|
பர்வேஷ் முஷாரப்புக்காக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் இராணுவத் தளபதி |
|
|
|
வா.கி.குமார்
|
|
17. August 2008 18:31 |
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் விவகாரம் தொடர்பாக அவருக்கும் ஆளும் கூட்டணிக்கும் இடையே பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பர்வேஷ் முஷாரப்பை பதவியிலிருந்து விரட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே முஷாரப் பதவி விலக வேண்டுமென்று கோரி பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை ஆளும் கூட்டணி தாக்கல் செய்யவுள்ளது.
இதற்குள் முஷாரப் பதவி விலக வேண்டுமென ஆளும் கூட்டணி எச்சரித்துள்ள போதிலும் பர்வேஷ் முஷாரப் தனது முடிவில் இன்னமும் பிடிவாதமாகவுள்ளார் என பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்போ அல்லது அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளாகவோ முஷாரப் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் பாரிய சிக்கல் ஏற்படுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை பர்வேஷ் முஷாரப் 72 மணி நேரத்திற்குள் பதவி விலகி விடுவாரென பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பர்வேஷ் முஷாரப் பதவி விலகுவது தொடர்பாக இராணுவத் தளபதி கயானியின் உதவியையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒருவேளை முஷாரப் பதவி விலக மறுத்தால், இராணுவத் தளபதியை அணுகும் நிலையேற்படுமெனவும். அவர் மூலம் அரசியல் குழப்பத்திற்குத் தீர்வு காண முயற்சிக்கலாமெனவும் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதிக்குரிய அந்தஸ்து, பலன்கள், சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய ஒப்பந்தத்தை தவிர, வேறு எதற்கும் உடன்பட மாட்டேனென்று முஷாரப் கூறி வருவதுடன் தன் மீதான வழக்கு, தண்டனை போன்றவற்றை ஏற்க முடியாதெனவும் முஷாரப் கூறி வருவதாக தெரியவருகிறது.
இதற்கிடையில் பர்வேஷ் முஷாரப் பதவி விலக வேண்டுமென்பதுடன் அவர் விரும்பும் நாட்டுக்குப் போவதற்கு அனுமதியளிக்கப்படுமெனவும் ஆளும் கூட்டணி வற்புறுத்தி வருகின்றது.
|