| திண்டிவனம் அருகே கலவரம்; போலீஸ் துப்பாக்கிசூடு தடியடியில் 8 பேர் காயம் |
|
|
| வா.கி.குமார் | |
| 17. August 2008 09:18 | |
|
திண்டிவனத்தை அடுத்த மயிலம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது கலவரம் மூண்டது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் பயன்அளிக்காததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிறுவன்மீது குண்டு பாய்ந்தது. வாய்க்கால் தூர்வாரும் பணி விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ரெட்டணை கிராமம் உள்ளது. ரெட்டணை ஊராட்சி தலைவராக இருப்பவர் கலைச்செல்வன். ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ரூ.80 கூலி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் ரூ.65 வழங்கி வந்ததாகவும், தற்போது ரூ.40 தருவதாகவும் அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. சாலை மறியல் இதனால் ஆத்திரம் அடைந்த ரெட்டணை கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதைக் கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் விரைந்து வந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனது வீட்டுக்கு வரும்படி கிராமமக்களை அழைத்தார். ஆனால் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு நேற்று காலை 10.30 மணி அளவில் ரெட்டணை மேம்பாலத்தில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்தனர் இது பற்றிய தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் கல்யாணமும், போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இதனைஅடுத்து விழுப்புரத்தில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகளும், போலீசாரும் சாலை மறியலை கைவிடும்படி கிராம மக்களை கேட்டுக்கொண்டனர். ஆனால் மறியலை கைவிட கிராம மக்கள் மறுத்து தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் ராமலிங்கத்தை போலீசார் சட்டையை பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் போலீசாரிடம் தட்டிக்கேட்டார். துப்பாக்கி சூடு இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மூண்டது. இதை அடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். ஆனாலும் கிராம மக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் கிராம மக்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். 8 பேர் காயம் போலீசார் தடியடி நடத்தியதில் ரெட்டணை ஊராட்சி தலைவர் கலைச்செல்வன், அவருடைய தம்பி தமிழ் செல்வன், சேகர், ஜெயபிரதா, ஏழுமலை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடைபெறும் போது அந்த வழியாக வந்த மூர்த்தி (15) என்ற சிறுவனின் தோள் பட்டையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் குவிப்பு துப்பாக்கி சூடு நடந்த ரெட்டணை கிராமத்துக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் ரெட்டணை கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமதாஸ் அறிக்கை இந்த சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையினரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்களுக்கு அரசு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும். அத்துடன் நடந்த வேண்டா நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்ற கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு சட்டப்படியான சம்பளம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். இதை மீறுகின்ற அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில், டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




