|
இந்திய- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்: இரு நாட்டுத் தலைவர்கள் |
|
|
|
வா.கி.குமார்
|
|
3. August 2008 11:45 |
|
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாகத் தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மீண்டும் ஏற்பட்டுள்ளன.
இதன் ஒரு அங்கமாக சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வந்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சார்க் மாநாட்டில் கலந்துரையாடப்படவிருக்கும் விடயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பது தொடர்பாக இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கள் தொடர்பாகச் சுட்டிக்காட்டி தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், இந்தத் தாக்குதல்களால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகவும் இந்தியா கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்தக் குண்டுத் தாக்குதல்களுடன் பாகிஸ்தான் தரப்பினரே தொடர்புபட்டிருப்பதாக இந்தியா மீண்டும் குற்றஞ்சாட்டியிருந்தது. எனினும், இதனைப் பாகிஸ்தான் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில்; தாக்குதல்கள் இடம்பெற்றாலும் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்பதே அவசியமாகவுள்ளதாக இரண்டு நாட்டு பிரதமர்களும் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப்பிக்கப்பட வேண்டுமென சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.
மேலும் காப+லிலுள்ள இந்தியத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட மேனன், இந்த விசாரணை தொடர்பில் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய்யுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.
இந்தியப் பிரதமர் தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளதாகவும், சுமுகமான நிலைமைக்கு கொண்டு வருவது குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|