| பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 14. August 2008 06:40 | |
|
அமெரிக்கா வலியுறுத்தல் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பழங்குடிஇன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் தான் வெளிநாட்டு தீவிரவாதிகள் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். இதனால் அவர்களை ஒடுக்கும்படி அமெரிக்கா அடிக்கடி பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்காமல் காலம் கழித்து வந்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராணுவம் அங்கு இருந்தபடி ஏவுகணைகளை வீசி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தளபதியும், வெடிஉயிரியல் ஆயுத நிபுணருமான அபு சயீத் அல் மஸ்ரி கொல்லப்பட்டார். 4 ஏவுகணைகள் வீசப்பட்டன நேற்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் பாகர் என்ற இடத்தில் உள்ள முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த முகாமை ஹிஸ்ப் இ இஸ்லாமி என்ற அமைப்பு நடத்தி வந்தது. இந்த தாக்குதல் நடந்தபோது அந்த முகாமில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் இருந்தனர். செவ்வாய்க் கிழமை இரவு மொத்தம் 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவை தீவிரவாதிகளின் முகாம் மீது விழுந்தன. இதில் அந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 8 உடல்கள் கைப்பற்றப்பட்டன என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் தலைவர் சுட்டுக்கொலை வேறொரு சம்பவத்தில், தீவிரவாதிகள் தலைவர் ஹாஜி நம்தார் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொலை செய்வதற்கு கடந்த மே மாதம் நடந்த தற்கொலை தாக்குதலில் அவர் தப்பித்தார். அவர் நேற்று தன் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூட்டத்தில் இருந்த 3 பேர் எழுந்து நின்றனர். அவர்களில் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். கொலைகாரர் பிடிபட்டார். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். நம்தார் தலீபான் தீவிரவாதிகளிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் அடைந்த தலீபான் தீவிரவாதிகள் அவரை கொன்று இருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பலியானார்கள்.
