| தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வற்புறுத்தல் |
|
|
| வா.கி.குமார் | |
| 2. August 2008 11:58 | |
|
`சார்க்' மாநாடு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 2 நாள் உச்சி மாநாடு கொழும்பு நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இது சார்க் அமைப்பின் 15-வது மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பிராந்திய ஒத்துழைப்பு, அபிவிருத்தி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து கொழும்பு நகருக்கு சென்றார். அவருடன் அதிகாரிகள் அடங்கிய குழுவும் சென்று உள்ளது. பிற்பகல் கொழும்பு நகருக்கு அருகே உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் போய்ச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே, வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகாமா மற்றும் முப்படை அதிகாரிகள், இலங்கையில் உள்ள இந்திய அதிகாரிகள் விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்றனர். விமான நிலையத்தில் மன்மோகன் சிங்குக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் அங்கிருந்து கொழும்பு நகருக்கு புறப்பட்டு சென்றார். ராஜபக்சேவுடன் சந்திப்பு அங்கு மாலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேசினார்கள். இலங்கை அதிபரின் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முதலில், வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, சார்க் மாநாட்டில் இன்று நடைபெறும் விவாதத்தின் போது முன் வைக்க வேண்டிய தீவிரவாதம், விலைவாசி உயர்வு, வர்த்தக கட்டுப்பாடுகள், உணவு பாதுகாப்பு கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். தடுத்து நிறுத்த கோரிக்கை பின்னர் ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தனியாக சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அப்போது, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையின்படி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்தினார். கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவர் கேட்டுக் கொண்டார். எல்லை தெரியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர்த்து அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இரு நாட்டு கடற்படைகளின் கூட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ராஜபக்சேவிடம் அவர் வலியுறுத்தினார். இலங்கை அதிபர் உறுதி இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விரைவில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அறிக்கை முன்னதாக டெல்லியில் இருந்து கொழும்பு புறப்படும் முன் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சார்க் நாடுகள் எதிர் கொண்டுள்ள சவால்கள் பற்றியும், அவற்றை சமாளிக்க சார்க் நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே சார்க் நாடுகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த இந்த 15-வது மாநாட்டில் உத்வேகம் அளிக்கப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





கொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
