20. November 2008 17:06
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
29. September 2008 22:52
21. August 2008 23:30
11. October 2008 23:48
27. August 2008 15:01
விமான நிலைய விரிவாக்க திட்டம் நிறைவேற்றப்படும் தடைகள் வந்தால் முறியடிப்போம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
31. July 2008 07:20

karunanidhi-3.jpgசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தடை வராது. தடை வந்தால் இடறி எறியப்படும்'' என்று முதல்அமைச்சர் கருணாநிதி உறுதியாக தெரிவித்தார்.

சென்னை கடற்கரையில் உள்ள டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு புதிதாக கூடுதல் கட்டிடம் ஒன்று கட்ட அரசு ரூ.26.4 கோடி ஒதுக்கியுள்ளது.

திறப்பு விழா

டி.ஜி.பி. அலுவலகம் அருகே மாநில தடயஅறிவியல் துறைக்கு ரூ.6.82 கோடி செலவில் 4 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், டி.ஜி.பி. அலுவலகத்தின் கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று காலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு தடயஅறிவியல் துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதோடு, டி.ஜி.பி. அலுவலகத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டையும் திறந்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

போலீசாரின் கெட்டிக்காரத்தனம்

சிறிது நேரம் வந்து திறப்பு விழாவை மாத்திரம் நடத்திவிட்டு போனால் போதும் என்று ஒரு செய்தியைச் சொல்லி, என்னை இந்த விழாவிற்கு அழைத்து, விழா நிகழ்ச்சியையே ஏற்பாடு செய்த காவல் துறை அதிகாரிகளின் கெட்டிக்காரத்தனத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

போலீசார் எப்போதும் "இப்படித்தான்'' அழைப்பார்கள். பாளையங்கோட்டைக்குக் கூட என்னை இப்படித் தான் அழைத்தார்கள். முரசொலி அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த என்னை வழியிலே மறைத்து கொஞ்சம் வாருங்கள் என்று ஒரு அதிகாரி அழைத்தார்.

எங்கே என்றேன். கமிஷனர் ஆபீஸ் வரை வந்துவிட்டுப் போனால் போதுமென்றார்கள். உடனே திரும்பி விடலாமா என்றேன். நிச்சயம் திரும்பலாம் என்றார்கள். நம்பிச் சென்றேன். ஆனால், அங்கிருந்து என்னை பாளையங்கோட்டைக்கே கொண்டு போய் ஏறத்தாழ அறுபது நாட்கள் அடைத்து வைத்தார்கள்.

இது தமிழகத்திலே மொழிப் புரட்சி நடைபெற்ற காலக் கட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஆகும்.

எழில் குலுங்கும் இடம்

இந்த இடத்திற்கு வருவதே எனக்கொரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்ற நிகழ்வாகும். ஏனென்றால், 1989-90-ம் ஆண்டு வாக்கில் இங்கேயுள்ள ஐ.ஜி. ஆபீசை அடியோடு இடித்துவிட்டு, கடந்த ஆட்சியில் வேறு ஒரு கட்டிடத்தை அங்கே கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தான் முன்னாள் ஐ.ஜி.யாக இருந்த எப்.வி.அருள் பத்திரிகையிலே ஒரு அறிக்கை விடுத்தார்.

உலகத்தில் எங்கேயும், இப்படி கடற்கரையோரத்தில் காவல் துறைக்கென ஓர் இடம் கிடையாது, கடற்காற்று வீசுகின்ற - கடல் அலைகள் தாலாட்டுகின்ற எழில் குலுங்குகின்ற ஓரிடம் சென்னை மாநகரத்திலே தான் இருக்கிறது, அதை இடிப்பதாக வந்த தகவல் உள்ளபடியே எங்களையெல்லாம் வருந்தச் செய்கிறது என்று அருள் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.

நீதிமன்றத்தில் முறையீடு

அப்போது தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான், அதைப் படித்துப் பார்த்துவிட்டு சட்டசபையிலேயே சொன்னேன், அந்த இடம் இடிக்கப்பட மாட்டாது, அது புதுப்பிக்கப்பட்டு, ஏற்கனவே இருக்கிற ஐ.ஜி. ஆபீசாகவே அது இயங்கும் என்று அப்போதே சொன்னேன்.

