| அரசு ஊழியருக்கு சலுகை;பணியாளருக்கு காலமுறை ஊதியம்: கருணாநிதிக்கு கி.வீரமணி பாராட்டு |
|
|
| வா.கி.குமார் | |
| 16. August 2008 19:36 | |
|
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 30 ஆண்டு கோரிக்கை அரசு ஊழியர் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், சமையல் உதவியாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் மனம்குளிரும் வகையில் காலமுறை ஊதிய அறிவிப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி சுதந்திர தினவிழா உரையில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சத்துணவு பணியாளர்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. இதற்காக ரூ.200 கோடி கூடுதல் செலவு என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடித்தட்டு மக்களை கைதூக்கி மேலே ஏற்றிடும் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சமுதாயப் பணி என்றும் பேசப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப புதிய ஊதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களைப் போன்று தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் ஆணை வெளியிடப்படும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சத்துணவு ஊழியர்கள் சத்துணவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும், ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சத்துணவு பணியாளர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் நல சங்கத்தைச் சேர்ந்த கோ.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது, 2 லட்சத்து 21 ஆயிரம் சத்துணவு பணியாளர்கள் நினைத்துக்கூட பார்க்காத வகையில் அனைவருக்கும் ஓய்வூதியம் அண்ணா பிறந்த நாள் (செப்டம்பர் 15) முதல் வழங்கப்படும் என்றும், பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு 10 ஆண்டுகள் என கணக்கிட்டும் அறிவித்தார். ஏழையின் சிரிப்பில் சத்துணவு பணியாளர்கள் ஓய்வுபெறும்போது மனநிறைவுடன் இருக்க வழி வகுதிட்ட ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகின்றோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் சொ.சகாதேவன், பொதுச்செயலாளர் சா.அன்பழகன், பொருளாளர் எம்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் ஊதிய உயர்வு வழங்கும் வகையில் ஆணை வெளியிடப்படும் என்ற முதல்-அமைச்சர் கருணாநிதியின் சுதந்திரதின அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், `` மத்திய அரசின் அறிவிப்புகள், தமிழக அரசு ஊழியர்களின் காதுகளுக்கு எட்டுமுன்னரே, யாரும் கோரிக்கை வைக்காமலேயே 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கு மனநிறைவளிக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் இங்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்ததன் மூலம், ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சமுதாயத்தின் மீது என்றென்றும் மாறாத அன்பும், பற்றும் கொண்டவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பெற்ற தாயினும் மேலான பரிவும், பாசமும் கொண்ட தமிழக முதல்-அமைச்சருக்கு ஒட்டுமொத்த அரசு ஊழியர், ஆசிரியர் சார்பாகவும், தலைமைச் செயக ஊழியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி''. ``மேலும், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் வாழ்வில் கலங்கரை விளக்காக திகழும் தமிழக முதல்-அமைச்சர், அப்பணியாளர்களுக்கு தனியாக ஒரு காலமுறை ஊதிய விகிதமும், சிறப்பு ஊதிய விகிதமும் அளித்த முதல்-அமைச்சருக்கு மீண்டும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது. அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் சு.ஈஸ்வரன் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





அரசு ஊழியர்களுக்கு சலுகை மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் அறிவித்துள்ளதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
