| ஒகேனக்கல்: பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தல் |
|
|
| வா.கி.குமார் | |
| 13. August 2008 10:16 | |
|
ஒகேனக்கல் பிரச்னை உள்பட அண்டை மாநிலங்களுடனான பிரச்னைகளுக்குத் தீர்வு காண முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக திட்ட ஒதுக்கீட்டுக்காக செவ்வாய்க்கிழமை தில்லி சென்ற எடியூரப்பா, அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது இத் தகவலை கூறினார். ஒகேனக்கல் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும். கூட்டு சர்வே நடத்துவதற்கு முன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன் என்றார் அவர். இதுதொடர்பாக கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் பசவராஜ் பொம்மை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அவ்வப்போது தொடர்பு கொண்டு வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையிலிருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் கிருஷ்ணா ஆற்றில் நீரை திறந்துவிடுவதால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்தும் முறையிடப்பட்டுள்ளது என்றார் அவர். இதுபோன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்னைகளுக்குத் தீர்வு காண அண்டை மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தி உள்ளேன் என்றார் எடியூரப்பா. மேலும் காவிரி படுகையில் பாசனத் திட்டங்களை மேற்கொள்ள எந்த நிபந்தனையும் இல்லாமல் நிதி ஒதுக்குமாறு திட்டக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானாலும் காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதியை பெற வேண்டியுள்ளது என்றார் அவர். ஒகேனக்கல் திட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படும். இத் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியோ அல்லது கர்நாடக அரசின் அனுமதியோ பெறத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி அண்மையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





