| கருணாநிதி, டி.ஆர். பாலுவுக்கு கைது வாரண்ட்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை |
|
|
| வா.கி.குமார் | |
| 5. August 2008 19:39 | |
|
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தமிழகத்தில் பந்த் நடந்தது. தமிழக அரசே இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதிலும் பந்த் நடத்தப்பட்டது. தடையை மீறி பந்த் நடத்தியதற்காக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்தார். இதுபற்றி விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் இவ்வழக்கை திங்கள்கிழமை விசாரித்தனர். "விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இதற்காக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்போம்' என்று எச்சரித்தனர். எனினும் நோட்டீசுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும் மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தனர். நோட்டீசுக்கு இதுவரை பதில் அளிக்காதது ஏன்? என்று அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா முதல்வர்? "மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் தராமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதுதான் உங்கள் போக்கு என்றால் முதல்வரும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகட்டும். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நாங்கள் வாரண்ட் பிறப்பிக்கிறோம். இதுபோன்ற சம்பவம் நீதிமன்றத்தில் நடக்க வேண்டுமா? இது வெறுக்கத்தக்கச் செயல்' என்று நீதிபதிகள் கூறினர். கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, "தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்வோம்' என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது என்பது நினைவுகூரத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




சேது சமுத்திர பந்த் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