சொன்னபடி அந்த ஐ.ஜி. அலுவலகத்தை அரசே வைத்துக் கொள்வது, அதை இடிப்பதல்ல என்ற முடிவுக்கு வந்தாலும்கூட, அதற்கு முன்பே அதை இடிப்பதற்கு ஒப்பந்தம் எல்லாம் பேசி முன் தொகையெல்லாம் கொடுத்துவிட்டவர்கள், நாங்கள் இடித்தே தீருவோம் என்று கடைப்பாறையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

நீதிமன்றத்திற்குச் சென்று அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, அய்யா, இது பழமையான இடம், அது மாத்திரமல்ல, காவல் துறையிலே இந்தியாவிலே இருக்கின்ற மக்கள், இந்தக் கடற்கரைக்கு வரும்போதெல்லாம், அவர்களின் கவனத்தைக் கவருகின்ற இடம்.

முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பெரிதும் போற்றிப் பாதுகாத்துப் பாராட்டப்பட்ட இடம், இதை இடிக்கக் கூடாதென்று கேட்டு, நீதிமன்றம் நமது முறையீட்டையேற்றுக் கொண்டு அந்த ஒப்பந்தக்காரர் கடைசியாக உள்ளம் உருகி, நமக்கு விட்டுத் தந்து, அதற்குப் பிறகு கொஞ்சம் செலவு செய்து இந்த அருமையான, பழமை வாய்ந்த ஐ.ஜி. அலுவலகத்தைப் புதுப்பித்திருக்கின்றோம்.

ஆக காவல் துறை தலைமை அலுவலகமான ஐ.ஜி. அலுவலகத்தை இடித்த முயற்சியை தடை செய்து, 1996-ம் ஆண்டிலேயே ரூ.1 கோடியே 35 லட்சம் செலவிட்டு அதனைப் புதுப்பித்திருக்கிறோம்.

இப்போது இந்தக் கட்டிடத்தைப் பார்த்தால் வெளியிலிருந்து வருகின்ற சில நண்பர்கள் கொஞ்சம் கற்பனை வாய்ந்தவர்கள் சொன்னார்கள். இங்கே ஒரு தாஜ்மகாலையே எழுப்பியிருக்கிறீர்கள் என்று கவிதா நயத்தோடு சொன்னார்கள். அந்த அளவிற்கு அழகாக, எழில் வாய்ந்த ஒரு கட்டிடமாக நம்முடைய ஐ.ஜி. அலுவலகம் இங்கே மாற்றப்பட்டு, இன்றையதினம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

தோட்டக்கலைக்கு சொந்தமான இடம்

இப்படி தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகரத்தில் மக்களைக் கவருகின்ற கட்டிடங்கள், தோட்டங்கள், நந்தவனங்கள், கடற்கரை சீர்திருத்தங்கள் இவைகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இதே சென்னையிலே தான் தோட்டக்கலைக்குச் சொந்தமான இடம் 320 கிரவுண்ட் இடத்தை தனிப்பட்ட ஒருவர் 30 ஆண்டு காலமாக அனுபவித்து வந்ததை, நாம் பெரிய விடுதலைப் போராட்டம் நடத்தி, நீதி வென்று, இப்போது அரசு அந்த இடத்தை மீட்டிருக்கிறது. அந்தத் தோட்டக்கலைக்குச் சொந்தமான இடம் இப்போது தோட்டக்கலையே அரசுக்கு சொந்தம் தான். அதிலே சில பேர் சொந்தம் கொண்டாடுவது தவறு என்று அதை நாம் மீட்டிருக்கிறோம்.

இதேபோல, மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டு புழலுக்குச் சென்று, அந்த இடத்தை அரசின் பொது மருத்துவமனை வளர்ச்சித் திட்டத்திற்கு எடுத்துக் கொண்டு -பெரிய மருத்துவமனையாக அதனுடைய கிளையாக -மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் அமைக்கவிருக்கிறோம்.

4 ஆயிரம் விளம்பர பலகைகள்

இவைகள் மாத்திரமல்ல, நம்மை எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சில சிறிய விஷயங்களுக்காகவாவது பாராட்டுவார்களா என்றால் இல்லை. நான் அதை விரும்பவும் இல்லை.

