| முஷரப்பை பதவி நீக்க தீர்மானம் |
|
|
| வா.கி.குமார் | |
| 8. August 2008 06:55 | |
|
சர்தாரிக்கு நெருக்கடி பாகிஸ்தானில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிபர் முஷரப் ஆதரவு கட்சிகள் படுதோல்வியடைந்தன. அதேசமயம், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றின. இந்த இரண்டு கட்சிகளும், தேசிய அவாமி லீக், இன்னும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டு ஆட்சி அமைத்தன. இந்த நிலையில், முஷரப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஆளும் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும் பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரிக்கு நெருக்கடி அளித்து வந்தன. பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஆளும் கூட்டணி கட்சிகள் இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இதில் கூட்டணி தலைவர்களிடையே நேற்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதன்பின்னர் ஆசிப் அலி சர்தாரியும், நவாஸ் ஷெரீப்பும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது இருவரும் கூறியதாவது:- தனது கொள்கைகள், நடவடிக்கைகள் மூலமாக நாட்டின் மீதான நம்பிக்கையை முஷரப் தகர்த்து விட்டார். அவரால் நாட்டின் பொருளாதாரமும் சீரழிந்து போனது. எனவே முஷரப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதே சிறந்தது என்று ஆளும் கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுப்போம். இதன்பின் முஷரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அத்தனை நீதிபதிகளும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இது ஜனநாயகத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள். நவாஸ் ஷெரீப் கூறுகையில், `முஷரப்பை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்' என்றார் 11-ந் தேதி தீர்மானம் கூட்டணி கட்சித்தலைவர் ஒருவர் கூறுகையில் `முஷரப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும். இதற்காக வருகிற 11-ந்தேதி பாராளுமன்றம் கூட்டப்படுகிறது' என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் இந்த முடிவால், பாகிஸ்தான் அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பும், நிச்சயமற்ற தன்மையும் உருவாகியுள்ளது. டிஸ்மிஸ் செய்வாரா? பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவை முஷரப் இழந்து விட்டாலும், அதிபர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்பதில் முஷரப் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான், பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் கொண்டு வரும் பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்கொள்வதை விட பதவியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று முன்பு கூறிவந்த முஷரப் பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டார். தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்கக்கூட அவர் தயங்கமாட்டார் என்று கருதப்படுகிறது. மீண்டும் ரத்து இந்த நிலையில், முஷரப் நேற்று காலை சீன ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பீஜிங் செல்ல தயாராக இருந்தார். ஆனால் ஆளும் கூட்டணிக்கட்சிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து மீண்டும் அவர் தனது சீன பயணத்தை ஒத்தி வைத்தார். அதேசமயம் பிரதமர் கிலானி, சீனாவிற்கு சென்று பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே மீண்டும் முஷரப் தனது பயணத்தை ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஆளும் கூட்டணிக்கட்சிகள் தன் மீது கொண்டு வர இருக்கும் பதவி நீக்க தீர்மானம் குறித்து இதுவரை முஷரப் வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது கூட்டணிக் கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்துள்ளன. ராணுவ தளபதிகள் ஆலோசனை இதனிடையே, நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் ராவல்பிண்டி நகரில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். `இது வழக்கமான ஒரு சந்திப்புதான். இந்த கூட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறும். அப்போது, ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து விவாதிக்கப்படும்' என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருக்கும் அஸ்பாக் கயானி, அதிபர் முஷரப்பால் பதவி நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் வருகிற 11-ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.
