலை குறித்து கவலை கொண்டுள்ளது. சமாதான முயற்சிகள் நோக்கிய முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே ஒரேயொரு வழிமுறை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு மூலம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டுவதாக குறிப்பிடும் அவர் வெகு விரைவில் அதனை முன்வைக்க வேண்டும் என்கிறார். இலங்கை மிக முக்கியமான தருணத்தில் உள்ளதாக குறிப்பிடுகின்றார். கனடாவின் உயர் ஸ்தானிகர் ஏஞ்சலா டொக்டன். நோர்வேயும் சர்வதேச சமூகமும் ஆற்றும் பங்களிப்பை அவர் பாராட்டுகின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் கனடா மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான துயரங்கள், சட்டத்தின் ஆட்சியின்மை போன்றவை குறித்து கவலை கொண்டுள்ளது என்கிறார் கனடா உயர்ஸ்தானிகர். இலங்கை அரசாங்கம் சமீபத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழுவை நியமித்துள்ளதை அவர் பாராட்டுகின்றார் அதேவேளை, தேசிய மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்கிறார் அவர். மேலும் தேசிய சர்வதேச அரச சார்பமற்ற அமைப்புகளுக்கு எதிரான கருத்துகள் குறித்த தனது கவலையையும் அவர் வெளியிடுகின்றார். பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவை அச்சுறுத்தலாக உள்ளன. பொது அமைப்புகள் செயற்படுவதற்கான தளம் மறுக்கப்படுகின்றது என்கிறார் அவர். அரச சார்பற்ற அமைப்புகள் மீதான நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கனடாவும் கேட்டுக் கொள்கின்றது. உண்மையான அர்ப்பணிப்பு இருந்தால் சமாதானம் சாத்தியம் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுகிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கை செயலற்றுப் போயுள்ளமை குறித்து அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்கிறார் அதன் உயர்ஸ்தானிகள் டாக்டர் கிரேய்க் பிரெஞ். சமீபத்தில் வெளிவிவகார அமைச்சர் பவுணர் விடுத்த அறிக்கையை அவர் சுட்டிக் காட்டுகின்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவு தருகின்றது எனக் குறிப்பிடும் அவர் அதேவேளை, இராணுவத் தீர்வை, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசைக் கேட்பதாகக் குறிப்பிடுகின்றார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வெகு விரைவில் தீர்வு திட்டமொன்றை முன்வைக்கும் என்ற நம்பிக்கையையும் அவுஸ்திரேலியா வெளியிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட 11 மில்லியன் டொலர் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, அவுஸ்திரெலியா தனது செயற்பாடுகளை அரச சார்பற்ற அமைப்புகள் ஊடாகவே முன்னெடுக்கின்றது என்றும் கிரேக் பிரெஞ் குறிப்பிடுகின்றார். தற்போதைய நிலை குறிப்பாக மனித உரிமை நிலைவரம் குறித்து அவர் கவலை வெளியிடுகின்றார். இராணுவ நடவடிக்கைகள் மேலும் துயரத்தினையே அதிகரிக்கும் என்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது மாத்திரம் காணப்படுவதே தற்போதைய பிரச்சினை, அது சமாதான உடன்படிக்கையோ அல்லது இறுதித் தீர்வோ அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றார் தேசிய சமாதானப் பேரவையின் கலாநிதி ஜெகான் பெரேரா. கடந்த ஐந்து ஆண்டுகளில் சமாதான உடன்படிக்கையோ அரசியல் தீர்வோ ஏற்படாதது மிகப் பெரிய பாதக தன்மை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். யுத்த நிறுத்த உடன் படிக்கை கடும் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளது. அதனை வலுப்படுத்துவதற்குப் பதில் போருக்கான முனைப்பே அதிகம் காணப்படுகின்றது. பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு மாத்திரமேயுள்ளது. இதனை வைத்துக் கொண்டு தான் தொடர வேண்டியுள்ளது மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக மாத்திரமே சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் 15 வழக்குகள் மாத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 650 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 140 பேர் மாத்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது தெரியாது, கிழக்கில் வாகரையிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. நாங்கள் செய்த தவறு மக்களுக்கு சரியான இடத்தைக் கொடுக்காமல் அரசியல் வாதிகளின் கையில் கொடுத்ததுதான். என தனது கருத்தை முன்வைத்தார் மகளிர் அபிவிருத்தி அமைப்பின் சரோஜா சிவச்சந்திரன். கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