இந்தியாவிலே டெல்லிக்குச் சென்றால், பம்பாய்க்குச் சென்றால், பெங்களூருக்குச் சென்றால் காற்றோட்டமான அகலமான வீதிகள், அழகான சாலைகள் ஆகியவற்றை பார்க்கிறோம். ஆனால், சென்னையில் கடந்த ஆண்டு வரையில், தி.மு.க. ஆட்சி மீண்டும் ஐந்தாவது முறையாக இப்போது மலர்ந்த ஆண்டு வரையில் ஏறத்தாழ 4 ஆயிரம் விளம்பரப் பலகைகள் சென்னை மாநகரத்திலே பல பகுதிகளை வளைத்துக் கொண்டு, காற்று வராமல், ஒருவரையொருவர் பார்க்கவும் முடியாமல், மரங்கள் அடர்ந்த இந்த சென்னை மாநகரத்தில் ஒரு புழுக்கமான சூழ்நிலை, போக்குவரத்துக்குப் பாதகமான ஒரு சூழ்நிலை உருவாகியிருந்ததை உச்ச நீதிமன்றத்திலே வாதாடி, போராடி, கடைசி வரையிலே விடாமல் உச்ச நீதிமன்றத்திலே வழக்காடி அதையும் வென்று -இன்றைக்கு விளம்பரப் பலகைகள் இல்லாத, இருந்தாலும் நம்முடைய விழியை மறைக்காத அளவிற்கு சென்னை மாநகரத்தை மாற்றியிருக்கிறோம்.

எதையும் பாராட்ட வேண்டாம், இதையாவது பாராட்ட வேண்டாமா என்று சில நேரங்களில் நான் அங்கலாய்ப்பதுண்டு. இதை நல்ல மனம் படைத்த பல பெரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே சென்னை மாநகரத்தில் தான் நம்முடைய புதிய சட்டமன்ற புதிய வளாகம் மற்றும் தலைமைச் செயலகத்தை விரைவிலே கட்டி முடிக்கவிருக்கிறோம்.

புதிய கமிஷனர் அலுவலகம்

மாநில நூலகம் - வெளிநாடுகளில் இருப்பதைப் போல, மலேசியாவில், சிங்கப்பூரிலே இருப்பதைப் போல பிரமாண்டமான ஒரு நூலகத்தை மாநில அளவிலே இங்கே அமைக்கவிருக்கிறோம்.

மெட்ரோ ரெயில் வரவிருக்கிறது. அடையாறு பூங்கா ரூ.100 கோடியில் அமைந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட போக்குவரத்துக்கு வசதியான மேம்பாலங்களைத் தவிர புதிய மேம்பாலங்களும் இப்போது கட்டப்பட்டு, திட்டமிட்ட மேம்பாலங்களில் 3 பாலங்கள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. மெரினா கடற்கரையை அழகுபடுத்துகின்ற திட்டம் விரைந்து முடிக்கப்படும்.

விமானநிலைய விரிவாக்கம்

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நேற்று மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கி அறிவித்திருப்பதை நீங்களும் அறிவீர்கள். அதற்கொன்றும் தடை வராது. தடை வந்தாலும் அது இடறி எறியப்படும்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதிய கட்டிடத்திலே அமையவிருக்கின்றது. இவைகள் எல்லாம் சென்னை மாநகருக்கு இன்னும் இரண்டாண்டு காலத்திலே புதிய அழகை, புதிய ஏற்றத்தை, புதிய பெருமையை உண்டாக்கக் கூடியவை என்பதைச் சொல்லி -சென்னைக்கு மாத்திரமா என்றால், சென்னையிலே பேசுகின்ற காரணத்தால் சென்னைக்கு வரவிருக்கின்ற ஒருசில சிறப்புகளை மட்டும் சொன்னேன். சென்னையைச் சுற்றியிருக்கின்ற நகரங்கள், கிராமங்கள் ஏன் தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் ஏற்றமிகு காரியங்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அவைகள் அனைத்தும் விரைவில் நடந்து முடியவிருக்கின்றன.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

 

 
< முந்தைய   அடுத்த >