| பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு புதிய நெருக்கடி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. August 2008 14:39 | |
|
நாடாளுமன்றத்தில் முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதோடு குற்றங்களுக்காக கைது செய்யப்படக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் தூதர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பர்வேஷ் முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அவரை கைது செய்யக்கூடாதென்பதுடன் அவர் சுதந்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டுமெனவும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் தூதர்கள கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் முஷாரப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் தனது கூட்டணிக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப் தீவிரமாக உள்ளாரெனவும் இதனால் முஷாரப் சுலபமாக தப்பித்துக் கொள்ளமுடியாதெனவும் முஷாரபை காப்பாற்ற தான் முயன்றால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக்கூட நவாஸ் ஷெரீப் தயங்கமாட்டாரெனவும் ஆசிப் அலி சர்தாரி தூதர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் தானாகவே பதவி விலகினால் அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லமுடியுமெனவும் அவ்வாறு இல்லாவிடின் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்படுமெனவும்; சர்தாரி கூறியுள்ளார். இதற்கிடையில் முஷாரபை காப்பாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென சர்தாரி மூலமாக நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க முஷாரபுக்கு துணை நிற்பதற்கு இராணுவம் மறுத்துவிட்டதாகத் தெரியவருகிறது. இந்த விடயத்தில் இராணுவம் நடுநிலை வகிக்குமெனவும் முஷாரப் பதவி விலகுவதே நல்லதெனவும் அவரிடம் இராணுவத் தலைமை தெரிவித்துள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரப் தானாக பதவி விலகாவிட்டால் அவர் சுதந்திரமாக வெளிநாடுசெல்வது தடுக்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
